இலங்கையில் இடம்பெற்ற பல பாதாள உலக கொலைகள், போதைப்பொருள் கடத்தல்களின் பின்னணியில் இருக்கும் மிக முக்கிய புள்ளியான பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிலாகே மதூஷ் லக்சித்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் 6 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மகனின் முதலாவது பிறந்த நாள் களியாட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த போது அவர் இவ்வாறு இலங்கை உளவுத்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய – ஐக்கிய அரபு அமீரக போதைப்பொருள் தடுப்புப் பிரிவுடன் இணைந்து முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
இதன்போது டுபாயில் இருந்துகொண்டு பாகிஸ்தான் ஊடாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் முக்கிய புள்ளியான பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய கஞ்ஜிபான இம்ரான் மற்றும் மாகந்துரே மதூஷின் மிக நெருங்கிய சகாவான அங்கொட சூட்டி, பல்வேறு கொலைகள், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய பிரபல பாதாள உலக தலைவனான கெசல்வத்த தினுக ஆகியோரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு மேலதிகமாக குறித்த களியாட்டத்தில் பங்கேற்றிருந்த இலங்கையின் பிரபல பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது மகன் நதீக பெரேரா, தெவனி இனிம எனும் சிங்கள நாடகத்தின் நடிகரான ரயன் உள்ளிட்டோரும் இதன்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 25 பேர் இதன்போது பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
இந்த 25 பேரில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் தேடப்படுவோர் மற்றும் இரு பிரதேச அரசியல்வாதிகளும் உள்ளடங்குவதாக உத்தியோகபூர்மற்ற தகவல்கள் வெளிப்படுத்தின.
மஹரகம களு துஷாரவின் மனைவியை, மாகந்துரே மதூஷ் டுபாய்க்கு அழைத்து அவருடன் வாழ்ந்து வந்தார். வெலிக்கடை சிறைக் கலவரத்தின்போது களு துஷார எனும் துஷார சந்தன கொல்லப்பட்ட பின்னர் அவரது மனைவியை மதூஷ் டுபாய்க்கு அழைத்து இவ்வாறு வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையிலேயே அவர்களின் மகனின் முதலாம் பிறந்த நாளை மதூஷ் அபுதாபி 6 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று அதிகாலை ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில் இலங்கையின் உளவுத் துறையும் ஏனைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்த இரகசிய நடவடிக்கையில் மதூஷின் நகர்வுகள் தொடர்பில் தகவல் சேகரிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வந்துள்ளன.
அதன்படியே மதூஷ் அபுதாபி ஆறு நட்சத்திர ஹோட்டலுக்கு வருவதும் அங்கு களியாட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதும் குறித்த தகவல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. அதனையடுத்தே இலங்கையின் சிறப்பு பொலிஸ் குழு, ஐக்கிய அரபு அமீரக பொலிஸாருடன் இணைந்து நடாத்திய விஷேட நடவடிக்கையில் மதூஷ் உள்ளிட்ட பாதாள உலக தலைவர்கள் சிக்கியுள்ளனர்.
மாகந்துரே மதூஷ் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தும் மிக முக்கிய நபர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இலங்கையில் இடம்பெற்றுள்ள 10 இற்கும் அதிக கொலைகளுடன் அவருக்கு தொடர்பிருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சுற்றி வளைப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் ரங்க ஜீவ மீதான தாக்குதலுடனும், களுத்துறை சிறைக் கைதிகள் கொலையின் முக்கிய சூத்திரதாரியுமான அங்கொட லொக்காவுக்கு பூரண ஆதரவு கொடுத்தமை உள்ளிட்ட தொடர்புகள் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
இந் நிலையிலேயே பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கைக்கு மிக அவசியமான அவர் சிக்கியுள்ளார்.
எவ்வாறாயினும் அபுதாபியில் அவர்கள் சிக்கிய போது அந்த களியாட்டத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 20 கிராமுக்கும் அதிக நிறை கொண்ட கொக்கைன் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் மதூஷை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் வெளி விவகார அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியன இணைந்து விஷேட கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-vidivelli