இஸ்ரேலிய இராணுவத்தினர் காஸா பள்ளத்தாக்கு மற்றும் மேற்குக் கரையில் 14 பலஸ்தீனர்களைச் சுற்றிவளைத்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவம் தெரிவித்தது.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு பட்டிருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியப்படையினர் மேற்குக் கரையில் ஒன்பது பேரைக் கைது செய்ததாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னவகை செயற்பாடுகள் என அதில் விபரிக்கப்படவில்லை.
இஸ்ரேலிய படையினரின் சோதனை நடவடிக்கையின் போது பெத்தலஹேமில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஹெப்ரோனில் நான்குபேர் கைது செய்யப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
தேடப்படும் பலஸ்தீனர்களை பிடிப்பதற்காக சோதனையிடல் என்ற போர்வையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலியப் படையினர் பரவலான கைது நடவடிக்கைகளில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, தெற்கு காஸா எல்லைக்கு அருகில் ஐந்து பலஸ்தீனர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத தனி நபர்கள் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனத் தரப்பு எண்ணிக்கையின் பிரகாரம் ஏராளமான பெண்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உள்ளடங்கலாக சுமார் 6,400 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
-Vidivelli