உலகில் முரண்பாடுகள் காணப்படும் எட்டு வலயங்களில் சுமார் 56 மில்லியன் மக்களுக்கு அவசர உணவுத் தேவையும் வாழ்வாதார உதவிகளும் தேவைப்படுவதாக கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யெமன், தெற்கு சூடான், ஆப்கானிஸ்தான், கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசு ஆகிய ஐந்து வலயங்களுமே முரண்பாடுகள் காரணமாக உணவுத் தேவை ஏற்பட்டுள்ள வலயங்களாகும். பெரும்பாலானவை 2018 ஆண்டின் பிற்பகுதியிலேயே அதிக தேவைப்பாட்டைக் கொண்டிருந்ததாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்காக உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றினால் தயாரிக்கப்பட்டது.
முரண்பாடுகள் நிலவுகின்ற மேலும் மூன்று வலயங்களான சோமாலியா, சிரியா, லேக் சாட் நதிப்படுகை ஆகியவற்றில் பாதுகாப்பு பலமடைந்ததையடுத்து உணவுப் பாதுகாப்பும் மேம்பட்டுள்ளது.
ஆயுத வன்முறைகள் மில்லியன் கணக்கான ஆண்கள் , பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் துலாம்பரமாகத் தெரிவதாக அந்த அறிக்கையில் காணப்படுவதாக உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் ஜோஸ் கிரஸியானோடா சில்வா தெரிவித்தார்.
அனைத்து முரண்பாட்டு வலயங்களிலுமுள்ள மேலும் தேவையுள்ள மக்களைச் சென்றடைவதற்கு சிறந்ததும் விரைவானதுமான வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டேவிட் பீசெலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனிதாபிமானப் பணியாளர்களுக்கு எதிராக தற்போது அதிகரித்து வரும் தாக்குதல்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கை அதன் காரணமாக மனிதாபிமான உதவி வழங்கும் நிறுவனங்கள் தமது சேவையினை இடைநிறுத்திக் கொள்வதற்கும் உதவி தேவைப்படும் ஆபத்திற்குள்ளான மக்களுக்கு உதவி கிடைக்காமல் போவதற்கும் வழியேற்படும் எனவும் தெரிவித்துள்ளது.
-Vidivelli