இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக 3500 ஹஜ் விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் விண்ணப்பித்த விண்ணப்பங்களின் பதிவிலக்கத்தின் வரிசைக்கிரமப்படியே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அனுப்பி வைக்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார். இவ்வருட ஹஜ் பயணிகளின் தெரிவு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தெரிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் யாத்திரிகர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்குகள் அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை மாவட்ட ரீதியில் நடைபெறவுள்ளன. அவர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்குகள் நடத்தப்படும்போது அவர்கள் ஹஜ் யாத்திரைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையை உறுதிசெய்யும் கடிதங்களும் அனுப்பி வைக்கப்படும். கடந்த வருடத்தினை விட இவ்வருட ஹஜ் கட்டணம் சுமார் ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவின் மதிப்பிறக்கமும் சவூதியில் ஹஜ் தொடர்பான கட்டணங்கள் அதிகரிப்பும் 5 வீத வற்வரி அதிகரிப்புமே ஹஜ் கட்டண உயர்வுக்கு காரணமாகும். அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் முகவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் கட்டணங்கள் பத்திரிகை வாயிலாக விளம்பரப்படுத்தப்படும் என்றார்.
-Vidivelli
Next Post