போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை அவமதிப்போர் போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டோர்

ஜனாதிபதி மைத்திரி காட்டம்

0 617

போதைப்பொருள் ஒழிப்புக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை அவமதிக்கின்றவர்கள் போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்களேயாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எத்தகைய தோற்றத்தில் இருந்தபோதும் அவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணத்திற்கு அடிமையானவர்களாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்றைய தினம் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் இடம்பெற்ற “போதையிலிருந்து விடுதலைப்பெற்ற நாடு” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இதுவரை முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை பலப்படுத்துவதைப் போன்று பாடசாலை பிள்ளைகள் மற்றும் அரச அதிகாரிகளை இலக்காகக்கொண்ட விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் எதிர்வரும் சில மாதங்களில் நடைமுறைப்படுத்தவுள்ளன.

எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளை தோற்கடிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட யுத்தத்திற்கு சமமான யுத்தமொன்றை போதைப்பொருள் சவாலை முறியடிப்பதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை வழங்கும் தீர்மானத்தையும் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

தேரவாத பௌத்த தத்துவத்திற்கு எதிராக இன்று பல்வேறு சக்திகள் செயற்படுவதாகவும் பௌத்த தத்துவத்தை திரிபுபடுத்தி காட்டுவதற்கு முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகள், கலாசார பெறுமானங்களை அழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளைபோன்று போதைப்பொருள் கடத்தலும் நாட்டை அழிவுக்குள்ளாக்குவதற்காக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். இந்த விடயத்தில் கடுமையான தீர்மானங்களை மேற்கொண்டு தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றி தாய்நாட்டை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின்கீழ் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலில் நடைமுறைப்படுத்தப்படும், “போதையிலிருந்து விடுதலைப்பெற்ற நாடு” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக இடம்பெறும் மாவட்ட மீளாய்வு நிகழ்ச்சித்திட்டத்தின் 13 ஆவது நிகழ்ச்சித்திட்டம் மாத்தறை மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்றது.

மாத்தறை மாவட்ட பாடசாலை போதைப்பொருள் ஒழிப்பு பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ சின்னங்களை அணிவித்தல், நான்கு கிராமிய போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் மற்றும் 03 பாடசாலை போதைப்பொருள் ஒழிப்பு குழுக்களை பாராட்டி சான்றிதழ்களும் வழகப்பட்டன.

அமைச்சர் மங்கள சமரவீர, பிரதி அமைச்சர் புத்திக பத்திரன, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் சந்ரசிறி கஜதீர, மாகாண அமைச்சர்களான சந்திமா ராசபுத்ர, மனோஜ் சிறிசேன ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், மாத்தறை மாவட்ட செயலாளர் பிரதீப் ரத்னாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகளும், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.