இங்கிலாந்தின் லூடோனைச் சேர்ந்த யூசுப் அஸ்லம் எனும் சிறுவன் தனது ஏழாவது வயதில் குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே வயதில் இவரது சகோதரி மாரியாவும் குர்ஆனை மனனம் செய்து முடித்திருந்தார்.
அல்குர்ஆனிலுள்ள 114 சூராக்களையும் மனனம் செய்து முடிக்க இந்த சிறுவனுக்கு இரண்டு வருடங்கள் மாத்திரமே போதுமாக இருந்தது.
யூசுப்புடைய இந்த பயணத்தில் அவருக்கு வழிகாட்டி ஒத்துழைப்பு நல்கிய அவருடைய தாய் யூசுப் மற்றும் மாரியா ஆகியோர் அல்குர்ஆனை மனனமிட்டமை தொடர்பில் பகிர்ந்து கொள்கிறார்.
உங்களுடைய மகன் குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள இந்த தருணத்தை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
இது ஒரு கனவைப் போல உள்ளது. நான் இதனை செய்து முடிப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை. இந்தப் பயணத்தை வெற்றிகரமாக தொடர்வதற்கு உண்மையாகவே அல்லாஹ் எங்களுக்கு அருள் புரிந்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான், “நீங்கள் முயற்சி செய்யும் பட்சத்தில் நான் அதனை உங்களுக்கு இலகுபடுத்துவேன்”. அல்லாஹ் அதனை நடத்தியும் காட்டி விட்டான். ஆஹிராவுக்காக வேண்டி என்னால் முடிந்ததை சிறப்பாக செய்து முடித்துள்ளேன் என்பதால் மிகவும் திருப்தியாக உணர்கிறேன்.
மாரியாவும் இதற்கு ஒத்துழைத்தாரா?
நான் களைப்படைந்த நேரங்களில் மாரியாதான் யூசுப்பை வழிநடத்துவார். மாரியாவுடைய மனன ஆற்றல் தனிச்சிறப்பு வாய்ந்தது மாத்திரமன்றி மாறாத வளத்தினைக் கொண்டதும் கூட. அத்துடன் எப்போது கேட்டாலும் மாரியா உதவிக்கு வருவார். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அல்குர்ஆன் மனனத்தை மீட்டிக் கொள்வதைப் பார்ப்பது மிகவும் சுவாரஷ்யமாக இருக்கும். மாரியா எப்போதும் யூசுப்புடைய மனனத்துக்காக நிறைய திட்டமிடல்களைச் செய்து அதில் மும்முரமாக ஈடுபடுவார்.
அண்மையில் யூசுப்புக்கு மனனத்தில் கவனம் குறைந்த போது மாரியா அதிகமாக உதவிகளை வழங்கி அவரை மனனத்தில் கவனம் குவிக்கச் செய்தார். இன்னும் கைகொடுத்து தான் வருகிறார். இந்த நடவடிக்கைகளால் அவர்கள் ‘மீட்டல் நண்பர்களாக’ ஆகியுள்ளனர். அவர்களுடைய ஹிப்ழின் இறுதிக் கட்டங்களில் நான் அதிகம் கரிசனை செலுத்தி வழிகாட்டினேன். ஹாபிஸா மாரியா சகோதரியாக கிடைத்தது யூசுப்புடைய பேரதிர்ஷ்டமே.
நீங்கள் ஏதாவது கஷ்டங்களை எதிர்நோக்கினீர்களா?
இந்த முழுப்பயணமும் சவால்கள் எதுவுமின்றி தான் நகர்ந்தது. என்னுடைய தனிப்பட்ட கருத்துப்படி ஹிப்ழ் என்பது வாழ்க்கை முறையை மாற்றுவதாகும். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடுமையான சமூகப் பணிகளில் நான் ஈடுபட வேண்டியிருந்தது. நான் இலக்கியத்திலும் ஈடுபாடு காட்டினேன். அத்துடன் அதிகமானவர்களுடன் ஹிப்ழ் தொடர்பாக கலந்துரையாடினேன்.
அல்ஹம்துலில்லாஹ், தனது சகோதரியைப் போலவே தானும் ஹிப்ழ் முடிக்க வேண்டும் என யூசுப் விருப்பம் கொண்டார். தூங்கும் நேரங்களில் கூட குர்ஆனைக் கேட்பதற்கே அவர் விரும்புவார். தனது சகோதரியைப் பார்த்து அவர் கற்றுக் கொள்வார் என்பது எனக்குத் தெரியும். இல்லையென்றால் இதற்கு உண்மையாக எவ்வளவு ஈடுபாடு தேவை என்பது யூசுபுக்கு தெரிந்திருக்காது. நான் எனது குழந்தைகளை கல்வி ரீதியாக பலப்படுத்த எனது இலட்சியங்களைக் கூட விட்டுக்கொடுத்துள்ளேன். இருவருமே கல்வி ரீதியாகவும் இஸ்லாமிய ரீதியாகவும் முன்னேறி இருக்கிறார்கள். என்னோடு சேர்ந்து நல்ல முறையில் செயற்படும் குழந்தைகள் எனக்குக் கிடைத்திருப்பதையிட்டு பெற்றோர்களில் ஒருவராக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
உங்களது மகனை ஒரு ஹாபிஸாக உருவாக்குவதற்கு நீங்கள் எவ்வாறு அவரை உற்சாகப்படுத்தினீர்கள்?
அல்ஹம்துலில்லாஹ். ஒரு நாள் அவர் தான் ஹாபிஸாக வேண்டும் எனும் விருப்பத்தை என்னிடம் கூறினார். அவருக்கு அதைச் செய்ய வேண்டும் என ஆசை வந்தது. குர்ஆனில் உள்ள ஒரு சிறிய பகுதியை தெரிந்து கொண்டதன் பின்னர் ஏன் தனது சகோதரியை எல்லோரும் ஹாபிழ் என அழைப்பதைப் போல தன்னை யாரும் அழைப்பதில்லை என என்னிடம் அவர் கேட்டார். அந்தக் கேள்விக்கு பதிலளித்து எப்படி ஹாபிழ் ஆகலாம் என நான் அவருக்குப் புரியவைத்தேன். பின்னர் அவர் தனது இலட்சியத்தில் குறியாகவிருந்து முழுக் குர்ஆனையும் மனனம் செய்து இன்று ஹாபிழாகிவிட்டார்.
இப்போது அவருக்கு நிறைய பரிசில்கள் பாராட்டுகள் கிடைக்கின்றன. அவர் எதைக் கேட்டாலும் நாங்கள் வழங்கத் தயார். அவருக்கும் அது தெரியும். எனினும் அவருக்கு நாம் அளிக்கும் மிகச் சிறந்த பரிசாக உம்ரா பயணம் அமையப் போகிறது. இன்ஷா அல்லாஹ் இந்த டிசம்பர் விடுமுறை நாட்களில் அது சாத்தியமாகும் என எதிர்ப்பார்க்கிறோம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
நீங்கள் ஏனைய பெற்றோர்களுக்கு ஏதாவது கூற விரும்புகிறீர்களா?
பல பெற்றோர்கள் தமது குழந்தைகளை சமாளிக்க முடியாமல் வருந்துகிறார்கள். வருகின்ற நாட்களில் கூடுதலாக பிள்ளைகளை ஹிப்ழில் ஈடுபடுத்துங்கள். சிறுவர்கள் மிக விரைவில் அதற்கு இசைவாக்கமடைந்து விடுவார்கள்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு ஹிப்ழில் உதவ வேண்டும் என்றால் அவர்களும் தஜ்வீதை படிக்கவும் தெரிந்துகொள்ளவும் வேண்டும். சிறுவர்கள் குர்ஆனைக் கிரகிக்க வேண்டும் என்பதே பெரும்பாலோரின் நிலைப்பாடு. ஆனால் பெற்றோர்களும் குர்ஆனைக் கற்றுக் கொள்வதாலேயே கூடிய பலனை அடையலாம். இவற்றுக்குள் பூரணமாக பெற்றோர்கள் கவனம் செலுத்தினால் விரைவில் நல்ல பெறுபேறை பெறலாம்.
பள்ளிவாசல்கள் அல்லது மக்தப்களில் உங்களது பிள்ளைகளுக்கு குர்ஆன் ஆசிரியர்கள் மிகக்குறைவான நேரமே கற்பிப்பார்கள். ஒவ்வொரு வரியாக அல்லது ஒவ்வொரு பக்கமாக குழந்தை கற்று முடிக்கும் வரும்வரை அவர்களால் காத்திருக்க முடியாது. பிள்ளைகளை தினமும் அடுத்த நாள் தொடங்க முன்னர் வீட்டில் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும்.
யூசுப்பினால் குர்ஆனை நிச்சயமாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு நான் சான்று பகர்கின்றேன். அத்துடன், இன்ஷா அல்லாஹ் தனது சகோதரியைப் போலவே பரீட்சைகளிலும் அவர் வெற்றியடைவார். பிள்ளைகளை ஹிப்ழில் ஈடுபடுத்துவதன் மூலம் கல்வி பாதிக்கப்படும் என சில பெற்றோர்கள் வருந்துகிறார்கள்.
என்னுடைய இரு பிள்ளைகளும் 5 தொடக்கம் 7 வயது வரையான காலப்பகுதியிலேயே ஹிப்ழினைத் தொடர்ந்தார்கள். நாங்கள் இந்தப் பயணத்தைத் தொடர்ந்த போது அவர்களது பாடசாலைக் கல்விக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்தின் படி ஹிப்ழ் பிள்ளைகளுடைய ஆற்றலை 100% விருத்தி செய்கிறது.
பாடசாலைகள் பரீட்சையில் முன்னிலையில் சித்தியடைந்ததன் மூலமாக மாரியா கல்வி ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளார். இங்கிலாந்தின் முதற்தர இலக்கணப் பாடசாலையில் படிக்க மாரியா தெரிவாகியுள்ளார். அல்லாஹ் எனது குழந்தைகளை ஆசீர்வதித்துள்ளதோடு இன்னும் குர்ஆனோடு வாழ வழி செய்துள்ளான். யூசுப் கல்வியிலும் இது போல சாதனைகளை படைப்பான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இன்ஷா அல்லாஹ், எதிர்காலத்தில் எனது மகன் உலகில் தலைசிறந்த மார்க்க அறிஞராக பேச்சாளராக வருவான் என்பதில் சந்தேகமில்லை. அல்ஹம்துலில்லாஹ்.
-Vidivelli