சுதந்திரத்தை பறிக்கும் செயல்களை தவிர்ப்போம்

0 886

நாட்டின் 71 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான பிரதான வைபவம் எதிர்வரும் திங்கட் கிழமை கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறுகிறது. இவ்வருட சுதந்திர தின பிரதான நிகழ்வில் மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் சாலிஹ் பிரதம அதிதியாக கலந்து கொள்வது சிறப்பம்சமாகும்.

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் 71 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் காலப்பகுதி பல்வேறு வகைகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் பிரதான மற்றும் சமூக ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஆபத்தான காலப்பகுதியாக இது அமைந்துள்ளமை கவனிப்புக்குரியதாகும்.

குறிப்பாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் வன்முறைகளை உருவாக்க முனைகிறார்கள், தீவிரவாதத்தைப் பரப்புகிறார்கள், பௌத்தர்களின் புனிதத்தலங்களை அவமதிக்கிறார்கள் எனும் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ள காலப்பகுதியிலேயே சுந்திர தினம் ஒன்றையும் நாம் கொண்டாடுகிறோம்.

மாவனெல்லை சிலை உடைப்பு சம்பவத்தில் முற்றுமுழுதாக முஸ்லிம் இளைஞர்கள் சம்பந்தப்பட்டுள்ளமையும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து பாரிய தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டமையும் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. தமிழர்கள் மத்தியில் ஆயுதக் குழுக்கள் உருவாகி மூன்று தசாப்த யுத்தத்திற்கு வித்திட்டது போன்று முஸ்லிம்களும் ஆயுதங்கள் மூலமாக இந்த நாட்டில் போராட முனைகிறார்களா எனும் சந்தேகம் பல தரப்புகளிலும் மேலோங்கியுள்ளது. இது மிகவும் ஆபத்தானதொரு நிலைமையாகும்.

இதனால்தான் அண்மையில் கொழும்பில் கூடிய 31 முஸ்லிம் அமைப்புகள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையில் முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் ஒன்றை வெ ளியிட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கவனிக்கத்தக்கன.

” அண்மையில் பௌத்த மத சகோதரர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அசம்பாவிதமொன்று நடந்தேறியிருக்கிறது. சந்தேகத்தின் பெயரில் சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். விசாரணைகளின் பின்னர் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படுவதோடு, நாட்டிலும் இனங்களிடையேயும் அமைதியும் சுபீட்சமும் மலரத் தேவையான அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என அப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

”எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கைகளை எடுத்து, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை வழங்கி, நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன் வன்முறைக்கும், மத நிந்தனைக்கும் இட்டுச் செல்லும் தீவிரவாத சிந்தனைகளைத் தடுத்து நிறுத்துவதில் அரசாங்கம் தனது கடமையை நிறைவேற்ற வேண்டும்” என்றும் அதில் வேண்டப்பட்டுள்ளது.

அதேபோன்று  ”வாலிபர்களுக்கு சிறந்த முறையில் வழிகாட்டும் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் மதஸ்தலங்கள் மற்றும் ஏனைய சமூக நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ”  என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் பள்ளிவாசல்கள், இஸ்லாமிய இயக்கங்கள், முஸ்லிம் சிவில் நிறுவனங்கள் என்பனவும் இளைஞர் சமூகத்தை வழிநடாத்துவதற்கான திட்டங்களை உடன் வகுத்துச் செயற்பட வேண்டியது அவசியமாகும்.  இல்லாதபட்சத்தில் முஸ்லிம்களும் இந்த நாட்டைத் துண்டாடப் பார்க்கிறார்கள், தீவிரவாதத்தைப் போதிக்கிறார்கள் எனும் பிரசாரங்கள் மெய்ப்பட்டுவிடும். இது விடயத்தில் சகலரும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.