தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலக வேண்டியதில்லை
நாங்கள் நீதிமன்றம் நாடவுள்ளோம் என்கிறார் லக்ஷ்மன் யாப்பா
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதவி விலக வேண்டிய அவசியமேதும் கிடையாது. மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு பொதுஜன பெரமுன நீதிமன்றத்தை நாடவுள்ளது. இவ்விடயத்தில் தேர்தல் ஆணைக்குழு ஒத்துழைப்பு வழங்கினால் பாரிய பலமாகக் காணப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் அறிவிக்காவிடின் தனது பதவியை துறப்பதாக தேர்தல் ஆணையகத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளமையானது வருந்தத்தக்கது. இன்று மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திடம் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தில் பல நெருக்கடிகள் காணப்பட்ட பொழுதும் கூட தேர்தல்கள் உரிய காலத்தில் முறையாக இடம் பெற்றன.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகுவது என்பது பொருத்தமற்ற விடயமாகும். தேர்தலை விரைவுப்படுத்த கடந்த காலங்களில் தேர்தல் ஆணையாளர் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலே முடிந்துள்ளன. கட்சித் தலைவர்களுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் முரண்பாடுகளை தோற்றுவிப்பதாகவே அமைந்தன. பேச்சுவார்த்தைகளை இனி முன்னெடுப்பதால் எவ்விதமான தீர்மானங்களும் பெறமுடியாது. ஆகவே மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக பொதுஜன பெரமுனவினர் தற்போது நீதிமன்றத்தை நாடத் தீர்மானித்துள்ளனர். இதற்கு தேர்தல்ஆணைக்குழுவின் தலைவரும், ஆணையகமும் ஒத்துழைப்பு வழங்கினால் பாரிய பலமாகக் காணப்படும்.
மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினரை தவிர்த்து பிற கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இன்றை நிலையில் மாகாண சபை தேர்தலை புதிய முறையில் நடத்துவது சாத்தியமற்ற விடயமாகும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியினர் மாத்திரமே புதிய முறையில் தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு காலதாமதத்தை ஏற்படுத்தி தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கின்றது.
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை விடுக்காமல் நவம்பர் மாதம் இழுத்தடிப்பினை மேற்கொண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பினை விடுப்பதே அரசாங்கத்தின் பிரதான திட்டமாகக் காணப்படுகின்றது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஜனாதிபதி தேர்தல் எப்போது இடம்பெற வேண்டும் என்பதை ஜனாதிபதி உரிய காலத்தில் தீர்மானிப்பார் .தற்போது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கவனம் செலுத்துவது தேவையற்ற விடயமாகும். ஆனால் இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான கவனம் செலுத்துகின்றது. எவ்வாறேனும் இவ்வருடத்தில் முதலில் மாகாண சபை தேர்தலே இடம்பெறும். இதற்காக எந்நிலைக்கும் செல்லத் தயார் என்றார்.
-Vidivelli