பொருளாதார நெருக்கடிக்கு எதிராக அரபு நாடான சூடானில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர் உயிரிழந்துள்ளதாக அரசசார்பற்ற அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
தேசிய புலனாய்வு பாதுகாப்பு சேவையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது ஆசிரியரான அஹ்மட் அல்ஹைர் உயிரிழந்ததாக சூடான் வைத்தியர்களின் மத்தியகுழு அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. இறப்புக்கான காரணம் இன்னும் எதுவென இது வரை தெரியவரவில்லை.
சூடானிய பொலிஸாரும் தமது பங்கிற்கு இறப்பினை உறுதி செய்துள்ளதோடு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போது ஆசிரியர் சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ளனர்.
விசாரணையின் போது சுகவீனமடைந்த குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும் போது உயிரிழந்ததாக கஸ்ஸாலா மாநிலத்தின் பொலிஸ் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் யாஸீன் ஹஸன் தெரிவித்தார்.
அவரது குடும்பத்தினரிடம் அவரது இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்பட்டு மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இறப்புக்கான காரணம் அவர்மீதான தாக்குதல் காரணமல்ல என்பது தொடர்பில் அவர்கள் திருப்தியடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் பல்கலைக்கழக மாணவரொருவர் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனாதிபதி ஒமர் அல்-ப–சீரை பதவி விலகுமாறு கோரி கடந்த டிசம்பர் நடுப் பகுதியிலிருந்து சூடானில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானதிலிருந்து சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளதாக சூடான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேவேளை இறந்தோரின் எண்ணிக்கை சுமார் 50 என எதிர்த் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
-Vidivelli