சுதந்­திர வெற்றியில் முஸ்லிம்கள்

0 2,600
  • எம்.எம்.ஏ.ஸமட்

எதிர்­வரும் 4ஆம் திகதி திங்­கட்­கி­ழமை இலங்கை அதன் 71ஆவது சுதந்­திர தினத்தைக் கொண்­டாடத் தயா­ராகி வரு­கி­றது. சுதந்­திர தினக் கொண்­டாட்­டத்­திற்­கான பூர்­வாங்க ஏற்­பா­டுகள் அனைத்தும் நிறை­வுற்ற நிலையில், கொழும்பு காலி­முகத் திடலில் நடை­பெ­ற­வுள்ள 71ஆவது சுதந்­திர தினக் கொண்­டாட்­டத்தில் மாலை­தீ­வு ஜனா­தி­பதி இப்­றாகிம் முகம்மட்  சாலி பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

நாட்டின் அனைத்து மாவட்­டங்­க­ளிலும், அனைத்­து­ல­கி­லு­முள்ள இலங்­கையின் தூத­ரகங்­க­ளிலும் 71ஆவது சுதந்­திர தினக் கொண்­டாட்டங்­களை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களும் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்­நி­லையில், இலங்கை மண்ணின் பல்­லின சமூகத் தலை­வர்­களின் பெரும் தியா­கங்­க­ளி­னாலும், அர்ப்­ப­ணிப்­புக்­க­ளி­னாலும் பெறப்­பட்ட இச்­சு­தந்­தி­ரத்தின் உரி­மை­களை அனைத்து இன மக்­களும் அனு­ப­விக்க வேண்டும் என்­பதில் மாற்றுக் கருத்­தி­ருக்க முடி­யாது.

இருப்­பினும், பௌத்த சிங்­கள மக்கள் மத்­தியில் வாழும் பேரி­ன­வாத கடும்­போக்­கா­ளர்கள் இச்­சு­தந்­தி­ரத்தின் வர­லாற்றுப் பின்­னணி தெரி­யாமல் இந்­நாடு பௌத்த சிங்­கள மக்­க­ளுக்கு மாத்­திரம் உரித்­தா­னது, ஏனைய இனத்­தி­னர்கள் இந்­நாட்டின் வந்­தேறு குடிகள் என சந்­தர்ப்­பத்­திற்கு சந்­தர்ப்பம் கூறி­வ­ரு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

கடும்­போக்­கா­ளர்கள் கூறு­வது போன்று இந்­நாடு பெரும்­பான்மை இன மக்­க­ளுக்கு மாத்­திரம் உரித்­தா­ன­தல்ல. இந்­நாட்டில் யாரெல்லாம் குடி­யு­ரிமை பெற்று வாழ்­கி­றார்­களோ அவர்கள் அனை­வ­ருக்கும் இந்­நாடு சொந்தம் என்­பதை குறிப்­பிட்ட வர்க்­கத்­தி­ன­ருக்கு தக்க ஆதா­ரங்­க­ளுடன் நிரூ­பிக்க வேண்­டிய கடப்­பாடு இந்­நாட்டில் வாழும் ஒவ்­வொரு சிறு­பான்மை இனத்­தி­ன­ரதும் பொறுப்­பா­க­வுள்­ளது. அதற்­கான நாள் இந்­நாடு சுதந்­திரம் பெற்ற தின­மாகும் என்­பதும் சுட்­டி­க்காட்­டத்­தக்­கது. அந்­த­வ­கையில், இந்­நாட்டில் சிறு­பான்மை இன­மாக வாழும் முஸ்­லிம்­களின் வர­லாற்றுப் பின்­னணி பற்­றியும் அவர்கள் இந்­நாடு சுதந்­திரம் பெறு­வ­தற்கும், சுதந்­தி­ரத்­திற்கு முன்­னரும் புரிந்த தியா­கங்கள் பற்றி நாட்­டுப்­பற்­றுடன் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வதும் அவ­சி­ய­மாகும்.

இலங்­கையின் வர­லாற்றில் முஸ்­லிம்கள்

இந்­நாட்டில் வாழும் முஸ்­லிம்­களின் தாய்­நாடு இலங்கை. இந்­நாட்டை விட்டு ஓடவோ அல்­லது இந்­நாட்டின் இறை­மைக்கும் அதன் சுதந்­தி­ரத்­துக்கும் பங்கம் ஏற்­ப­டு­கின்­ற­போது, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்­கவோ அல்­லது இந்­நாட்­டுக்குத் துரோகம் இழைக்­கவோ முடி­யாது. ஏனெ­னில, இந்­நாட்டில் வாழ்ந்து மறைந்து, வாழ்ந்து கொண்­டி­ருக்கும் முஸ்­லிம்­களின் வர­லா­றா­னது, வர­லாறு தெரி­யாத கடும்­போக்­கா­ளர்கள் கூறு­வ­து­போன்­ற­தல்ல. இந்­நாட்டில் மிக்க தொன்­மை­வாய்ந்த வர­லாற்றை கொண்ட ஒரு தனித்­துவ இன­மாக முஸ்­லிம்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். ஆனால், ஒரு­சில மாற்­று­மதக் கல்­வி­யி­ய­லா­ளர்கள் எழு­து­கின்ற போட்டிப் பரீட்­சைக்­கான நூல்­களில் பொது­அ­றிவு விட­யங்­களில் ஒன்­றாக இந்­நாட்டின் தேசிய இன­மாக முஸ்­லிம்­களைச் சுட்­டிக்­காட்­டு­வதில் தவ­றி­ழைத்து வரு­கின்­றனர். இந்­நாட்டின் மூவினங்­களில் தேசிய இன­மாக முஸ்­லிம்­களைக் கரு­தா­தி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

விஜ­யனும் அவ­னது நண்­பர்­களும் கி.பி. 6ஆம் நூற்­றாண்டில் இலங்­கைக்கு வந்­த­தி­லி­ருந்து இந்­நாட்டின் வர­லாறு எழு­தப்­பட்­டது. அதற்குப் பின்­னரே இலங்­கையின் ஆட்சி முறைமை நிலவி வரு­வ­தாக  வர­லாறு கூறு­கி­றது. இலங்கை வர­லாற்றில் முக்­கிய நக­ரங்­களை மைய­மாகக் கொண்ட ஆட்­சிகள் நில­வி­யுள்­ளன. அநு­ரா­த­புர ஆட்சிக் காலம், பொல­ந­றுவை ஆட்­சிக்­காலம், யாப்­ப­குவ இரா­ஜ­தானி, தம்­ப­தெ­னிய இரா­ஜ­தானி, யாழ்ப்­பாணம் இரா­ஜ­தானி, சீதா­வக்கை இரா­ஜ­தானி, கோட்டை இரா­ஜ­தானி, கண்டி இராச்­சியம் என்ற அடிப்­ப­டையில் அக்­கால ஆட்சி புலம் காணப்­பட்­டுள்­ளது.

இவ்­வாட்சிக் காலத்தில் தென்­னிந்­திய ஆக்­கி­ர­மிப்­புக்­க­ளுக்கு இரா­ஜ­தா­னிகள் முகம்­கொ­டுக்க நேர்ந்­துள்­ள­துடன் இக்­கா­லப்­ப­கு­தி­யி­லேதான் இலங்­கையில் இந்து சம­யமும், பௌத்த சம­யமும் பர­வி­யது. அரே­பி­யர்கள் வர்த்­தக நோக்­கத்­திற்­காக இலங்­கைக்கு வந்து சென்­ற­மையே இஸ்லாம் மார்க்கம் இலங்­கையில் பரவக் கார­ண­மாக இருந்­த­தென்று பர­வ­லாகக் கூறப்­ப­டு­கி­றது. ஆனால், அரே­பி­யர்கள் இலங்­கைக்கு வரு­வ­தற்கு முன்­னரே முஸ்­லிம்கள் இங்கு வாழ்ந்­தி­ருக்­கி­றார்கள் என்­ப­தற்குப் பல ஆதா­ரங்கள் உள்­ள­தாக வர­லாற்­றா­சி­ரி­யர்கள் குறிப்­பி­டு­கி­றார்கள்.

ஐரோப்­பிய போர்த்­துக்­கீ­சர்­களும், ஒல்­லாந்­தர்­களும், ஆங்­கி­லே­யர்­களும் இந்­நாட்டை ஆட்சி செய்­வ­தற்கு முன்­னரும் ஆட்சி செய்த காலத்­திலும் இந்­நாட்டில் வாழ்ந்த முஸ்­லிம்­களின் பங்­க­ளிப்­புக்கள் அக்­கால ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு அளப்­ப­ரி­ய­தா­கவே இருந்­துள்­ளன. இரா­ஜ­தந்­திர துறை­யிலும், பாது­காப்­புத்­து­றை­யிலும், மருத்­து­வத்­து­றை­யிலும், வணி­கத்­து­றை­யி­லு­மென பல்­வேறு துறை­களில் அக்­கா­லத்து ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு முஸ்­லிம்கள் பங்­க­ளிப்பு செய்­தி­ருக்­கி­றர்கள்.

முஸ்­லிம்கள் கடற்­ப­ய­ணத்­திலும், பல மொழிகள் பேசு­வ­திலும், உள்­நாட்டு, வெளி­நாட்டு தொடர்­பா­டல்­க­ளி­லு­மெனப் பல்­வேறு விட­யங்­களில் தேர்ச்­சியும் அனு­ப­வமும் பெற்­றி­ருந்­த­தனால் அத்­த­கை­ய­வர்கள் அக்­கா­லத்து மன்­னர்­களின் தூது­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

கி.பி. 1258 இல் யாப்­ப­குவயை ஆண்ட முதலாம் புவ­னே­க­பாகு என்ற மன்னன் அக்­கா­லத்­தி­லி­ருந்த எகிப்தின் மம்­லூக்­கிய மன்­ன­னு­ட­னான வர்த்­தக தொடர்பின் நிமித்தம் அபூ உஸ்­மான் என்­ப­வரை தூது­வ­ராக அனுப்பி வைத்­த­தா­கவும் கி.பி. 1762ஆம் ஆண்­ட­ளவில் கண்டி இரா­ஜ­தா­னி­யாக இருந்த கீர்த்­திஸ்ரீ இரா­ஜ­சிங்­கனை சந்­திப்­ப­தற்­காக கிழக்­கிந்­திய வர்த்­தகக் கம்­ப­னியின் தூது­வ­ராக ஜோன் பைபஸ் திரு­கோ­ண­ம­லைக்கு வந்­தி­ருந்­த­வேளை, அவரை வர­வேற்று கண்­டிக்கு அழைத்து வரு­வ­தற்­காக மவுலா முகாந்­திரம் என்­ப­வ­ரது புதல்­வா­ரன உதுமான் லெப்பை என்­ப­வரை மன்னர் அனுப்பி வைத்­தி­ருந்­த­தா­கவும்  அதேபோல், போர்த்­துக்­கே­ய­ருக்கு எதி­ரான போராட்­டத்தில் அவர்­களை விரட்­டி­ய­டித்து நாட்டைக் காப்­பாற்­று­வ­தற்­காக கள்­ளிக்­கோட்டை சமோ­ரினின் உத­வியைப் பெற மாயா­துன்னை மன்னன் முஸ்­லிம்­க­ளையே தூது­வ­ராக அனுப்பி வைத்­தி­ருந்­த­தா­கவும் வர­லாறு  கூறு­கி­றது.

தூது­வர்­க­ளாக மாத்­தி­ர­மன்றி, மன்­னர்­களின் பாது­காப்பு, வைத்­தியம், வாணி­ப­மெனப் பல்­வேறு விட­யங்­களில் அக்­கா­லத்து பௌத்த சிங்­கள மன்­னர்­களின் விசு­வா­சத்­துக்கும் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வர்­க­ளா­க­வும, ஆளு­மை­மிக்­க­வர்­க­ளா­கவும் முஸ்­லிம்கள் வாழ்ந்­தி­ருக்­கி­றார்கள் என்­ப­தற்­கான வர­லாற்­றுப்­ப­தி­வுகள் பல­வுள்­ளன.  இவ்­வ­ர­லாற்றுப் பதி­வு­களை இந்­நாட்டில் வாழ்­கின்ற முஸ்­லிம்கள் இந்­நாட்­டுடன் விசு­வா­ச­மற்­ற­வர்கள், அடிப்­ப­டை­வா­திகள், பயங்­க­ர­வா­திகள், இந்­நாட்டின் நிலங்­களை கப­ளீ­கரம் செய்து வாழ்­கின்­ற­வர்கள் என யதார்த்­தத்­திற்கு முர­ணான பதி­வு­களை பெரும்­பான்மை பௌத்த சிங்­கள மக்கள் மத்­தியில் பொய்­யாகப் பரப்­பு­கின்ற கடும்­போக்­கா­ளர்­க­ளுக்கு உரிய முறையில் தெளி­வு­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு இந்­நாட்டின் தொன்­மை­வாய்ந்த வர­லாற்றைக் கொண்ட முஸ்­லிம்­களின் கடப்­பா­டாகும்.

சுதந்­திர வெற்­றியும்,  முஸ்­லிம்­களும்

இக்­க­டப்­பாட்டைக் கொண்ட முஸ்­லிம்கள் அக்­கா­லத்து மன்­னர்­களின் நம்­பிக்­கைக்கும் விசு­வா­சத்­துக்கும் மாத்­தி­ர­மல்­லாது  இந்­நாட்டை ஆட்சி செய்த அந்­நிய ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் பிடி­யி­லி­ருந்து இந்­நாட்டை மீட்­ப­தற்கும் தங்­க­ளா­லான பங்­க­ளிப்­புக்­களை செய்­தி­ருக்­கி­றார்­கள். ஏறக்­கு­றைய 443 வரு­டங்கள் இந்­நாட்டை கால­னித்­துவ ஆட்­சியில் வைத்­தி­ருந்த ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­க­ளி­ட­மி­ருந்து மீட்­டெ­டுக்க அனைத்து இன மக்­களும், மக்கள் தலை­வர்­களும் ஒன்­றி­ணைந்து போரா­டி­யி­ருக்­கி­றார்கள்.

கி.பி. 1505ஆம் ஆண்டு போர்த்­துக்­கீசர் இலங்­கையில்  கால்­ப­திக்கும் வரை  இந்­நாடு பிராந்­திய மன்­னர்­களின் ஆட்­சிக்கு உட்­பட்­டி­ருந்­தது. ஒவ்­வொரு ராஜ்­யத்­தையும்  ஒவ்­வொரு  மன்­னர்கள் ஆண்டு வந்­தார்கள். போர்த்­துக்­கீ­சர்­களின் காலூன்­றலைத் தொடர்ந்து ராஜ்­ஜிய மன்­னர்­களின் ஆட்சி வீழ்ச்­சி­காணத் தொடங்­கி­ய­துடன் ஏகா­தி­பத்­தி­ய­வா­தி­களின் கால­னித்­துவ ஆட்சி மேலோங்­கி­யது.

பல­வீ­ன­மான மக்கள் தொகுதி அல்­லது பிராந்­தியக் குழுக்­களின் மேலா­திக்கம் சார்ந்த அதி­காரம் அல்­லது கட்­டுப்­பாட்­டினைப் பிர­யோ­கிக்கும் செயற்­பாட்­டுடன் தொடர்­பு­டைய கொள்­கை­களும் பிர­யோ­கங்­களும் கால­னித்­துவம் எனப்­ப­டு­கி­றது. கால­னித்­துவ ஆட்­சி­யா­னது 443 வரு­டங்கள் இலங்­கையில் நீடித்­தது. 1505ஆம் ஆண்­டி­லி­ருந்து 1658ஆம் ஆண்டு வரை போர்த்­துக்­கீ­சரின் ஆட்­சியும், 1658 முதல் 1796 வரை ஒல்­லாந்­தரின் ஆட்­சியும் 1796 முதல் 1948ஆம் ஆண்டு வரை பிரித்­தா­னி­யரின் கால­னித்­துவ ஆட்­சியும் இந்த மண்ணில் நில­வி­யது.

அந்­நி­யர்­களின் கால­னித்­துவ ஆட்சிக் காலங்­க­ளின்­போது, இந்­நாடு பல சாதக பாதக விளை­வு­களை அனு­ப­வித்­தது. சாத­க­மான விளை­வு­க­ளாக பொரு­ளா­தார விருத்தி, அர­சியல் கட்­ட­மைப்பு மாற்றம், போக்­கு­வ­ரத்து வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­பட்மை, அவை தேவைக்­கேற்­ற­வாறு விருத்தி செய்­யப்­பட்­டமை, தொழிற்­சா­லைகள் நிறு­வப்­பட்­டமை, கல்வி முன்­னேற்றம் கண்­டமை.  பாட­சா­லைகள் உரு­வாக்­கப்­பட்­டமை, சமூக முன்­னேற்­றமும் வாழ்க்கை முறை­மையும் மாற்றம் கண்­டமை போன்­ற­வற்றைக் குறிப்­பிட முடி­வ­துடன்,  பாதக விளை­வு­க­ளாக கலா­சா­ரத்தில் மாற்­றமும் அதன் பின்­ன­ரான சீர­ழி­வு­களும், மத மாற்றம் மேற்­கொள்­ளப்­பட்­டமை, பொரு­ளா­தார சுரண்டல், அடி­மைப்­ப­டுத்தல்  முத­லான கால­னித்­து­வத்தின் பாதக விளை­வு­க­ளையும் குறிப்­பி­டலாம்.

இந்­நாட்டின் காற்றைச் சுதந்­தி­ர­மாக சுவா­சிக்க வேண்டும். தங்­களைத் தாங்­களே ஆள வேண்டும். மாற்றான் ஆட்­சியில் நாம் மண்டி­யிட்டுக் கிடக்க முடி­யாது என்ற ஒன்­று­பட்ட உணர்வின் வழியே சமூக ஒரு­மைப்­பா­டு­க­ளோடு ஒன்­றி­ணைந்து நாட்­டுக்கு சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுக்க உயிர், உடல், பொருள், கால நேரங்கள் அனைத்­தையும் தியாகம் செய்து அந்­நி­யரின் அடக்­கு­முறை, சுரண்டல் ஆட்­சி­யி­லி­ருந்து நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும்  தேச­பி­தாக்கள் காப்­பாற்­றி­னார்கள்.

அவ்­வாறு போராடி 1948ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 4ஆம் திகதி இந்­நாட்­டுக்கு சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுத்த சுதந்­திர இலங்கைத் தேசத்தின் தேச­பி­தாக்­க­ளாக  டி.எஸ். சேன­நா­யக்க, எப்.ஆர். சேன­நா­யக்க, எஸ்.டப்­ளியு. ஆர். டீ. பண்­டா­ர­நா­யக்க, சேர் பாரன் ஜய­திலக்க, ஈ.டப்­ளியூ பெரேரா, டி.ஆர் விஜே­ய­வர்­தன, ஜேம்ஸ் பீரிஸ், ஆதர் வி. டயஸ், அநகா­ரிக தர்­ம­பால, சேர். பொன்­னம்­பலம் இரா­ம­நாதன், சேர். பொன்­னம்­பலம் அரு­ணா­சலம், சேர். முத்­துக்­கு­மா­ர­சு­வாமி, சேர். வைத்­தி­ய­லிங்கம் துரை­சு­வாமி, டாக்டர் ஆனந்த குமா­ர­சு­வாமி, ஸ்ரீலஸ்ரீ ஆறு­மு­க­நா­வலர், சி.வை. தாமோ­த­ரம்­பிள்ளை ஆகிய பெரும்­பான்மை மற்றும் சகோ­தர தமிழ் தலை­வர்­க­ளு­டனும் இணைந்து முஸ்­லிம்­களின் தலை­வர்­க­ளாக விளங்­கிய டாக்டர் ரி.பி.ஜாயா, சேர்.ராசிக் பரீட், அறிஞர் சித்தி சின்­ன­லெப்பை, வாப்­பிச்சி மரைக்கார், சேர் மாக்கான் மாக்கார் போன்­ற­வர்கள்  ஒன்­றி­ணைந்து பெற்­றெ­டுத்த தேச விடு­த­லையை நாம் இன்று அனு­ப­வித்துக் ­கொண்­டி­ருக்­கிறோம்.

இச்­சு­தந்­திரம் எல்­லோ­ருக்கும் பொது­வா­னது. இப்­பொ­து­வான சுதந்­தி­ரத்தின் மூலம் கிடைக்­கப்­பெற்ற உரி­மை­களை இந்­நாட்டில் வாழும் அனைத்து இனங்­களும் அனு­ப­விக்க வேண்டும். அதற்கு யாரும் தடை­யாக இருக்க முடி­யாது. இருப்­பினும், இந்­நாட்டில் 9.7 வீதம் வாழ்­கின்ற முஸ்­லிம்கள், தங்­க­ளது தேச­பி­தாக்­களின் பங்­க­ளிப்­புடன் பெற்­றுக்­கொண்ட சுதந்­தி­ரத்தின் உரி­மை­களை, இந்­நாட்டில் தற்­போ­துள்ள அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் அனு­ப­விப்­ப­தற்கு, ஏறக்­கு­றைய 70 வீதம் வாழும் சிங்­கள பௌத்த மக்­களின் சிறு தொகை­யி­னரின் ஆத­ர­வையும் ஒத்­து­ழைப்­பையும் பெற்­றுள்ள கடும்­போக்கு மத­வா­தி­களும், அர­சி­யல்­வா­தி­களும் காலத்­திற்குக் காலம் தடை­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருப்­ப­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

இந்­நாட்டை ஆண்ட இரா­ஜ­தா­னி­க­ளுக்கு அக்­கா­லத்து முஸ்­லிம்கள் எத்­த­கைய உத­வி­களைச் செய்­தி­ருக்­கி­றார்கள், எந்­த­ளவு பக்­க­ப­ல­மாக இருந்­தி­ருக்­கி­றார்கள், எவ்­வ­கை­யான தியா­கங்­களைப் புரிந்­தி­ருக்­கி­றார்கள் என்ற வர­லா­று­க­ளை­யெல்லாம் மறந்­து­விட்டு அல்­லது அவற்றை திரி­பு­ப­டுத்­தி­விட்டு. இந்­நாட்டில் முஸ்­லிம்கள் அடிப்­ப­டை­வா­தத்தை உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள், பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்குத் துணை­போ­கி­றார்கள் என்று சுட்­டிக்­காட்டி வரு­வ­தா­னது முஸ்­லிம்­களை அச்­சத்­துக்கும், நெருக்­க­டிக்­குள்ளும் தள்­ளிக்­கொண்­டி­ருப்­ப­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

நிகழ்­வு­களும்  உணர்­வு­களும்

நாட்டின் இறை­மைக்கும், கௌர­வத்­துக்கும் களங்­க­மேற்­பட்ட போதெல்லாம் நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் காப்­பாற்­று­வ­தற்­காக போரா­டி­ய­வர்­க­ளோடு இணைந்து செயற்­பட்ட முஸ்­லிம்­களின் பரம்­ப­ரை­யி­னரை அவர்­களில் சில­ரினால் புரி­யப்­பட்ட அல்­லது தவ­று­த­லாகப் புரி­யப்­ப­டு­கின்ற சம்­ப­வங்கள் தொடர்பில் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த சில  அர­சி­யல்­வா­தி­களும், கடும்­போக்கு மத­வா­தி­களும், சில ஊட­கங்­களும் விமர்­சனப் பரப்­பு­ரை­களை முன்­னெ­டுத்து  வரு­கின்­ற­மையை காண­மு­டி­கி­றது.

கடும்­போக்­கா­ளர்கள் மேற்­கொள்­கின்ற பரப்­புரை போன்று இந்­நாட்டில் வாழ்­கின்ற முஸ்­லிம்கள் இந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­கவும், சட்­ட­திட்­டங்­க­ளுக்கு எதி­ரா­கவும் செயற்­ப­ட­வில்லை. இந்­நாட்டில் வாழ்­கின்ற ஒரு தனித்­துவ இன மொன்­றுக்கு எத்­த­கைய உரி­மைகள் இந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் வழங்­கப்­பட்­டுள்­ளதோ அத்­த­கைய உரி­மை­களை மீறாத வகை­யி­லேயே அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ஒரு­சில சம்­ப­வங்­களும், ஒரு­சி­லரின் நட­வ­டிக்­கை­களும் அர­சி­ய­ல­மைப்­புக்கும், சட்­ட­திட்­டங்­க­ளுக்கும் முர­ணாக இருந்­தாலும் அவை ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் தவ­றாகக் கரு­த­மு­டி­யாது.

நாட்டின் சட்­டத்­தையும், அர­சி­ய­ல­மைப்பு விதி­க­ளையும் யார் மீறு­கி­றார்­களோ அவர்­க­ளுக்­கான தண்­ட­னையை வழங்­கு­வது நாட்டின் சட்­ட­மாகும். அது அரசின் பொறுப்­பாகும். மாறாக நாங்கள் பெரும்­பான்மை இனத்­தினர் என்று எண்­ணிக்­கொண்டு சட்­டத்தை எந்த இயக்­கமோ அல்­லது அமைப்போ கையி­லெ­டுத்து செயற்­பட முடி­யாது. சட்­டத்தை மீறிச் செயற்­பட யாரையும் திணிக்­கவும் இய­லாது. அவ்­வாறு சட்­டத்தை மீறு­மாறு திணித்து தங்­க­ளுக்கு ஏற்­ற­வாறு சட்டம் மாற்­றப்­ப­டு­மாயின் 1948ஆம் ஆண்டு பெறப்­பட்ட சுதந்­திரம் முழுமை பெற­வில்லை என்­பதை மேலும் உறு­திப்­ப­டுத்­து­வ­தா­கவே அமையும்.

இச்­சு­தந்­திர தேசத்தில் வாழும் ஒரு தனித்­துவ இனத்­துக்­கான உரி­மையை இந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு வழங்­கி­யி­ருக்­கின்ற நிலையில், அவற்றை ஏற்று வாழ்­கின்ற சிறு­பான்மை சமூ­கத்­திற்கு எதி­ராக, குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான பொய்ப்­பி­ர­சா­ரங்­களும், மத நிந்­த­னை­களும், வெறுப்புப் பேச்­சுக்­களும் அவ்­வப்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால், இவ்­வாறு புரிந்­த­வர்கள் அல்­லது புரி­கின்­ற­வர்கள் சட்­டத்­தின்முன் நிறுத்­தப்­பட்டு முறை­யாக சட்டம் அவர்கள் மீது பாய­வில்லை என்ற மனத்­தாக்கம் முஸ்­லிம்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்ற நிலையில், ஜன­நா­யக தேச­மொன்றின் பெரும் தூண்­களில் ஒன்­றான நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த குற்­றச்­சாட்­டுக்­காக சிறைவாசம் அனுபவித்து வரும் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை சுதந்திர தினத்தன்று பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென கடும்போக்கு அமைப்பாளர்களும் இன்னும் பலரும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

இந்நிலையில், சுதந்திர தேசத்தில் சுதந்திரமாக வாழும் உரிமை கொண்ட மக்களும் மதமும் அவர்களின் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களும் கேள்விக்குட்படுத்தப்படும் நிலை, மற்றும் மீறப்படும் செயற்பாடுகள் தொடர்ந்தும் வரலாற்றில் பதியப்படுவதற்கும் அவை எதிர்கால சந்தியினருக்கும் விட்டுச் செல்லப்படுவதற்கும்,  இடமளிக்காத வகையில் நாட்டின் சட்டங்கள் முறையாகக் கையாளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சிறுபான்மை மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இந்த எதிர்பார்ப்பை புதிய அரசியலமைப்பு மாற்றமானது ஏற்படுத்த வேண்டும். ஆனால், புதிய அரசியலைப்பு வருமா? வராத என்ற கேள்விக்கு மத்தியில், புதிய அரசியலமைப்பின் மூலம் உருவாக்கப்படும் சட்டங்களும் சட்ட விதிமுறைகளும் சமத்துவமாக அமுல்படுத்தப்பட வேண்டும். அதன்மூலம் இத்தேசம் இற்றைக்கு 71 வருடங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும். அவ்வாறு அமையப் பெறும்போதுதான் இந்நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு தேசிய ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயற்பட்ட, ஒத்துழைத்த முஸ்லிம் தேச தியாகிகளினது தியாகங்கள் மாத்திரமல்லாது  சிங்கள, தமிழ் தேசபிதாக்களின் அர்ப்பணிப்புக்களும் தியாகங்களும் பெறுமதிமிக்கதாக அமையும்.

இலங்கையின் சுதந்திர வரலாற்றில் முஸ்லிம்களினதும் ஏனைய இனத்தினர்களினதும் தியாகங்கள் களங்கப்படுத்தப்படாமல் இருக்க வேண்டுமாயின், இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் சமத்துவத்துடனும் தங்களுக்கான உரிமையுடனும் வாழ்வதற்கான சூழ்நிலை இந்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் அப்போதுதான் இந்நாட்டில் நிரந்தர சமதானத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும், இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.