அடிப்படை வாத சிந்தனையை மையப்படுத்தி ஆயுதக் குழுவொன்றை உருவாக்க எத்தனிப்பு

மாவனெல்லை விவகார புலனாய்வு விசாரணைகளில் அம்பலம்

0 844

கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில்  நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் ஆரம்பமான புத்தர் சிலை உடைப்பு விவகார விசாரணைகள் புதிய கோணத்துக்கு திரும்பியுள்ளன. இது குறித்த விசாரணைகளில், இலங்கையில் அடிப்படைவாத சிந்தனையை மையபப்டுத்தி ஆயுதக் குழுவொன்று உருவாக எத்தனிக்கின்றமை தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்தியுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி.) அது குறித்த விசாரணை வலயத்தை விரிவுபடுத்தியுள்ளனர்.

குறிப்பாக புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் நேரடியாகத் தொடர்புபட்டதாகக் கருதப்பட்டு தேடப்பட்டுவரும் சாதிக் அப்துல்லா, சாஹித் அப்துல்லா ஆகிய சகோதரர்களுக்கு மேலதிகமாக பலராலும் அறியபப்டும் மெளலவி ஒருவர் உள்ளிட்ட மேலும் பலர் அந்த விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

குறிப்பாக நாடளாவிய ரீதியில் புத்தி சாதுர்யமான இளைஞர்களை (18 முதல் 25 வரை வயது) தெரிவு செய்து அவர்களுக்கு அடிப்படைவாத சிந்தனைக்ளை விதைத்து, ஆயுத கலாசாரத்துக்கு மாற்றி யுத்தமொன்றை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு ஒரு குழு செயற்பட்டுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே விசாரணை வலயம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுவரை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தை மையப்படுத்தி இடம்பெற்ற விசாரணைகளில் 15 பேர் (பிரபல மெளலவி ஒருவர் உட்பட) கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே  இவ்விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அறிவியல் தடயங்கள் மற்றும் சாட்சிகளை சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவொன்று சேகரித்து ஆராய்ந்து வருவதாக அறியமுடிகின்றது.

குறிப்பாக 12 ஆவத சந்தேக நபரிடமிருந்து மீட்கப்ப்ட்டுள்ள குன்டு தயரிப்பு செயன்முறை அடங்கிய கையேடு, ரீ 56 ரக துப்பாக்கி பயிற்சிகளைப் பெற்றமை குறித்த விடயம்,  வெளிநாட்டுத் தொடர்புகள், வங்கிக்கணக்குகளை மையபப்டுத்தி  இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“சந்தேக நபர்களிடம் 7 எயார் ரைபிள் ரக துப்பாக்கிகள் இருந்துள்ளன. அவற்றில் நான்கு வணாத்துவில்லுவில் வைத்து கைப்பற்றப்பட்டன. மற்ற ஒன்று 10 ஆவது சந்தேக நபரின் பொறுப்பிலிருந்து சிக்கியது. இன்னும் இரு எயார் ரைபிள்கள் தேடப்படும்  சந்தேக நபர்களின்  பொறுப்பிலிருக்க வேண்டுமென நம்புகின்றோம்.

இது திட்டமிட்ட ஒரு குழு. இவர்களில் இவ்விருவர் வீதம் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள புத்தர் சிலைகள், உருவச் சிலைகளை தகர்க்க நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களின்  நோக்கம் பயங்கரவாத நடவடிக்கைகளும்  இன, மத  மோதல்களும் மட்டுமே.  இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புனைபெயர்கள் இருந்துள்ளன. அந்த புனைபெயர்கள் ஊடாகவே இவர்கள்  அக்குழுவுக்குள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக நம்புகின்றோம். இது ஒரு பயங்கரமான நிலமை” என இந்த விவகார விசாரணைகளைக் கையாளும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர்  விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.

தற்போது சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முழுமையாக சி.ஐ.டி.யால் பொறுப்பேற்கப்பட்டுள்ள நிலையில்,  சி.ஐ.டி. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் பனிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் ஆலோசனைக்கமைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் விக்ரமசேகரவின் கட்டுப்பாட்டில் விஷேட விசாரணைப் பிரிவு அறை இலக்கம் 2 இன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்க தலமையிலான குழுவினரால்  மேலதிக விசாரணைகள் நடாத்தபப்டுகின்றன.

கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி அதிகாலை நேரத்தில் குருநாகல் மாவட்டம் பொதுஹர பொலிஸ் பிரிவின் கட்டுபிட்டிய வீதியில்  கோண்வல பகுதியில் அமையப்பெற்றுள்ள ஆலயம் ஒன்றில் இந்துக் கடவுள்களைக் குறிக்கும் உருவச்சிலைகள் அடையாளம் தெரியாதோரால் அடித்து நொறுக்கி சேதமாக்கப்பட்டன.  இந்த சம்பவம் தொடர்பில் பொதுஹர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது, கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இதனையொத்த ஒரு சம்பவம் யட்டிநுவர – வெலம்பட  பொலிஸ் பிரிவில் பதிவானது.

அதிகாலை 3.00 மணியளவில் வெலம்பட பொலிஸ் பிரிவின் லெயம்கஹவல பகுதியில் மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை அடையாளம் தெரியாதோரின் தககுதலுக்குள்ளானது. அத்துடன் அந்த மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை சேதப்படுத்தப்படும் அதேநேரம்  அதனை அண்டிய பகுதியிலிருந்த மேலும் மூன்று சிறு சிலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்  அதேதினம்  அதிகாலை 4.00 மனியளவில்  மாவனெல்லை – திதுருவத்த சந்தியிலுள்ள புத்தர் சிலையும் தாக்கி  சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போதுதான் இந்த சிலை உடைப்பு விவகாரத்தில் அல்லது இவ்வருவறுக்கத்தக்க சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தடயமும் கிடைத்திருந்தது.

திதுருவத்த சந்தியில் புத்தர் சிலையை தாக்க  மோட்டார் சைக்கிளில்  இருவர் வந்துள்ளனர். இவ்வாறு வந்ததாகக் கூறப்படும் இருவரில் ஒருவரை பிரதேசவாசிகள் துரத்திப் பிடித்து மாவனெல்லை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதுமுதல் இதுகுறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே தற்போது அவ்விடயத்தில் பல அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.