சவூதி அரேபியாவில் பெண் கைதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதோடு, கொடூரமானதும் மனிதாபிமானமற்ற முறையிலும் அவர்களை நடத்துவதாக பிரித்தானிய பாராளுமன்றத்தின் அனைத்துக்கட்சி குழு கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியா மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் இந்தத் துஷ்பிரயோகத்திற்கு அதியுச்ச அளவில் சவூதி அரேபிய அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டுமென தடுப்புக்காவல் மீளாய்வு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள விமர்சன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வசந்த காலத்தின்போது கைது செய்யப்பட்ட பெண் செயற்பாட்டாளர்கள் தூங்கவிடாது தடுத்தல், தாக்குதல், உயிர் அச்சுறுத்தல் மற்றும் தனிமைச்சிறை உள்ளிட்ட வகையில் கடுமையாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் நடத்தப்படுவதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர்கள் நடத்தப்படும் விதம் சித்திரவதைக்கு நிகரானது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்படாவிட்டால், அவர்களுக்கு நீண்டகால சுகாதாரப் பாதிப்புக்கள் இடம்பெறுமெனத் தெரிவித்துள்ள அவ்வறிக்கை, இந்தக் குற்றங்களை செய்வது தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டியது அதனை நேரடியாக மேற்கொள்பவர்கள் மாத்திரமல்ல, அவற்றைச் சரி காண்பவர்களும்தான் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொள்கையின் அடிப்படையில் சவூதி அரேபிய அதிகாரிகள் சித்திரவதைக் குற்றங்களுக்காக உயர்ந்தளவில் பொறுப்புக்கூற வேண்டும்.
எமது இறுதித் தீர்மானம் எவ்வித சந்தேகங்களும் அற்றது என தடுப்புக்காவல் மீளாய்வு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவரான பழமைவாதக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கிரிஸ்பின் பிளண்ட் தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் செயற்பாட்டாளர்கள் சித்திரவதைக்காக சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு சமாந்தரமாக மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளனர் எனவும் பிளண்ட் குறிப்பிட்டார்.
உரிய மருத்துவ சிகிச்சையினைப் பெறுவதற்கு, சட்ட ஆலோசனை பெறுவதற்கு அல்லது குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்படுதல், அவர்களைத் தனிமைச் சிறையில் அடைத்தல் மற்றும் முறையற்ற விதத்தில் அவர்களை நடத்துதல் என்பன சித்திரவதைக்கான சர்வதேச வரைவிலக்கணத்திற்கு பொருந்துமளவுக்கு பாரதூரமான விடயங்களாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கைது செய்யப்பட்டதாக கேள்விப்பட்டவுடன் நான் பெரும்பாலானோரைப் போன்று அதிர்ச்சியடைந்தேன். இவ்வாறானதொன்று நடந்திருக்கக் கூடாது எனவும் நினைத்தேன் என குழுவின் உறுப்பினரான லிபரல் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான லைலா மோரன் தெரிவித்தார்.
சித்திரவதை குறிப்பாக, பாலியல் தொந்தரவுகள் மற்றும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதான அச்சுறுத்தல் எந்த வகையிலும் மன்னிக்கப்பட முடியாதவை எனவும் மோரன் தெரிவித்தார்.
-Vidivelli