வரலாற்று முக்கியத்துவமிக்க விஜயமொன்றை மேற்கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற பாப்பரசர் பிரான்ஸிஸ் கடந்த திங்கட்கிழமையன்று அல்-–அஸ்ஹர் இமாம் ஷெய்க் அஹ்மெட் அல்-தைய்யெப் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத் தலைவர்களையும் சந்தித்தார்.
மதநல்லிணக்கம் மற்றும் மத சகிப்புத்தன்மை என்ற செய்தியுடன் தனது பயணத்தை தொடங்கிய பாப்பரசர் பிரான்ஸிஸ், அபுதாபியிலுள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து சமாதானத்திற்காகப் பாடுபட வேண்டும் என்ற உடன்படிக்கையில் கைச்சாத்திடலுடன் அன்றைய தினத்தை முடிவுறுத்தினார்.
அபுதாபியிலுள்ள சமய மற்றும் அரசியல் முக்கியத்துவமிக்க இடங்களுக்கு விஜயம் செய்த அவர் மதத் தலைவர்கள் கலந்துகொண்ட மனித சமூக சட்டம் என்ற இரு நாள் மாநாட்டிலும் கலந்துகொண்டார்.
மாநாட்டை நடத்திய ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த பாப்பரசர், இங்கு வருவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியமையினை சக சகோதரர்களிடமிருந்து சமாதானத்தை எதிர்பார்க்கும் சகோதரன் என்ற வகையில் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
நாம் இங்கு சமாதானத்தை எதிர்பார்த்து வந்திருக்கின்றோம், சமாதானத்தை மேம்படுத்துவதற்காக வந்திருக்கின்றோம், நாம் சமாதானத்திற்கான கருவிகளாக இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். யுத்தத்தை நிராகரிக்குமாறும், கடவுளின் பெயரால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை வன்மையாகக் கண்டிக்குமாறும் சமயத் தலைவர்களிடம் பாப்பரசர் வேண்டுகோள் விடுத்தார்.
எகிப்தின் அல்-–அஸ்ஹர் பல்கலைக்கழகம் மற்றும் அல்-–அஸ்ஹர் பள்ளிவாசலின் பிரதம இமாம் ஷெய்க் அஹ்மெட் அல்-–தைய்யெப் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் உள்ளூர் கிறிஸ்தவ சமூகத்தினை அரவணைத்து செயற்படுமாறு மத்திய கிழக்கிலுள்ள முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
முஸ்லிம்களை விளித்து உரை நிகழ்த்திய அவர், ‘அனைத்திடங்களிலுமுள்ள கிறிஸ்தவர்களை அரவணைத்துச் செல்லுங்கள், ஏனெனில் அவர்கள் எமது தேசத்தின் பங்காளிகளாவர்’ என ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டில் ஆற்றிய உரையில் இதனைக் குறிப்பிட்டார். இந்த உரை தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.
கிறிஸ்தவர்களை விளித்து உரைநிகழ்த்திய அவர், ‘நீங்கள் இந்தத் தேசத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றீர்கள், நீங்கள் குடிமக்கள், நீங்கள் சிறுபான்மையினரல்லர், நீங்கள் முழுமையான உரிமைகளும் பொறுப்புக்களும் கொண்ட பிரஜைகளாவர் ” எனக்கூறினார்.
மேற்கு நாடுகளில் வாழும் முஸ்லிம்களிடம் ஷெய்க் தைய்யெப் விடுத்த வேண்டுகோளில் தாம் வசிக்கும் நாட்டையும் உள்ளூர் சட்டங்களை மதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
-Vidivelli