மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் கல்வித்தரத்தினை உயர்த்துவதற்கு பாரிய வேலைத்திட்டமொன்றினை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி அத்திட்டத்திற்கான ஆலோசனைகளை வழங்குமாறு முஸ்லிம் பாடசாலை அதிபர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மேல் மாகாணத்தைச் சேர்ந்த களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் 64 முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்களை சந்தித்து மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கல்வித்துறை சார்ந்த விடயங்களைக் கலந்துரையாடியதுடன் பாடசாலைகளின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.
மேல் மாகாணத்தில் அரசியல் ரீதியிலான இடமாற்றங்கள் இடம்பெறுகின்றன. அதனால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன என அதிபர்கள் ஆளுநரிடம் முறையிட்டனர். அவ்வாறான இடமாற்றங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.
மேல் மாகாணத்தின் பாடசாலைகளின் கல்வித்தரம் தற்போது 3 ஆம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அதனை முதல் நிலைக்கு கொண்டு வருவதையே விசேட திட்டத்தின் மூலம் எதிர்பார்ப்பதாகவும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் ஆளுநர் வேண்டிக் கொண்டார்.
அனைத்துப் பாடசாலைகளுக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் வீதம் கடமையாற்ற வேண்டும் எனத் தெரிவித்த அவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இல்லாத பாடசாலைகளுக்கு அதற்கான நியமனங்களை பெற்றுக் கொள்ள உதவுவதாகவும் கூறினார்.
பாடசாலைகள் எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும் எனவும் வேண்டினார். பாடசாலை சுத்திகரிப்பாளருக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை இருப்பதாக அதிபர்கள் முறையிட்டதையடுத்து அவர்களுக்கான கொடுப்பனவுகளை தான் ஏற்பாடு செய்வதாகவும் ஆளுநர் உறுதியளித்தார்.
பாடசாலைகளில் உபயோகப்படுத்த முடியாத உடைந்த தளபாடங்கள் குவித்துவைக்கப்பட்டிருப்பது பாடசாலை சூழலை அவலட்சணப்படுத்துவதனால் அவற்றை பாடசாலைகளிலிருந்து அப்புறப்படுத்தி விடுமாறும் அதிபர்களை வேண்டிக் கொண்டார்.
இந்தக் கலந்துரையாடலில் முஸ்லிம் பாடசாலை அதிபர்களும் மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஜயனத் நாணயக்கார மற்றும் மேலதிகப் பணிப்பாளர் விமல் குணரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்தக் கலந்துரையாடல் மேல் மாகாண ஆளுநரின் காரியாலயத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli