பஹ்ரைன் உதைபந்தாட்ட வீரரை தாய்லாந்திலிருந்து பஹ்ரைனுக்கு நாடுகடத்த வேண்டும் என்ற நிபந்தனையினை தாய்லாந்து கைவிட்டுள்ளதால், இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பஹ்ரைன் அகதி உதைபந்தாட்ட வீரரை தாய்லாந்து விடுவிக்கவுள்ளதாக குறித்த வழக்கின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
பேங்கொக்கிலுள்ள க்லோங் பிரெம் சிறைச்சாலையில் 25 வயதான உதைபந்தாட்ட வீரர் ஹகீம் அல்-அரைபி பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த திங்கட்கிழமை இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு பஹ்ரைனில் பொலிஸ் நிலையமொன்றிற்கு தீயிட்ட குற்றச்சாட்டில் அவர் ஆஜராகாத நிலையில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இக் குற்றச்சாட்டினை மறுத்துள்ள அவர் சம்பவம் இடம்பெற்றபோது தான் உதைபந்தாட்டப் போட்டியொன்றில் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பஹ்ரைனின் வேண்டுகோளுக்கு அமைவாக சர்வதேச பொலிஸாரான இன்டபோலினால் வெளியிடப்பட்ட அறிவித்தலைத் தொடர்ந்து தாய்லாந்து விமான நிலையத்தில் வைத்து கடந்த நவம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
எவ்வாறெனினும், பஹ்ரைன் தனது நிபந்தனையை விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து உதைபந்தாட்ட வீரருக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு சட்டவாதிகளால் நகர்வு மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அது நீதி மன்றத்தினால் அங்கீகரிக்கப்படும் என தாய்லாந்தின் சட்டமா அதிபர் அலுவலக அதிகாரியான சட்சொம் அகாபின் தெரிவித்தார்.
நீதிமன்றம் ஹக்கீமை சிறையிலிருந்து விடுவிக்குமாறு இன்று உத்தரவிடும் என சர்வதேச விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்சொம் தெரிவித்தார்.
நாடு கடத்துவது தொடர்பாக பஹ்ரைன் தனது நிபந்தனையினை கைவிட்டுள்ளதா என்பது சம்பந்தமாக உடனடியாக எதுவும் தெரியவரவில்லை. இந்த வழக்கு தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிட விரும்பவில்லை என தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
-Vidivelli