வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றிக் கொழுப்பே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த அதிர்ச்சி தரும் தகவல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இத்தகவல் சாதாரண ஒருவரால் வெளியிடப்படவில்லை. நாட்டின் அதியுயர் பீடமான பாராளுமன்றத்தில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரினாலே இவ்விவகாரம் வெளியிடப்பட்டது.
வர்த்தகம் மற்றும் கைத்தொழில் பிரதியமைச்சர் புத்திக பத்திரனவினால் வெளியிடப்பட்ட இத்தகவலை செவிமடுத்த முஸ்லிம்கள் அதிர்ச்சிக்குள்ளானர்கள். தாம் விரும்பிப் பருகும் வெளிநாட்டு பால்மா வகைகள் மீது பிரபல வர்த்தக நாமங்களைக் கொண்ட பால்மா மீது அதிருப்தியடைந்தார்கள்.
பன்றிக் கொழுப்பு கலந்த பால்மாவையா நாங்கள் இது வரை காலம் ருசித்துப்பருகியிருக்கிறோம். எமது பிள்ளைகளுக்கும் வழங்கியிருக்கிறோம் என்று தங்களையே நொந்து கொண்டனர். தாம் அருந்திய வெளிநாட்டுப் பால்மாவை நினைத்த போது அவர்களுக்கு குமட்டிக்கொண்டு வந்தது.
பிரதியமைச்சர் வெளியிட்ட கருத்து
கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பால்மா விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
இலங்கையின் பிரபல பால்மா இறக்குமதி நிறுவனங்கள் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்தைக் கோரியிருந்தன. அரசாங்கம் பால்மா விலையினை அதிகரிப்பதற்கான அனுமதியை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கவில்லை. இதனையடுத்து அந்நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா அடங்கிய கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து கையேற்கவில்லை. கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடந்தன. நாட்டுக்குள் பால்மா தட்டுப்பாட்டினை உருவாக்கி அதன் மூலம் பால்மா விலையை அதிகரித்துக் கொள்வதே அந்நிறுவனங்களின் இலக்காக இருந்தன.
இந்நிலையிலே பாராளுமன்றத்தில் பால்மா விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சர் புத்திக பத்திரன பின்வருமாறு பதில் வழங்கியிருந்தார்.
பால்மாவிலை அதிகரிப்பு குறித்து பால்மா இறக்குமதி நிறுவனங்கள் அடிக்கடி கோரிக்கை முன்வைத்து வருகின்றன. பால்மா இறக்குமதி நிறுவனத்தின் உயரதிகாரியொருவர் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரைத் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டும் அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். என்றாலும் நாங்கள் பால்மா விலையை அதிகரிப்பது குறித்து எந்தக் தீர்மானமும் எடுக்கவில்லை.
இதேவேளை, நுகர்வோர் அதிகார சபைக்கு பால்மா தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சில பால்மா இறக்குமதி நிறுவனங்கள் பால்மா என்ற பெயரில் இறக்குமதி செய்யும் பொருட்களில் பன்றி கொழுப்பே இருப்பதாக கூறப்படுகின்றது. அத்தோடு லக்டோ மற்றும் மரக்கறி எண்ணெய் கலந்த பால்மா இறக்குமதி செய்வதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நியூசிலாந்திலிருந்து மட்டும் இவ்வாறு கொண்டு வரப்படுகின்றன எனவும் அறிய முடிகின்றது என பிரதியமைச்சர் புத்திக பத்திரன இவ்வாறு விளக்கமளித்துள்ளார். இத்தனை விடயங்களை இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் அறிந்துவைத்துள்ள, பொறுப்பு வாய்ந்த, விடயத்துக்கும் பொறுப்பான பிரதியமைச்சர் புத்திக பத்திரன ஏன் இது தொடர்பில் தீவிரமாக செயலில் இறங்கவில்லை என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகும்.
இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை பால்மா நிறுவனங்கள் விலை அதிகரிப்புக் கோரும் வரை இரகசியமாக வைத்திருந்தாரா-?
மேலும் அவர் பால்மா உற்பத்தி தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார். கன்று ஈன்ற பசுக்களில் இருந்தே பால் எடுக்க முடியும். இவ்வாறான நிலைமையில் நியூசிலாந்தில் தற்போது பிறக்கும் கன்றுகள் முதல் இறப்பதற்கு இருக்கும் பசுக்கள் மற்றும் மாடுகள் என சகலத்திலும் பால்சுரக்குமாக இருந்தாலும் கூட இலங்கைக்கு ஒருவருடத்திற்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு பால்மாவை உற்பத்தி செய்ய முடியாது என்றே அறிக்கைகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. ஆனால் உலகின் பல நாடுகளுக்கு நியூசிலாந்து பால்மா ஏற்றுமதி செய்வதாகக் கூறுகிறது.
ஆகவே லக்டோ மற்றும் பன்றி கொழுப்பும் அத்தோடு லக்டோவும் மரக்கறி எண்ணெயும் கலந்து உற்பத்தி செய்யும் ஒரு வகை தூளையே நாங்கள் பால்மாவாக குடிப்பதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக வயம்ப பல்கலைக்கழகத்தினால் செய்யப்பட்ட ஆய்வறிக்கை கிடைத்துள்ளது. 1991 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சராக இருந்த ரேணுகா ஹேரத் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் பால்மா என்பது பசுவிடம் இருந்தோ அல்லது எருதுவிடமிருந்தோ பெற்றுக் கொள்ளப்பட்ட பாலினூடாக உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பால்மாவில் பன்றிக் கொழுப்பு அல்லது கலப்படங்கள் இருந்தால் அது பாரதூரமானதாகும்.
பால்மாவில் கலப்படங்கள் இருக்கின்றனவா என்பது பற்றி ஆராய்வதற்கு ஆய்வுகூட வசதிகளைக் கொண்ட தனியார் நிறுவனமொன்றுக்கு நுகர்வோர் அதிகார சபை பால்மா மாதிரிகளை வழங்கியிருந்தது. அதன்படி அந்தப் பொறுப்பினை அந்நிறுவனம் ஏற்றிருந்தது. ஆனால் இரண்டு மூன்று வாரங்களின் பின்பு அந்த நிறுவனம் தங்களால் பால்மா ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது என்று கூறி பொறுப்பிலிருந்தும் விலகிக் கொண்டது. இதனால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆய்வுகளை மேற்கொள்ளும் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு இலஞ்சம் வழங்கி இந்த ஆய்வுகள் மூடிமறைக்கப்பட்டனவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச ஆய்வுகூடத்தில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளோம்.பால்மா மாதிரிகளை அனுப்பிவைக்கவுள்ளோம். இது தொடர்பாக எதிர்வரும் 3 வாரங்களில் தீர்வொன்றினை எதிர்பார்க்க முடியும் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள விவாதங்களை நோக்கும்போது இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு உட்பட ஏனைய கலப்படங்கள் இருந்துள்ளன. இது தொடர்ச்சியாக மூடி மறைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
விஜித் விஜயமுனி சொய்சா எம்.பி.
ஆளும்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜய முனி சொய்சா ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி இது குறித்து சில கருத்துகளை முன்வைத்தார். இக்கருத்துகள் பால்மா விவகாரத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
முன்னாள் அமைச்சர் என்ற வகையில் எனக்கு இந்த உண்மைகள் தெரியும். இந்த பால்மா பக்கட்டுக்களில் பால் இல்லை வெறுமனே மா மட்டுமே உள்ளது. பன்றிக் கொழுப்பு, தாவர எண்ணொய் மற்றும் மெலமைட் ஆகியவைகள் அடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அது தொடர்பான நிறுவனத்தின் பெயரையும் கூற முடியும். “பொன்டேரா” நிறுவனம் இவ்வாறு செய்கிறது. இவ்வாறு எமது நாட்டில் பால் குடிக்கும் பிள்ளைகளுக்கும், பால் கொடுக்கும் தாய்மாருக்கும் நஞ்சே கொடுக்கப்படுகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் கருத்துக்களை நோக்கும் போது இந்த விவகாரம் அவர்களால் மூடி மறைக்கப்பட்டிருந்தது இப்போதே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்களின் பிரதிநிதிகளான இவர்களது செயற்பாடுகளினால் பால்மா நுகர்வோர்களான பொதுமக்களே பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜய முனி சொய்சாவின் கருத்துகளுக்கு பிரதியமைச்சர் புத்திக பத்திரன பதிலளிக்கும் வகையில் தமது கருத்தினை முன்வைத்தார். நான் பிரதியமைச்சரென்ற வகையில் பொறுப்புடன் பேசுகின்றேன். மஹிந்த ராஜபக் ஷ காலத்திலும் மெலமைன் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது பால்மா நிறுவனங்கள் மிகவும் கீழ்த்தரமாகவும் தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொண்டன. நியுசிலாந்து இராஜதந்திரிகளும் இது விடயத்தில் தலையிட்டனர். எமது நாட்டு பால்மா உற்பத்தியில் இந்தப் பிரச்சினை இல்லை. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவிலே இந்தப் பிரச்சினை இருக்கிறது. இது தொடர்பாக வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வும், பிரித்தானிய நிறுவனத்தின் ஆய்வறிக்கையும் இருக்கின்றன. இதன்படியே முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆய்வுகளை வெளிநாட்டு ஆய்வுகூட நிறுவனங்களில் மேற்கொள்வோம். எமது நாட்டு மக்களுக்கு நஞ்சை கொடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சரின் உறுதிமொழிகள் வார்த்தைகளுடன் அடங்கிவிடக் கூடாது. நடவடிக்கைகளில் துரிதப்படுத்தப்பட வேண்டும். மக்கள் எதுவித சந்தேகமுமின்றி பாலை நுகர்வதற்கு சந்தர்ப்பமளிக்கப்பட வேண்டும்.
நாமல் ராஜபக்ஷ எம்.பி.
பால்மா விவகாரம் தொடர்பில் சபையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவும் கருத்துகளை வெளியிட்டார்
பிரதியமைச்சர் புத்திக பத்திரனவின் கருத்தினை நோக்கும்போது இந்த விவகாரத்தின் பின்னால் ஏதோவொரு சூழ்ச்சி நகர்வு இருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறாக அவர் கூறுவாரென்றால் பால்மாவை பயன்படுத்துவதில் பாரிய பிரச்சினை ஏற்படும். அதனால் இது தொடர்பான அறிக்கை வரும் வரை ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தெளிவான நிலைப்பாட்டுக்கு இப்போதே வரமுடியாததென்றால் இது தொடர்பான ஆய்வு முடியும்வரை இந்த பால்மாவை நுகர வேண்டாம் என்று அல்லது தடையுத்தரவு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் சர்வதேச ஆய்வுகூடமொன்றின் மூலம் ஆய்வறிக்கை ஒன்றினைப் பெற்றுக் கொள்ளும் வரை இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதுடன் உள்ளூர் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இல்லையேல் இந்தியாபோன்ற அயல் நாடுகளிலிருந்து பால்மாவினை இறக்குமதி செய்வது பற்றி ஆராயவேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார்
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்விவகாரம் தொடர்பில் சபையில் கருத்து தெரிவிக்கையில்; ‘பிரதி அமைச்சரின்’ இந்த கருத்தினைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கு பாரிய பிரச்சினை ஏற்படும். வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பால்மாவில் பன்றி கொழுப்பா இருக்கிறது என்ற சந்தேகம் ஏற்படும். இது சாதாரண பிரச்சினையல்ல. வெளிநாட்டு ஆய்வு கூடங்களின் உதவியுடன் இறக்குமதி செய்யப்படும் பால்மா மாதிரிகள் உடனடியாக ஆய்வுக்குட்படுத்தி மக்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பால்மா விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததன் பின்பு முஸ்லிம்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். பெரும்பாலானோர் பால்மாவினைத் தவிர்த்துள்ளனர். உள்ளூர் உற்பத்தியின் நுகர்வு அதிகரித்துள்ளது.
அமைச்சர்கள் உத்தரவு
இறக்குமதி செய்யப்படும் பால்மா விவகாரம் பாராளுமன்றத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதையடுத்து இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக் கொழுப்பு, தாவர எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் அடங்கியுள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் புத்திக பத்திரன ஆகியோர் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
ஆய்வுகளில் கலப்படங்கள் காணப்படுவதாக உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பால்மா இறக்குமதி நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழேயே நுகர்வோர் அதிகார சபை இயங்கி வருகிறது. எனவே இவ்விவகாரத்தின் உண்மை நிலையறிந்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
இதேவேளை பால்மா விவகாரம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதால் இது தொடர்பில் உடனடி ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சர் புத்திக பத்திரன நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தைக் கோரியுள்ளார்.
நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம்
இதேவேளை, நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பௌசர் இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக்கொழுப்பு மற்றும் கலப்படங்கள் இருப்பதாக இதுவரை முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை எனத்தெரிவித்துள்ளார். பிரதியமைச்சர் புத்திக பத்திரன பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்ததன் பின்பே இதுபற்றி அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படங்கள் உள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்தும், அமைச்சரும் பிரதியமைச்சரும் வேண்டிக்கொண்டதையடுத்தும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு ஆய்வுகூடங்களைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் காலதாமதமின்றி இது தொடர்பாக அறிக்கைகள் பெற்றுக்கொள்ளப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
தேசிய ரீதியில் உள்ள ஆய்வுகூடங்கள் அதிநவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டனவாக இல்லாமையால் சர்வதேச ஆய்வு கூடங்களின் சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பால்மா விவகாரம் காலம் தாழ்த்தக் கூடிய பிரச்சினையல்ல, நுகர்வோர் அதிகாரசபை பால்மா தொடர்பான அறிக்கையை விரைவில் பெற்று பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
மனித பாவனைக்குதவாத பால்மா இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக் கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஹலால் சான்றிதழ் பேரவை
இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 9 வர்த்தக நாமங்களைக் கொண்ட பால்மா வகைகளில் பன்றிக் கொழுப்பு கலப்படம் இல்லை என ஹலால் சான்றிதழ் பேரவை அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
ரெட்கவ், நெஸ்லே, ரத்தி, அன்கர், அன்லென், டயமன்ட், லக்ஸ்பிறே, மெலிபன் மில்க் மில்கோ ஆகிய வர்த்தக நாமங்களைக் கொண்ட பால்மா வகையிலே பன்றிக்கொழுப்பு கலப்படம் அடங்கவில்லை என அவ்வறிவித்தல் தெரிவிக்கிறது.
குறிப்பிட்ட வர்த்தக நாமங்களைக் கொண்ட உற்பத்திப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தொடர்பான ஆவணங்களைக் கொண்டே இதனை ஹலால் சான்றிதழ் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு பெருந்தொகையான பால்மா வகைகள் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியுடன் அந்தந்த நாட்டிலுள்ள அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஹலால் நிறுவனங்களின் சான்றிதழ் மற்றும் ஆய்வுகூட சான்றிதழ்கள், உற்பத்தி தொழிற்சாலைபற்றிய சான்றிதழ்கள் என்பன அனுப்பிவைக்கப்படுகின்றன. அந்த ஆவணங்களை ஆராய்ந்தபின்னே ஹலால் பேரவை பால்மா வகைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குகின்றது.
எனவே குறிப்பிட்ட வர்த்தக நாமங்களைக்கொண்ட பால்மா வகைகளில் பன்றிக் கொழுப்போ ஏனையக் கலப்படங்களோ இல்லை என உறுதியாகக் கூறமுடியும்.
எனவே முஸ்லிம்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என ஹலால் சான்றிதழ் பேரவை (HAC) யின் உள்ளக ஷரீஆ பொறுப்பதிகாரி அஷ்ஷெய்க் எம்.எம். இர்பான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒரு சில பிரபலமற்ற வர்த்தக நாமங்களைக் கொண்ட பால்மா வகைகள் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவை தொடர்பில் எம்மால் எதுவும் கூறமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு பால்மா நிறுவனங்கள் முழுஆடைப்பால்மா இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் அனுமதியுடனே பால்மா வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.
இலங்கை அரச ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா விவகாரம் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
ஹலால் சான்றிதழ் பேரவை குறிப்பிட்ட வர்த்தக நாமம் கொண்ட பால்மா வகைகளில் பன்றிக் கொழுப்பு கலப்படம் செய்யப்படவில்லை என்று ஊர்ஜிதம் செய்திருந்தாலும் அதில் மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்.
ஹலால் சான்றிதழ் பேரவை பால்மா இறக்குமதி செய்யும் நாடுகளின் ஹலால் நிறுவனங்களின் ஹலால் சான்றிதழ் மற்றும் தொழிற்சாலைகளின் சான்றிதழ் என்னும் ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டே தனது தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டே பால்மாவுக்கான தனது ஹலால் சான்றிதழை வழங்கியுள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் எத்தகைய ஆவணங்கள் வெளிநாடுகள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டாலும் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரச நிறுவனம் ஒன்றின் ஊடாக வெளிநாட்டு ஆய்வு கூடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதே சிறந்ததாகும். இதனையே எமது நாட்டு பாவனையாளர்கள் விரும்புகிறார்கள்.
எனவே இது தொடர்பில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரும், நிறுவனங்களும் தங்கள் நடவடிக்கைகளைத் துரித கதியில் முன்னெடுக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பால்மா கலப்படங்கள் அற்றவை என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படும் வரை அவற்றுக்கு தற்காலிக தடை விதிக்கவேண்டும்.
பாவனையாளர்கள் குறிப்பாக முஸ்லிம் சமூகம் தற்போது பால்மா நுகர்வில் அச்ச நிலையில் உள்ளது. ஆய்வுகளின் பின்பு பன்றிக் கொழுப்போ அல்லது வேறு கலப்படங்களோ இல்லை என நிரூபிக்கப்பட்டால் இவ்வாறான தகவல்களை வெளிப்படுத்தியோருக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-Vidivelli