கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்த விவகாரம்: எட்டு மாணவர்களும் விடுவிக்கப்பட்டனர்
ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிப்பு இரு குற்றச்சாட்டுக்களுக்கு தலா 2000 ரூபா செலுத்த உத்தரவு
ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்து அதனை பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதாகக் கூறப்படும் பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேரையும் 50 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் தலா 2000 ரூபா அரச கட்டணம் செலுத்திய பின்னர் விடுவிக்க கெப்பித்திகொல்லாவ நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
சந்தேக நபர்கள் 8 பேரும் நேற்று கெப்பித்திகொல்லாவ நீதிவான் மாலிந்த ஹர்ஷன அல்விஸ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஜனவரி 23 ஆம் திகதி இரவு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 26 வயதான எறாவூரைச் சேர்ந்த ஏ.எஸ்.எம். ரினாஸ், 26 வயதான ஓட்டமாவாடியைச் சேர்ந்த ஏ.எம்.சப்ராஸ், 26 வயதான கம்பளையைச் சேர்ந்த எம்.பி.மொஹம்மட், 25 வயதான சாய்ந்தமருதுவைச் சேர்ந்த எம்.ஏ.டில்சாத், 24 வயதான குளியாப்பிட்டியைச் சேர்ந்த பி.எம்.எம்.காமில், 26 வயதான ஹொரவபொத்தான பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.ஹாபிஸ், 25 வயதான புத்தளத்தைச் சேர்ந்த ஹிதாயதுல்லா ஆகிய ஏழு பேரையும், கொழும்பிலிருந்து சென்று கடந்த ஜனவரி 24 ஆம் திகதி பொலிசில் சரணடைந்த மற்றொரு மாணவனும் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த 8 மாணவர்களும் சிறை அதிகாரிகளால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், ரங்க சுஜீவ மற்றும் சப்ராஸ் ஹம்சா ஆகியோர் ஆஜராகினர். இதன்போது நேற்று குறித்த 8 மாணவர்களுக்கும் ஹொரவபொத்தான பொலிஸ் பொறுப்பதிகாரியால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தண்டனை சட்டக் கோவையின் 120, 140 ஆம் அத்தியாயங்களின் கீழ் தலா ஒவ்வொரு குற்றச்சாட்டும் தொல்பொருள் சட்டத்தின் 31 (பீ) பிரிவின் கீழ் மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகள் கொடுத்த முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தொல்பொருள் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அதன்படியே இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும் பொலிசார் மன்றுக்குத் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த 8 மாணவர்கள் சார்பிலும் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரினதும் எதிர்காலம் மற்றும் அவர்களுக்கு இதற்கு முன்னர் எந்தக் குற்றங்களிலும் தொடர்பில்லை என்ற நற்சான்றிதழ், குறித்த தொல்பொருள் இடத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாதென்ற எந்த அறிவித்தலும் இல்லாமை ஆகிய காரணங்களை முன்வைத்து சிறைத் தண்டனை விதிக்க வேண்டாம் எனவும் சிறிய தண்டனையுடன் விடுவிக்குமாறும் கோரினார்.
எனினும், தொல்பொருள் திணைக்களம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குறித்த 8 பேருக்கும் குறைந்தபட்சம் இரு வருட சிறைத் தண்டனையேனும் வழங்க வேண்டுமெனவும், அப்போதுதான் இதன் பின்னர் குறித்த இடத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்க முடியும் எனவும் வாதிட்டார்.
எனினும், சுமார் 45 நிமிடங்கள் நீடித்த வாதப் பிரதிவாதத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்ட 5 வழக்குத் தீர்ப்புக்கள், இதற்கு முன்னர் தொல்பொருள் இடங்களில் பதிவான இவ்வாறான சம்பவங்களில் நீதிமன்றம் கடைப்பிடித்த வழிமுறை ஆகியவற்றை மன்றுக்கு சுட்டிக்காட்டி, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சிறைத்தண்டனை வேண்டாம் எனவும், குற்றம் தொடர்பில் கைவிரல் பதிவோ அல்லது ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையோ கூட வேண்டாம் என்றும் வாதிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிவான், இம்மூன்று குற்றங்களில் தண்டனை சட்டக் கோவையின் கீழான குற்றங்கள் ஒவ்வொன்று தொடர்பிலும் குற்றவாளியாக இனங்காணப்பட்ட 8 பேருக்கும் தலா 1000 ரூபா வீதம் ஒவ்வொருவருக்கும் 2000 ரூபா அரச கட்டணம் செலுத்த உத்தரவிட்டார். அத்துடன் தொல்பொருள் சட்டத்தின் கீழான குற்றத்துக்கு தலா 50 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்த உத்தரவிட்டு வழக்கை நிறைவு செய்தார்.
ஹொரவபொத்தான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சேனக பீ ஜயசிங்கவின் ஆலோசனைப்படி ஹொரவபொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரொஷான் சஞ்ஜீவ தலைமையிலான குழுவினர் பொலிஸ் தரப்பில் வழக்கை நெறிப்படுத்தினர். கடந்த 2018 ஜனவரி 5 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு தினத்தில் கிரலாகல தொல்பொருள் வலயத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாகவும், அவர்களை தேடியபோதும் அவர்கள் யாரெனக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருக்கு கொடுத்த முறைப்பாட்டில் தெரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli