கிண்ணியாவில் மணல் அகழ்வில் ஈடுபட்டோர் மீது கட,ற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம்

0 687

(கியாஸ் ஷாபி, ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிண்ணியா பிரதேசத்தில் மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சமயம், அதிலிருந்து தப்பிக்க முற்பட்ட இருவர் ஆற்றில் பாய்ந்து மூழ்கி காணாமல் போன நிலையில் நேற்று மாலை ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிண்ணியா இடிமண் பிரதேசத்தைச் சேர்ந்த  22 வயதான றபீக் பாரிஸ் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை ஆற்றில் பாய்ந்த மற்றொரு இளைஞரான 19 வயதான பஸீது றமீஸின் சடலத்தை தேடும் பணி நேற்றிரவு வரை தொடர்ந்தது.

இதேவேளை இவர்களுடன் இணைந்து தப்பிக்க முயன்று ஆற்றில் பாய்ந்த மற்றொருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து பிரதேசத்தில் பதற்ற நிலை தோன்றியதுடன் பொது மக்களுக்கும் கடற்படையினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்றுக் காலை கிண்ணியா கண்டல்காடு சாவாறு கீரைத்தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஆற்று மணல் ஏற்றி விற்பனை செய்யும் முதலாளிமார்களுக்கு கூலிக்காக மூன்று இளைஞர்கள் டிப்பர் வண்டியில் மணல் ஏற்றச் சென்றுள்ளனர்.

இந் நேரத்தில் சட்டவிரோதமான முறையில்  மணல் அகழ்வில் ஈடுபடுவதாக  கடற் படையினருக்கு  தகவல் கிடைத்ததையடுத்து குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து மணல் ஏற்றிக் கொண்டிருந்த மூவரில் இருவர் ஆற்றில் பாய்ந்துள்ளனர். மற்றொருவரும் ஆற்றில் பாய்ந்து தப்பிக்க முற்படுகையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பிரதேசத்தில் ஒன்றுகூடிய பொது மக்களும் மீனவர்களும் பாதுகாப்பு படையினரும் ஆற்றில் மூழ்கியோரைத் தேடும் பணியில் ஈடுபட்ட அதேநேரம், துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கெதிராக பிரதேச மக்கள் தமது எதிர்ப்பையும் வெளியிட்டனர். இதனையடுத்து பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் மேலதிகமாக பொலிஸாரும் இராணுவத்தினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறைமுகங்கள் கப்பல்துறை இராஜாங்க பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ருப் வருகை தந்து கடற்படை உயரதிகாரிகளை அழைத்து கலந்துரையாடினார். இதன்போது துப்பாக்கிச் சூட்டு பிரயோகம் மேற்கொண்ட  படை அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடற்படை உயரதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அங்கு சுமுக நிலை தோன்றியது.

இதற்கிடையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொது மக்களுடன் ஏற்பட்ட மோதலில் 12 கட்றபடையினர் காயமடைந்துள்ளதாகவும் இதில் படுகாயமடைந்த  4 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

அத்துடன், இப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கிண்ணியா பொலிசார் உட்பட பொலிஸ் அதிரடிப்படையினர் ஒன்றிணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மகாவலி  ஆற்றில் சட்டவிரோத  மணல்  அகழ்வு நடவடிக்கைகளினால் ஆற்றுநீர்  குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது . இந்த நிலையை கட்டுப்படுத்தும் வகையில் ஜனாதிபதியினால் கடற்படையினருக்கு விடுக்கப்பட்ட  வேண்டுகோளுக்கிணங்க  மகாவலி  அற்றில்  சட்டவிரோத  மணல்  அகழ்வு மற்றும் கடத்தலில்  ஈடுபடுவோரை  கைது செய்யும்  நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை  நேற்று முன்தினம்  கண்டல்காடு , மகாவலி ஆற்றில்  சட்ட விரோத  மணல் கடத்தலில்  ஈடுபட்ட  6 படகுகளும்  நேற்றையதினம்  அதிகாலை வேளையில் சட்ட விரோத மணல் கடத்தலில்  ஈடுபட்ட இரண்டு லொறிகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,   மணல் கடத்தலில்  ஈடுபட்ட  7 பேர் வரையில்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.