ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறிய அமைதியற்ற வடமேற்கு ராக்கைன் மாநிலத்தில் அரக்கான் இராணுவம் என்ற கிளர்ச்சிக் குழுவினருக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வேளையில் மியன்மார் இராணுவத்தினர் கிராமங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதோடு பொதுமக்கள் உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் தடையாக இருந்தனர் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதிகப்படியான சுயாட்சியினைக் கோரிவரும் ராக்கைன் இனக்குழுவான அரக்கான் இராணுவத்திற்கு எதிரான மோதலின்போது பொதுமக்களைத் தடுத்து வைப்பதற்காக தெளிவற்றதும் கடுமையானதுமான சட்டங்களை இராணுவத்தினர் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் கடந்த திங்கட்கிழமை குறித்த மனித உரிமைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போதைய இந்த நடவடிக்கை மியன்மார் மனித உரிமைகள் தொடர்பில் எவ்வித கரிசனையும் கொள்ளவில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளதாக நெருக்கடி தொடர்பான சர்வதேச மன்னிப்புச் சபையின் பணிப்பாளர் டிரானா ஹஸன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
மக்கள் குடியிருக்கும் கிராமங்கள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்துவதையும், உணவைப் பெற்றுக்கொள்வதற்கு தடை விதிப்பதையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிளர்ச்சிக்காரர்கள் கடந்த ஜனவரி மாதம் பொலிஸ் காவலரண் ஒன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் 13 அதிகாரிகள் கொல்லப்பட்டதையடுத்து மியன்மார் அரசாங்கப் படையினருக்கும் அரக்கான் இராணுவத்தினருக்கும் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்தன.
கிளர்ச்சிக்காரர்களை அடக்குவதற்கான முயற்சியாக 2017 ஆம் ஆண்டு ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய நடவடிக்கை இடம்பெற்ற பகுதியான குறித்த பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான படையினர் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
ஜனவரி 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக 5,200 பொதுமக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது
சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை தொடர்பில் மியன்மாரிலிருந்து உடனடியான பதில்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.
-Vidivelli