இஸ்ரேல் ஒரு குற்றவாளி நாடாகும் மலேசிய பிரதமர் குற்றச்சாட்டு

0 653

இஸ்ரேல் ஒரு குற்றவாளி நாடாகக் காணப்படுகின்றதென மலேஷிய பிரதமர் மஹதிர் மொஹம்மட் கடந்த திங்கட்கிழமையன்று விமர்சித்துள்ளார். பலஸ்தீன மக்களுக்கான தனது ஆதரவினைத் தெரிவித்து வலைத்தளமொன்றில் அவர் எழுதியுள்ள பதிவில், இஸ்ரேல் ஒரு குற்றவாளி நாடாகக் காணப்படுகின்றது. அது கண்டிக்கப்பட வேண்டிய நாடாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களுக்கு மலேஷியா விசா வழங்க மறுத்ததையடுத்து இவ்வருட போட்டியினை மலேஷியாவில் நடத்துவதற்கான அனுமதியை சர்வதேச பரா ஒலிம்பிக் அமைப்பு மீள்ப்பெற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்தே மலேஷிய பிரதமர் மஹதிரின் இக்கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்களுக்கு உறுதியான ஆதரவு நிலையினைக் கொண்ட முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மலேஷியா இஸ்ரேலுடன் எவ்வித இராஜதந்திரத் தொடர்புகளையும் கொண்டிருக்காத நாடாகும்.

படுகொலைகளை மேற்கொள்ளும் ஒரு தேசம் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ள மஹதிர், எமது நாட்டுக்குள் இஸ்ரேலியர்களை அனுமதிப்பதில்லை என்ற எமது நிலைப்பாட்டை நாம் தொடர்ந்தும் பேணி வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் எமது இந்த நிலைப்பாட்டை கண்டிக்குமானால் அந்த நாடுகள் இரட்டை முகம் கொண்டவை என கூறுவதற்கு எமக்கு உரிமை உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வசன வாக்கெடுப்போ அல்லது மக்கள் அபிப்பிராயமோ பெறப்படாது, பலஸ்தீன நிலத்தின் ஒரு பகுதியிலேயே இஸ்ரேல் உருவாக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள மஹதிர், தமது வீடுகளிலிருந்தும் நிலத்திலிருந்தும் வெளியேற்றப்பட்ட பலஸ்தீன மக்கள் எவ்வித நட்டஈடுகளுமின்றியே வெளியேற்றப்பட்டனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலஸ்தீனதின் மீது யார் அனுதாபம் காட்டுகிறார்களோ அவர்கள் அனைவரும் இஸ்ரேலின் அப்பட்டமான மனிதாபிமானற்ற செயல்களுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதற்கு முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேலினால் பலஸ்தீன மக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற அநீதியினையும் அடக்குமுறையினையும் முழு உலகமும் பார்த்துக்கொண்டே இருக்கின்றது. ஆனால் அடக்குமுறையிலிருந்து சுதந்திரம் பெற்றுக்கொள்வது பற்றியும் சட்டத்தின் ஆட்சி பற்றியும் வாய்கிழியப் பேசுவோர் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மலேஷியா யூதர்களுக்கு எதிரான நாடல்ல எனக் குறிப்பிட்டுள்ள மஹதிர், மனிதாபிமானமற்ற செயற்பாடுகளும் அடக்குமுறை நடவடிக்கைகளும் யாரால் மேற்கொள்ளப்பட்டாலும் எங்கு மேற்கொள்ளப்பட்டாலும் அதனைக் கண்டிக்கின்ற உரிமை மலோஷியாவுக்கு உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.