பிலிப்பைன்ஸ் பள்ளிவாசல் ஒன்றில் கொலைவெறி கைக்குண்டுத் தாக்குதல்

0 704

தெற்கு பிலிப்பைன்ஸில் அமைந்துள்ள பள்ளிவாசலொன்றில் மேற்கொள்ளப்பட்ட கொலைவெறி கைக்குண்டுத் தாக்குதல் காரணமாக குறைந்தது இருவர் பலியாகியுள்ளதோடு  4 பேர் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிவாசலினுள் கைக்குண்டு வீசப்பட்டுள்ளதன் காரணமாக இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதோடு நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என பிராந்திய இராணுவப் பேச்சாளர் லெப்டினென்ட் கேர்ணல் ஜெர்ரி பெசானா ஏ.எப்.பி. செய்தி முகவரகத்திடம்  தெரிவித்தார்.

மின்டானோவில் நிலைமகளைச் சீர்செய்து சமாதானத்திற்காக அரசாங்கம் செயற்பட்டு வரும் நிலையில் இவ்வாறான தாக்குதல்கள் வேதனைக்குரியவையாகும் என ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேட்டின் பேச்சாளர் செல்வடோர் பனேலோ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடைபெற்றபோது பாதிக்கப்பட்டவர்கள் பள்ளிவாசலினுள் உறக்கத்தில் இருந்துள்ளனர். இத்தாக்குதல் உள்ளூர் அதிகாரிகளால் உடனடியாகக் கண்டிக்கப்பட்டது.

இவ்வாறான மதநிந்தனை செய்யும் கொலைகளை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. தொழுகையில் ஈடுபடுவேர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மரத்துப்போன மனநிலை மற்றும் கோழைத்தனத்தின் உச்சகட்டமாகும் என பிராந்தியத் தலைவர் முஜீவ் ஹடமான் தெரிவித்தார்.

சம்போஅன்கா தீபகற்ப உலமா சபை இத்தாக்குதலைக் கண்டித்துள்ளதோடு, இதனை அரக்கத்தனமான, பகுத்தறிவற்ற மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடெனக் கூறியுள்ளது.

மின்டானோ சமூகங்களிடையே ஒற்றுமையினை வலியுறுத்தியுள்ள இராணுவம், தவறான தகவலாக மக்களைச் சென்றடைந்துவிடும் என்பதால் சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.