சிரிய அகதிகள் பாதுகாப்பாக திரும்பிச்செல்ல உருவாக்கப்படும் பாதுகாப்பு வலயம் உதவும்
துருக்கி ஜனாதிபதி அர்துகான் தெரிவிப்பு
துருக்கி அடைக்கலம் வழங்கியுள்ள சிரிய அகதிகள், பாதுகாப்பாக தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டுமென்பதை இலக்காகக் கொண்டே பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டுள்ளது என துருக்கிய ஜனாதிபதி றிசெப் தைய்யிப் அர்துகான் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமையன்று இஸ்தான்பூலில் பேசிய அர்துகான், சுமார் 300,000 சிரிய அகதிகள் வடக்கு சிரியாவின் துருக்கியின் ஆதரவுடனான கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு மீளத் திரும்பிவிட்டனர் எனத் தெரிவித்ததோடு மில்லியன் கணக்கான சிரிய மக்கள் பாதுகாப்பு வலயத்தினூடாக மீளத் திரும்புவதற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
துருக்கி சுமார் நான்கு மில்லியன் சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளது. கடந்த மாதம் சிரியாவிலிருந்து 2000 அமெரிக்கப் படையினரை விலக்கிக் கொள்ளப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் அறிவித்தல் விடுத்திருந்ததைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அர்துகான், இரு தலைவர்களும் துருக்கியுடனான யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் எல்லைப் பகுதி நெடுகிலும் 32 கிலோ மீற்றர் தூரத்திற்கு ஆழமான பாதுகாப்பு வலயமொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
சில மாதங்களில் இந்தப் பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டுவிடுமெனத் துருக்கி எதிர்பார்க்கிறது. இல்லாவிட்டால் ஏனைய நாடுகளின் உதவியின்றி துருக்கியே பாதுகாப்புப் பிரதேசமொன்றை உருவாக்குமெனக் கடந்த வெள்ளிக்கிழமை அர்துகான் தெரிவித்திருந்தார்.
பயங்கரவாதிகளிடமிருந்து துருக்கியைப் பாதுகாப்பதும் இதன் நோக்கமாகுமென அவர் தெரிவித்திருந்தார். இதில் அவர் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட்டது துருக்கியுடனான வடகிழக்கு சிரியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ஆதரவுடனான சிரிய குர்திஸ் துணைப் படையினரையாகும்.
ஜ.எஸ். அமைப்புக்கு எதிராகப் போரிடுவதற்கு அமெரிக்காவினால் ஆயுதம் வழங்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட குர்திஸ் மக்கள் பாதுகாப்புப் பிரிவின் போராளிகளும் வலயத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமெனத் துருக்கி விரும்புகின்றது.
-Vidivelli