தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவான முஸ்லிம் மாணவர்களின் தொகை குறைவு
ஆராயுமாறு கல்வியமைச்சிடம் கோர முஸ்லிம் கல்வி மாநாடு தீர்மானம்
இவ்வருடம் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு கடந்த வருடங்களையும் விடக் குறைவான முஸ்லிம் ஆசிரிய மாணவ மாணவிகளே தெரிவு செய்யப்பட்டுள்ளதால் இது தொடர்பில் ஆராய்ந்து இக் குறையைத் தீர்க்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை கோருவதற்கு அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வாமி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் தலைமையில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் கூட்டத்தில் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொழும்பு முஸ்லிம் பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும் கொழும்பு தெற்குக்கு தமிழ் மொழி ஆண்கள் பாடசாலையொன்றினைக் கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு முஸ்லிம் பாடசாலைகளின் வரலாற்றைத் தொகுத்து நூல் ஒன்றினை வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் செயலாளர் சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ், உப தலைவர் என்.எம். அமீன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-Vidivelli