பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களுக்கிடையிலான கூட்டு ஒப்பந்தம் நேற்று முன்தினம் கைச்சாத்திடப்பட்டது. நீண்டகால இழுபறியின் பின்பு பல்வேறு போராட்டங்களின் மத்தியிலே இந்தக் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் சந்தர்ப்பத்தில் கூட முதலாளிமார் சம்மேளனத்தின் காரியாலயம் முன்பாகவும் நாட்டின் பல பகுதிகளிலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
தோட்டத் தொழிலாளர்கள் தங்களது அடிப்படை நாள் சம்பளத்தை 1000 ரூபாவால் அதிகரிக்கக் கோரியே போராட்டங்களை நடத்தி வந்தனர். தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இப்போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு துறையினர் கலந்து கொண்டார்கள்.
கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய கூட்டு ஒப்பந்தத்தின் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவிலிருந்து 700 ரூபாவாகவே அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் தொழிலாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
உண்மையில் இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும். இல்லையேல் எமது நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பெருந்தோட்டங்கள் வெகுவாகப் பாதிக்கப்படலாம்.
தோட்டத்தொழிலாளர்கள் முன்பு அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாவும், தேயிலைக்கான விலைக்கொடுப்பனவாக 30 ரூபாவும், வரவுக்கொடுப்பனவாக 60 ரூபாவும், உற்பத்திக் ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140 ரூபாவும், ஆக மொத்தமாக 730 ரூபா பெற்று வந்தனர்.
நேற்று முன்தினம் கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய கூட்டு ஒப்பந்தத்தின் படி தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு தேயிலைக்கான விலைக்கொடுப்பினை 30 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியாக 105 ரூபாவும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக தற்போது நாள் சம்பளம் 855 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் தங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வரவு கொடுப்பனவும், உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவும் புதிய கூட்டு ஒப்பந்தத்தில் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அரசாங்கத்தின் திறந்த பொருளாதார கொள்கையினையடுத்து நாட்டின் வருமானத்திற்கு ஏனைய துறைகள் பங்களிப்பு செய்தாலும் பெருந்தோட்டத் துறையே தொடர்ந்தும் இதில் பெரும் பங்கு வகிக்கிறது. நாட்டிற்கு தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை தோட்டத்துறைகள் மூலம் வருடாந்தம் சுமார் 300 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கிறது.
எமது நாட்டிற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தருவதற்குத் துணைபுரியும் தோட்டத்துறை தொழிலாளர் சமூகம் தொடர்ந்தும் வறுமைக்கோட்டிலே தங்கியிருக்கிறது. இவர்களில் அநேகர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம், கல்வி, கலாசாரம், வாழ்க்கை உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் பின்தங்கிய நிலையிலே இருக்கிறது.
அவர்களுக்கென்று சொந்த நிலம் இல்லை, சொந்த வீடுகள் இல்லை, பெரும்பான்மையோர் 10×10 அடி லயன் அறைகளிலே சிறைப்பட்டு இருக்கிறார்கள். குடும்பமாக சிறிய அறையில் வாழ்வதால் பல சமூக சீரழிவுகளுக்கும் அது காரணமாய் அமைந்துள்ளது. அதனால் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு திட்டங்களை வகுக்க வேண்டும். முதற்படியாக அவர்களது அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும். இந்த மக்களின் நியாயமான இந்தக் கோரிக்கை உடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
-Vidivelli