ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்க முன் பின்விளைவுகளை கருத்தில் கொள்ளக
ஜனநாயகத்திற்கான சட்டதரணிகள் ஒன்றியம்
ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள், நீதியை எதிர்பார்த்துள்ளவர்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும். எனவே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க முன்னர் ஜனாதிபதி இவ்விடயங்கள் மற்றும் அதன் பின்விளைவுகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென ஜனநாயகத்திற்கான சட்டதரணிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது
நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவிக்கும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமெனப் பலதரப்புகளிலிருந்தும் கோரப்பட்டு வருகின்ற நிலையில், பொதுமன்னிப்பு வழங்குவதற்கு எதிரான கருத்தை ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் ஒன்றிணைவு முன்வைத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இனங்களுக்கிடையிலான வன்முறைகளைத் தூண்டும் வகையில் செயற்பட்டவர் என்ற அடிப்படையில் அனைவராலும் அறியப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமெ வெளியிடப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பில் ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அவதானம் செலுத்தியுள்ளது. நாட்டிற்குள் இன, மத வன்முறைகளைத் தூண்டும் விதத்தில் செயற்பட்டவர் என்ற நீண்ட வரலாற்றை ஞானசாரர் கொண்டிருக்கின்றார். நீதிமன்றத்தை அவமதித்தமை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை அச்சுறுத்திமை என்பன தொடர்பில் மாத்திரமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதேயன்றி, ஏனையவை தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதை கூறவேண்டியுள்ளது.
இந்நிலையில் நாங்கள் பகிரங்கமாகவே சில கருத்துக்களை வெளிப்படுத்துவதுடன், ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னர் சட்டத்தின் ஆட்சி குறித்தும், அரசியலமைப்பு தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். அந்தவகையில் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தை அவமதித்தமை மற்றும் சந்யா எக்னெலிகொடவை அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றங்களுக்காக 6 ஆண்டுகளில் அனுபவித்து முடிக்கும் வகையில் 19 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
அத்தோடு மதுபானம் அருந்திய நிலையில் வாகனம் செலுத்தியதால் விபத்தொன்றுக்கு காரணமாக இருந்தமை என்ற குற்றம் ஞானசார தேரர் மீது ஏற்கனவே பதியப்பட்டுள்ளதாக அறிந்துகொள்ள முடிந்ததுடன், அளுத்கம இனக்கலவரம் தொடர்பில் ஞானசார தேரர் மீதான விசாரணைகள் இன்னமும் நிறைவு செய்யப்படவில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்நிலையில் குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதாயின் சட்டமா அதிபர் மற்றும் நீதியமைச்சினால் கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும். எனினும் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்புக்கோரி சட்டமா அதிபரால் அல்லது நீதியமைச்சினால் கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. இந்நிலையில் பொதுமன்னிப்பு வழங்குவதானது நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் அமையும் வாய்ப்புள்ளதுடன், நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் எவரும் செயற்பட முடியும் என்ற தவறான முன்னுதாரணத்தை மக்களுக்கு வழங்கும் வகையிலும் அமைந்துவிடும். பொதுமன்னிப்பானது சட்டமுறைப்படியும், உரிய அவதானத்துடனும் வழங்கப்படவில்லை எனின் அது தண்டனைகளிலிருந்து பாதுகாக்கப்படும் தவறான கலாசாரத்தை உருவாக்கிவிடும்.
மேலும் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரிய சிலரின் கோரிக்கை கடிதங்களை சுட்டிக்காட்டி புத்தசாசன அமைச்சர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் எமக்கு ஆச்சரியமளிக்கின்றது. ஒரு குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு அளிப்பது தொடர்பில் பங்களிப்பு செய்யத்தக்க அதிகாரம் எவையும் சட்டத்தின் பிரகாரம் புத்தசாசன அமைச்சருக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்துகின்றோம்.
ஞானசாரர் பௌத்தமதம் சார்ந்து செயற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டி அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை நியாயப்படுத்தும் வகையிலான செய்திகள் அண்மையில் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்நிலையில் ஞானசாரர் விடுவிக்கப்பட்டால் அது பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. அதுமாத்திரமன்றி ஏனைய விசாரணைகளிலும், குறிப்பாக இராணுவத்தினர் தொடர்புபட்டுள்ள விவகாரங்கள் மீதான விசாரணைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அத்தோடு ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள், நீதியை எதிர்பார்த்துள்ளவர்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும். எனவே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க முன்னர் ஜனாதிபதி இவ்விடயங்கள் மற்றும் அதன் பின்விளைவுகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-Vidivelli