ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அல்லது சர்வதேச ரீதியான விசாரணை அவசியமில்லை எனவும் அதிகாரமிக்க சட்ட முறைமையினால் அதனைக் கையாள முடியும் எனவும் சவூதி அரேபியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அடெல் அல்-ஜுபைர் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘பேஸ் த நேஷன்’ என்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு கருத்துத் தெரிவித்த அவர் துருக்கியிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தினுள் வைத்து ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டமை பாரிய அனர்த்தமாகும் எனத் தெரிவித்ததோடு, சவூதி அரேபிய தலைமைத்துவத்தின் அனுமதியுடன் அக் கொலை நிகழ்த்தப்பட்டது எனத் தெரிவிக்கப்படுவதற்கு மறுப்புத் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவின் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானின் உத்தரவுக்கமைவாகவே இக்கொலை நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டுமென அமெரிக்க புலனாய்வு முகவரகம் முடிவுக்கு வந்திருந்தது. பட்டத்திற்குரிய இளவரசரே கொலைக்கான உத்தரவைப் பிறப்பித்தாரென அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் கடந்த டிசம்பர் மாதம் குரல் கொடுத்தனர்.
பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கும் இக் கொலைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாதென அல்-ஜுபைர் தெரிவித்தார். ஜமால் கஷோக்ஜி கொல்லப்படுவதற்கான எவ்வித உத்தரவுகளும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் முழு நாடும் அதிர்ச்சியடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அது ஒரு தவறான செயலாகும். தமது அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு செயற்பட்ட சவூதி அரசாங்க அதிகாரிகளின் செயலாகும். மன்னர் இது தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ் விவகாரம் தொடர்பில் 11 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு சவூதி அரேபியாவில் விசாரண மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவர்களுள் ஐவர் மரண தண்டனையினை எதிர்நோக்கியுள்ளனர். விசாரணைகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பெண் அறிக்கையாளரான அக்னெஸ் கோலாமார்ட் ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பில் துருக்கியில் ஒரு வாரகால விசாரணையை நடத்தியதோடு இது கொடூரமான திட்டமிடப்பட்ட கொலை எனவும் சவூதி அரேபிய அதிகாரிகளினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது எனவும் தனது ஆரம்ப கட்ட முடிவுக்கு வந்துள்ளார்.
அவரது இறுதி அறிக்கை ஜூன் மாதம் வெளியிடப்படவுள்ளது. துருக்கியிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தினுள் விசாரணைகளை மேற்கொள்வதற்கு துருக்கி எடுக்கும் முயற்சிகளுக்கு சவூதி அரேபியா இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் அக்னெஸ் கோலாமார்ட் தெரிவித்துள்ளார்.
-Vidivelli