முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: இணக்கப்பாடுகள் ஏற்படும் வரை சட்டத்திற்கு அங்கீகாரமளிக்காதீர்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வை.எம்.எம்.ஏ. கடிதம்
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் திருத்த சிபாரிசுகளில் சில விடயங்களில் கருத்து முரண்பாடுகளைக் கொண்டுள்ள சிபாரிசுக் குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூபுக்கும், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கும் ஓர் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தும் வரை சட்டத்திருத்தத்திற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டாம் என வை.எம்.எம்.ஏ. அமைப்பு நேற்று அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள நாளை 7 ஆம் திகதி முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளதாகத் தெரிவித்து கூட்டமொன்றுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையிலே வை.எம்.எம்.ஏ யினால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வை.எம்.எம்.ஏ அமைப்பு பல கலந்துரையாடல்களை நடத்தி சட்டத் திருத்தம் தொடர்பாக பரிந்துரைகளை உள்ளடக்கி அறிக்கையொன்றினைத் தயாரித்துள்ளது. அவ்வறிக்கை சலீம் மர்சூப், பாயிஸ் முஸ்தபா மற்றும் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இரண்டொரு தினங்களில் இருதரப்பினரையும் சந்தித்து இணைக்கப்பாடொன்றை எட்டுவதற்கான முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என வை.எம்.எம்.ஏ யின் தேசிய பொதுச்செயலாளர் சஹீட் எம்.ரிஸ்மி தெரிவித்தார்.
-Vidivelli