நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத்தருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம், மௌலவி ஆசிரியர் நியமனம், கொழும்பில் ஆண்கள் பாடசாலையொன்றினை நிறுவுதல், யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு வீடமைப்புத் திட்டம் ஒன்றை நிறுவுவதை எனும் கோரிக்கைகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்டன.
நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இப்பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தியதுடன் இவற்றுக்குத் தீர்வு பெற்றுத்தருமாறும் வேண்டிக்கொண்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகளின் பிரதமருடனான கலந்துரையாடலில் அமைச்சர்களான கபீர் ஹா-ஷிம், ரிசாத் பதியுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் சார்பில் அதன் தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் அஸ்கர் கான், உபதலைவர் ஹில்மி அஹமட், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆளுநர் சபைத் தலைவர் பௌஸுல் ஹமீட் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர். பிரதமரின் செயலாளரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தார்.
தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் பிரச்சினை நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வருவது பற்றி பிரதமரிடம் விளக்கமளிக்கப்பட்டது. அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஏற்கனவே பள்ளிவாசலை இடமாற்றிக் கொள்வதற்காக 20 பேர்ச்சஸ் காணியை ஒதுக்கியிருந்தும் அக்காணி தற்போது மறுக்கப்பட்டு வருவதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டதுடன் நிரந்தரத்தீர்வு பெற்றுத்தருமாறு கோரப்பட்டது.
மாத்தளை அரசாங்க அதிபருடனும், சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடி தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுபெற்றுத் தருவதாக பிரதமர் உறுதியளித்தார்.
மௌலவி ஆசிரியர் நியமனமும் வழங்கப்படாது நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்பிலும் பிரதமரிடம் முறையிடப்பட்டது. மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுமென தேர்தலின்போது வாக்குறுதியளிக்கப்பட்டமை பிரதமருக்கு நினைவு கூரப்பட்டது. இது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி மௌலவி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக பிரதமர் இதன்போது உறுதியளித்தார்.
கொழும்பில் கல்வி கற்பதற்கு தமிழ்மொழி மூல பாடசாலைகள் பற்றாக்குறையாக இருப்பதால் கொழும்பு தெற்கில் ஆண்களுக்கான தமிழ் மொழி மூல பாடசாலையொன்றும், கொலன்னாவையில் தமிழ்மொழி மூல பாடசாலையொன்றும் நிறுவித்தருமாறும் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கான வீடமைப்புத் திட்டமொன்றின் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர் ரிசாத் பதியுதீன் அங்கு முஸ்லிம்களுக்கென்று மாடி வீட்டுத்திட்டமொன்றினை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் படியும் அதற்கான காணியை ஒதுக்கித்தருமாறும் வேண்டுகோள் விடுத்தார். அத்தோடு முல்லைத்தீவில் வீடமைப்புத் திட்டமொன்றினையும் வேண்டினார். இக்கோரிக்கைகள் தொடர்பில் தனது கவனத்தைச் செலுத்துவதாக பிரதமர் உறுதியளித்தார்.
-Vidivelli