கலப்பு தேர்தல் முறை சிறுபான்மைருக்கு பெரும் பாதிப்பு
தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பிரதிநிதித்துவத்தை இழப்பரென எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டு
கலப்பு தேர்தல் முறையின் மூலம் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகம் தங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை இழக்கும் நிலை உள்ளது. அதனால் இந்த சட்டமூலத்தில் திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும். சிறுபான்மை சமூகம் பரந்து வாழ்வதால் தற்போதுள்ள சட்டத்தின் மூலம் உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் கே. தவலிங்கம் தெரிவித்தார்.
புதிய கலப்பு தேர்தல் முறையின் கீழ் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்குள்ள சவால்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்;
‘எல்லை நிர்ணயத்தில் ஒவ்வொரு சமூகத்துக்கும் சனத்தொகைக்கேற்ப மாவட்ட ரீதியில் தேர்தல் தொகுதியைப் பிரிக்க முடியாது. அவ்வாறு பிரிப்பது மிகவும் கடினமாகும். சிறுபான்மை சமூகம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழாமல் பரந்து வாழ்வதே இதற்குக் காரணமாகும். ஆனால் பழைய விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் மாவட்டமே தொகுதியாக எடுக்கப்படுவதால் இந்தப் பிரச்சினை இல்லை.
கலப்பு தேர்தல் முறையும் ஒரு விகிதாசார தேர்தல் முறையாக இருந்தாலும் சிறுபான்மை சமூகத்தினரை பெரும்பான்மைக்கட்சிகள் தேர்தலில் போட்டியிட உள்வாங்கிக் கொள்ளுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. கலப்பு தேர்தல் முறைமை கொண்டு வரப்பட்டால் போனஸ் ஆசனம் மூலமே இந்தப் பிரச்சினையத் தீர்க்க முடியும்.
போனஸ் ஆசனங்களின் எண்ணிக்கை மாகாண ரீதியில் அதிகரிக்கப்பட்டால் சமூகங்களுக்கு இடையிலான விகிதாசாரத்துக்கேற்ப உறுப்பினர்களை தெரிவு செய்துகொள்ள முடியும். எனவே இதற்கேற்ப கலப்பு தேர்தல் முறைக்கான சட்ட மூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
தமிழ், முஸ்லிம் சமூகம் பெரும்பாலான இடங்களில் பரந்து வாழ்வதால் தற்போதுள்ள சட்டத்தின் மூலம் உரிய பிரதிநிதித்துவத்தினைப் பெற்றுக்கொள்ள முடியாது.
எனவே, கலப்பு தேர்தல் முறையில் தேவையான திருத்தங்களை உள்வாங்கிக் கொள்வதற்கு தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’ என்றார்.
-Vidivelli