மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம்: 12 ஆவது சந்தேக நபரிடமிருந்து குண்டு தயாரிக்கும் ஆவணம் மீட்பு

இன, மத முறுகலை தூண்டி நாட்டில் யுத்தத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவிப்பு

0 956

( மாவனெல்லை நீதிமன்றிலிருந்து எம்.எப்.எம்.பஸீர்)

கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில்  நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் நொறுக்கி சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் ஆரம்பமான புத்தர் சிலை உடைப்பு விவகார விசாரணைகளில், கைது செய்யப்பட்டுள்ள 15 சந்தேகநபர்களில் 12 ஆம் சந்தேக நபரிடமிருந்து குண்டு தயாரிக்கும் படிமுறைகள் அடங்கிய முக்கிய ஆவணமொன்று மீட்கப்ப்ட்டுள்ளது. புத்தளம், வணாத்துவில்லு – லக்டோ ஹவுஸ் தென்னந்தோப்பில்  வைத்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களைக் கொண்டு எவ்வாறு இந்த குண்டுகளைத் தயாரிக்கலாமெனும் பூரண செயன்முறை அந்த ஆவணத்தில் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) நேற்று மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணாவுக்கு அறிவித்தது. நேற்றைய தினம் குறித்தவழக்கு விசாரணைக்கு வந்தபோதே குற்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 2 இன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்க, வணாத்துவில்லுவில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள், இரசாயனங்களை நீதிமன்றில் ஒப்படைத்து இந்த விடயத்தை தெரிவித்தார்.

அத்துடன் இதன்போது நீதிவான் முன்னிலையில் விசாரணைகளின் நிலைமையை அறிவித்த கேகாலை மாவட்ட தீர்க்கப்படாத குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேரத்ன,  இந்த சிலை உடைப்பு விவகாரம் இன, மதவாதத்தை தூண்டி இலங்கையில் மற்றொரு யுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளின் ஆரம்பம் என்பது  விசாரணைகளில் தெளிவாவதாகக் கூறினார்.

நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.ஐ.டி.யால் வணாத்துவில்லுவில் வைத்து கைது செய்யப்பட்ட  4 சந்தேக நபர்கள் தவிர ஏனைய 11 பேரும் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். விசாரணையாளர்கள் சார்பில் கேகாலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஓ.பி. அமரபந்து, தீர்க்கப்படாத குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேரத்ன,  மாவனெல்லை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள உள்ளிட்டோரும் சி.ஐ.டி. சார்பில் பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்க மற்றும் உபபொலிஸ் பரிசோதகர்  டயஸும் ஆஜராகினர்.

சந்தேக நபர்கள் சார்பில், வெளி மாவட்டம் ஒன்றிலிருந்து வருகைதந்த சட்டத்தரணி ஒருவர் ஆஜராகியிருந்த நிலையில்,  மாவனெல்லை நீதிமன்றில் கடமையாற்றும் அனைத்து சட்டத்தரணிகளும் (நேற்று மன்றில் இருந்தோர்) விசாரணையாளர்களுக்கு கூடுதல் பலமாக பாதிக்கப்பட்டோர் தரப்பில் ஆஜராவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் முதலில் கேகாலை மாவட்ட தீர்க்கப்படாத குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அபேரத்ன, உதவிப் பொலிஸ் பரிசோதகரின் நெறிப்படுத்தலில் மேலதிக விசாரணை நிலைமைகளை தெளிவுபடுத்தினார். அதன்படி,  கேகாலை தீர்க்கப்படாத குற்றவிசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட  சான்றுகள் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

‘  கடந்த ஜனவரி 21 ஆம் திகதி இவ்வழக்கின் 10 ஆவது சந்தேக நபரான மொஹமட் இப்ராஹீம் என்பவரின் (இப்ராஹீம் மெளலவி) பொறுப்பிலிருந்த, சிலை உடைப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளும் தலைக்கவசமும் கைப்பற்றப்பட்டன. அத்துடன்  அவரிடமிருந்து ஹுவாவி ரக தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டது. அவை கைப்பற்றப்பட்ட வீட்டுச் சோதனையின் போது சிக்கிய வெடிமருந்தென சந்தேகிக்கப்படும் தூள், அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப அனுமதி கோருகின்றோம். (அனுமதி வழங்கப்பட்டது). அதேநேரம் அந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட எயார் ரைபிள் தொடர்பில் மேலதிக விசாரணை நடக்கின்றது. இந்நிலையில் இன்று முதல் இந்த விவகாரம் குறித்த விசாரணைகளை நாம் பூரணமாக சி.ஐ.டி.யிஒடம் ஒப்படைக்கின்றோம் என்றார்.

இதனையடுத்து சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்க மன்றுக்கு விசாரணை நிலமையை விளக்கினார்.

“இதுவரை நாம், இந்த சிலை உடைப்பு விவகாரத்தில் மாவனெல்லை, கேகாலை பொலிஸாருக்கு உதவியாகவே விசாரணைகளை முன்னெடுத்தோம். இன்று முதல் குற்றவியல் சட்டக் கோவையின் 125 ஆம் அத்தியாயத்துக்கமைய அந்த விசாரணைகளை நாம் முழுமையாகப் பொறுப்பேற்கின்றோம்.

முதலில் நாம் இந்த விவகாரத்தில்  தற்போதும் தேடபப்டும் பிரதான சந்தேக நபர்கள் இருவரை (சாதிக் அப்துல்லா, சாஹித் அப்துல்லா) தேடி விசாரித்தோம்.  இதன்போது சி.ஐ.டி.யினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, வணாத்துவில்லு பொலிஸ் பிரிவின் லக்டோ ஹவுஸ் எனும் இடத்தில் தென்னந்தோப்பு ஒன்றுக்குள்ளிருந்து நாம்  பெருமளவு வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றுடன்  4 சந்தேக நபர்களைக் கைது செய்தோம்.

அந்த இடம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான பயிற்சி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு இடம் என்பது விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது நாம்  நைட்ரேட், சிட்றிக் அமிலம், டெடனேட்டர்கள் என பல அடையாளம் காணப்பட்ட  பொருட்களை மீட்டோம்.

(மீட்கப்ப்ட்ட அத்தனை பொருட்கள்யும் சி.ஐ.டி.யின் உப பொலிஸ் பரிசோதகர் டயஸினால் தனியான ஜீப் வண்டியில் நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்ததுடன், அதன் மாதிரிகள் சிறு பெட்டியொன்றில்  அடைக்கப்பட்டு நீதிவானிடம் முன்வைக்கப்பட்டது)

வணாத்துவில்லுவில் நான்கு சந்தேக நபர்களையும் வெடிபொருட்களுடன்  பயங்கரவாத தடைச் சட்டத்தின் 6(1) ஆம் ஷரத்தின் கீழ் கைது செய்ததுடன், அவர்களுக்கு எதிராக அச்சட்டத்தின் 9(1) ஆம் ஷரத்தின் கீழ் தடுப்புக்காவல் அனுமதி பெற்று விசாரித்து வருகின்றோம்.

இதில் இந்த சிலை உடைப்பு விவகாரமானது, இலங்கை முழுவதுமுள்ள புத்திசாலித்தனம் மற்றும் திறமைமிக்க  இளைஞர்களை இணைத்து திட்டமிட்ட வகையில்  முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்பது தெரியவந்துள்ளது.  இவர்களின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து தற்சமயம் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றோம்.

எமது தடுப்பிலுள்ள நான்கு சந்தேக நபர்கள் உட்பட பலரின் (  சி.ஐ.டி. பொறுப்பிலுள்ள நால்வருடன், 9,10,11 ஆம் சந்தேக நபர்களின்) வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய வேண்டியுள்ளது.  எனவே, அதற்கான அனுமதியையும் அவர்களது தொலைபேசி அழைப்புக்கள் குறித்த பகுப்பாய்வுக்கான அனுமதியையும் வழங்குமாறு கோருகின்றோம். (அனுமதி வழங்கப்பட்டது).

அதன்படி இவ்வழக்கில் வழக்குப் பொருட்களாக 40 பொருட்கள் மன்றில் சமர்ப்பிக்கப்படுகின்றன. அவை தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை பெறவும், டெடனேட்டர் தொடர்பில் மட்டும் அதனை அழிக்க கேகாலை அதிரடிப்படை கட்டளைத் தளபதிக்கு உத்தரவிடுமாறும்  குற்றவியல் சட்டத்தின் 124 ஆம் அத்தியாயத்துக்கு அமையக் கோருகின்றோம் (உத்தரவளிக்கப்பட்டது).

இந்த விவகாரத்தில் நாம் முன்னெடுக்கும் விசாரணைகளில் தற்போது  எமது தடுப்பிலுள்ள 12 ஆவது சந்தேக நபரிடமிருந்து ஓர் ஆவணத்தை நாம் மீட்டுள்ளோம்.  அந்த ஆவணத்தில் லக்டோ ஹவுஸ் தோட்டத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள், இரசாயனங்களைக் கொண்டு எவ்வாறு குண்டொன்றினை உருவாக்குவது, தயாரிப்பது என்பது குறித்த பூரண வழிகாட்டல் குறிப்புக்கள் இருக்கின்றன.  அதுகுறித்து மேலதிக விசாரணைகள் நடக்கின்றன” என்றார்.

இதன்போது சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி,   “இங்கு கூண்டிலுள்ள சந்தேக நபர்கள் எவரும் இக்குற்றத்துடன் தொடர்பற்றவர்கள். அவர்கள் சமய வகுப்புக்களுக்கு சென்றமை உண்மை. தற்போது தேடபப்டும் சந்தேக நபர்கள் இருவரின் சமய வகுப்புக்களில் கலந்துகொண்டமை எனும் ஒரே காரணத்துக்காக அவர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளனர்.

எனவே, தேடபப்டும் இருவரையும் விரைவில் கைது செய்து, இங்குள்ளவர்கள் நிரபராதிகள் என்பதை வெளிப்படுத்தவும். எயார் ரைபிள்களை பயன்படுத்தவோ வைத்திருக்கவோ அனுமதி தேவையில்லை. எனவே அதனை உடன் வைத்திருந்தமை குற்றமாகாது” என கூறினார்.

சந்தேக நபர்களுக்கு பிணையளிக்க சி.ஐ.டி. கடும் எதிர்ப்பு வெளியிட்டது.

சந்தேக நபர்களின் சட்டத்தரணி முன்வைத்த கருத்துக்களை பொலிசார் மறுத்தனர்.

சி.ஐ.டி.யின் பொலிஸ் பரிசோதகர் ஜனக மாரசிங்கவும்,  கேகாலை தீர்க்கப்படாத குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேரத்னவும் மாறி மாறி அச்சட்டத்தரணியின் வாதத்துக்கு எதிரான விசாரணைத் தகவல்களை முன்வைத்தனர்.

“சந்தேக நபர்களிடம் 7 எயார் ரைபிள் ரக துப்பாக்கிகள் இருந்துள்ளன. அவற்றில் நான்கே வணாத்துவில்லுவில் வைத்து கைப்பற்றப்பட்டன. மற்ற ஒன்று 10 ஆவது சந்தேக நபரின் பொறுப்பிலிருந்து சிக்கியது. இன்னும் இரு எயார் ரைபிள்கள் தேடப்படும் சந்தேக நபர்களின்  பொறுப்பிலிருக்க வேண்டுமென நம்புகின்றோம்.

இவர்கள் சமய வகுப்புக்களில் கலந்துகொள்ளவில்லை. இது திட்டமிட்ட ஒரு குழு. இவர்களில் இருவர் வீதம் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள புத்தர் சிலைகள், உருவச் சிலைகளை தகர்க்க நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களின் நோக்கம் பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் இன, மத  மோதல்களை உருவாக்குவது மட்டுமே. இவை விசாரணைகளில்  வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

வணாத்துவில்லு தோட்டம் பயிற்சி நிலையமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.  எயார் ரைபிள்களை பயன்படுத்த அனுமதி தேவை இல்லை. எனினும் இங்கு தெளிவாக அவை  சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தெல்கஹகொட பள்ளிவாசல் செயலாளர் உள்ளிட்ட மூவரின் வாக்குமூலங்களில் மிகத் தெளிவாக 10 ஆவது சந்தேக நபர் தொடர்பில் கூறியுள்ளனர்.  இன, மத முறுகலை தூண்டி, இலங்கையில் யுத்தமொன்றினை பிரகடனம் செய்யும் வகையில் அவரது போதனைகள் இருந்ததாக அவ்வாக்குமூலங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

அத்துடன் இவர்கள் சமய வகுப்புக்கள் எனக் கூறும் அந்த வகுப்புக்களில் தான், ரீ 56 ரக துப்பாக்கிகள் கழற்றி , பூட்டி எவ்வாறு பயன்படுத்துவது என்ற பயிற்சி அளிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  எயார் ரைபிள்கள், இலக்குகள் தொடர்பில் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

10 ஆவது சந்தேக நபரின் வீட்டிலிருந்து, இக்குழு தொடர்புகொள்ளப் பயன்படுத்திய  வோக்கி டோக்கிகள் இரண்டு மீட்கப்பட்ட நிலையில் அதுகுறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

இந்த திட்டமிட்ட குழு எதிர்காலத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்த திட்டம் தீட்டியவர்கள்.  இங்குள்ள ஒவ்வொரு சந்தேக நபர்களுக்கும் ஒவ்வொரு புனை பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனூடாகவே அவர்களுக்குள் தொடர்பாடல்கள் இடம்பெற்றுள்ளன” என்றனர்.

அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான் உபுல் ராஜகருணா,  சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க தமக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, அவர்களை எதிர்வரும் பெப்ரவரி 13 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். அத்துடன் அன்றைய தினம் 90 நாள் காவலிலுள்ள நான்கு சந்தேக நபர்களையும் மேற்பார்வைக்காக மன்றில் ஆஜர்படுத்தவும் உத்தர்விட்டார்.

கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி அதிகாலை நேரத்தில் குருநாகல் மாவட்டம் பொதுஹர பொலிஸ் பிரிவின் கட்டுபிட்டிய வீதியில்  கோணவல பகுதியில் அமையப்பெற்றுள்ள ஆலயம் ஒன்றில் இந்து கடவுள்களைக் குறிக்கும் உருவச்சிலைகள் அடையாளம் தெரியாதோரால் அடித்து நொறுக்கி சேதமாக்கப்பட்டன.  இந்த சம்பவம் தொடர்பில் பொதுஹர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி இதனையொத்த ஒரு சம்பவம் யட்டிநுவர – வெலம்பட  பொலிஸ் பிரிவில் பதிவானது.

அதிகாலை 3.00 மணியளவில் வெலம்பட பொலிஸ் பிரிவின் லெயம்கஹவல பகுதியில் மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை அடையாளம் தெரியாதோரின் தாக்குதலுக்குள்ளானது. அத்துடன் அந்த மூன்றரை அடி உயரமான புத்தர் சிலை சேதப்படுத்தப்படும் அதேநேரம் அதனை அண்டிய பகுதியில் இருந்த மேலும் மூன்று சிறு சிலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்  அதேதினம்  அதிகாலை 4.00 மனியளவில்  மாவனெல்லை – திதுருவத்த சந்தியில் உள்ள புத்தர் சிலையும் தாக்கி  சேதபப்டுத்தப்பட்டுள்ளது. இதன்போதுதான் இந்த சிலை உடைப்பு விவகாரத்தில் அல்லது இவ்வருவறுக்கத்தக்க சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தடயமும் கிடைத்திருந்தது.

திதுருவத்த சந்தியில் புத்தர் சிலையை தாக்க  மோட்டார் சைக்கிளில்  இருவர் வந்துள்ளனர். இவ்வாறு வந்ததாகக் கூறப்படும் இருவரில் ஒருவரை பிரதேசவாசிகள் துரத்திப் பிடித்து மாவனெல்லை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அது முதல் இதுகுறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே தற்போது அவ்விடயத்தில் பல அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.