- ஏ.எல்.எம். சத்தார்
விடைபெற்றுச் சென்ற 2018 ஆம் ஆண்டு இலங்கையில் பெருந்தொகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட ஆண்டாக வரலாறு படைத்துள்ளது. அதே போன்றே படுகொலைகள், தற்கொலைகள் பெருமளவில் இடம்பெற்ற ஆண்டாகவும் பொலிஸ் பதிவுகள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையில் திடீர் மரணங்கள், விபத்து மரணங்கள் என்பன மிகவும் அபூர்வ நிகழ்வுகளாகவே நோக்கப்பட்டு வந்தன. வயோதிப மரணம், ஒரு சில நோய்களால் ஏற்படும் மரணம், விஷ ஜந்துக்கள் தீண்டலால் நிகழும் மரணம் அல்லது நாய்க்கடி மரணம் என்றே அன்றைய காலகட்டங்களில் திடீர் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இன்று பாதாள உலகக் குழுக்களுக்கிடையேயான பரஸ்பர படுகொலைகள், வாகன மற்றும் விபத்து மரணங்கள், அரசியல் பழிவாங்கல்கள், குடும்பத் தகராறு, அயலக பிணக்குகளில் வஞ்சம் தீர்த்தல் என்று மனித உயிர்கள் மிகவும் மலிவாகவே விலைபோய்க் கொண்டிருக்கின்றன.
இலங்கையில் அவ்வப்போது தலைதூக்கிய இனக்கலவரங்களின் போது மிகவும் அற்ப, சொற்ப கொலைகளே நிகழ்ந்துள்ளன. இவற்றைத் தவிர 1951 ஆம் ஆண்டு பெரும் பரப்பரப்பாகப் பேசப்பட்டு வந்த ரெஜினா சதாசிவம் படுகொலை, கலத்தாவை கொலை, கோத்தாபய கிரம்பகந்த கொலை, திஸ்மட கொலை, ஓர் உயிரைப் பலிகொண்ட நான்கு இலட்சம் ரூபா கொள்ளைக்கான கொலை, ஹோகந்தர கூட்டுப் படுகொலை என்பனவே அன்று நாடு கண்டு கொண்ட கொலை கலாசாரமாக விளங்கியனவாகும்.
நாட்டின் ஆட்சியில் விரக்தி கொண்ட தென்னிலங்கை வாலிபர்களின் 1971 ஏப்ரல் கிளர்ச்சி, 1983 கறுப்பு ஜூலை கலவரம், 1988 – 89 காலப்பகுதியில் மீண்டும் தலை தூக்கிய இளைஞர் கிளர்ச்சி போன்றனவற்றில் உயிர்ப்பலிகள் சற்று உயர்வடைந்தன. இதே காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போதும் பல உயிர்கள் கொல்லப்பட்டன. மேலும் புலிகளால் கிழக்கிலங்கையில் முஸ்லிம்களை அடக்கவும் அச்சுறுத்தவும் பள்ளிவாசல்கள், முஸ்லிம் கிராமங்களில் நடந்தேற்றப்பட்ட கொலைகள் என்று நாட்டில் மனித உயிர்கள் அன்று காவு கொல்லப்பட்டன.
இன்று மனித உயிர்கள் பயங்கரமான முறையில் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2018 ஜனவரி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரையில் 453 படுகொலைச் சம்பவங்கள் நாட்டில் அரங்கேறியுள்ளன. இவற்றுள் 401 கொலைக்குற்றச்செயல்களுக்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இடம் பெற்றுள்ள மனிதப் படுகொலைகளில் அதிகமானவை மேல்மாகாணத்திலேயே நிகழ்ந்துள்ளன. இதில் தென் மாகாணம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு 412 கொலைகள் பதிவாகியுள்ள அதே நேரம் 2018 ஆம் ஆண்டு அது 453 ஆக உயர்வு கண்டுள்ளது. நாட்டில் கொலை கலாசாரம் மேலோங்கி வருவதையே இத்தரவுகள் உணர்த்துகின்றன. இக்கொலைகளில் 47 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களாகும். இதர கொலைகள் கத்திக்குத்து, கூரிய ஆயுதங்களால் வெட்டுக் கொத்து மற்றும் தடியடி உள்ளிட்ட தாக்குதல்களால் நிகழ்த்தப்பட்ட கொலைகளாகும்.
இவற்றுக்குப் புறம்பாக இதர திடீர் மரணங்கள் என்ற வகையில், சமுத்திரம், ஆறு, நீர்நிலைகளில் மூழ்கி மரணமானோர் தொகையும் கடந்த வருடம் அதிகரிப்புக் கண்டுள்ளது. அது 688 ஆகும். இதில் 565 ஆண்களும் 123 பெண்களும் பலியாகியுள்ளனர். தற்கொலை மரணங்களும் கடந்த வருடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளது. மொத்தமாக 3070 தற்கொலை மரணங்கள் சம்பவித்துள்ளன. இவற்றில் ஆண்களின் எண்ணிக்கையே மிகைத்துள்ளன. 2453 ஆண்களும் 617 பெண்களும் தம்மைத் தாமே தீர்த்துக் கட்டிக்கொண்டுள்ளனர். வாகன விபத்து மரணங்களும் கடந்த வருடம் முன்னைய ஆண்டுகளை விடவும் அதிகரித்துக் காணப்பட்டுள்ளன பல்வேறு வீதி விபத்துக்களிலும் 3164 மனித உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன.யானைத் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்தோர் தொகையும் முன்னைய காலங்களை விடவும் கடந்த வருடம் அதிகரித்தே உள்ளன. இயற்கை அனர்த்த அழிவு மரண வீதமும் உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் 2004 டிசம்பர் 26 ஆம் திகதி நிகழ்ந்த சுனாமி பேரலையால் ஏற்பட்ட மரணங்கள் இதில் விதிவிலக்கு.
தரவுகளை உற்று நோக்குகையில் திடீர் மரணங்கள் அதிகரித்த ஆண்டாக 2018 ஆம் ஆண்டு விடைபெற்றுச்சென்றுள்ளது. ஆனால் பிறந்துள்ள 2019 ஆம் ஆண்டின் ஜனவரி மூன்று வாரத்திற்குள்ளே துப்பாக்கிச் சூடு, வாகன விபத்துக்கள் என்று கொல்லப்படுவோர் தொகையை எண்ணிப் பார்க்கையில் இந்த வருடமும் அதி பயங்கர ஆண்டாகி விடுமோ என்ற அச்சத்தையே தருகிறது.
மனிதவளம் அழிவது நாட்டின் நலனில் விழும் பாரிய அடியாகவே உள்ளது. நாட்டின் விருத்தி, முன்னேற்றத்திற்காக உழைக்கும் கரங்கள், நாட்டுக்கு இல்லாமல் போவது நாட்டுக்கு நட்டமேயன்றி வேறில்லை.
விபத்து, இயற்கை அனர்த்த மரணங்கள் எப்படிப்போனாலும் கொலை, தற்கொலை மரணங்களை எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாது. அநியாயமாக இழக்கப்படும் இந்த மனித சக்திகள் நாட்டின் உழைப்பில் பயன்படுத்தப்படுமானால் நாடு அபிவிருத்திப் பயணத்தில் பல மைல்கற்களைத் தாண்டியிருக்கும்.
கொலைகளில் ஈடுபட மூல ஊற்றாக அமைவது போதைப்பொருள் பாவனையென்பது பலரதும் ஏகோபித்த கருத்தாகும். இப்போதைப்பாவனை விற்பனையிலும் கடந்த ஆண்டே முதலிடம் பிடித்துள்ளது. மிகப் பெருமளவான 738 கிலோவும் 560 கிராம் எடை கொண்ட பலதரப்பட்ட போதைப்பொருட்கள் நாட்டுக்குள்ளிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றுடன் தொடர்புடைய குற்றச் செயல் சந்தேக நபர்களாக 40870 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கொலையுண்டோர், கொலையுண்டுபண்ணி தண்டனை அனுபவிப்போர் ஆகிய இரு தரப்பு குடும்பங்களும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கும் இலக்காகின்றன.
கொலை கலாசாரத்தால் சம்பந்தப்பட்டோரும் நாடும் உறைந்து போகும் நிலையில் மற்றும் சில கொலைச் சம்பவங்கள் மனிதமே வெட்கித்தலை குனிய வைக்கும் நிகழ்வுகளாகவுள்ளன. இரத்தக்கறையோடு கறை படிந்த வரலாற்றைப் பதியச் செய்துள்ள படுபாதக கொலைச் சம்பவங்கள் பல கடந்த வருடமும் இடம் பெற்றுள்ளன.
கம்பளைப் பகுதியில் 67 வயதுடைய தாய் தனது வலது குறைந்த மகளை தடியால் அடித்துக் கொலைசெய்துள்ளார்.
இரத்தினபுரி ஸ்ரீ சம்புத்தாராம விகாரையில் தலைமறைவாகயிருந்த பிக்குவைச் தேடிச் சென்ற பொலிஸ் சார்ஜன் சம்பந்தப்பட்ட அதே பிக்குவால் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் மாளிகாவத்தையில் இரண்டு வயதுடைய பாலகன் ஒருவன் வளர்ப்புப் பெற்றோரால் சித்திரவதைக்குள்ளாகி மரணமான பரிதாபச் செயலும் இடம்பெற்றுள்ளது.
மொனராகலையில் காதலன் ஒருவனால் அவனது காதலி கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்படல், பாடசாலை மாணவன் சக மாணவனால் கத்திக்குத்துக்கிலக்காகி கொல்லப்படல், மற்றொரு பாடசாலையில் மாணவர் இருவருக்கிடையே நிகழ்ந்த கை கலப்பில் ஒரு மாணவன் மாடியிலிருந்து விழுந்து மரணமாதல் என்று பாடசாலை மட்டங்களிலும் கொலை சமாச்சாரம் தலைதூக்கி வருகிறது.
கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று அதிகாலையில் தங்காலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பிரபல சிங்களப் பாடகி பாணந்துறையில் அவரது கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கடந்த ஆண்டு பரிதாபக் கொலைகள் பலவும் பதிவாகியுள்ளன.
இற்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் உலகில் நிலவிய அநாசார, அநாகரிக யுகத்துக்கே உலகம் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதையே அவதானிக்க முடிகிறது. குறிப்பாக முகம்மது நபி (ஸல்) அவர்கள் பிறக்கும்போது அரேபியாவில் இருந்த மடைமைக்கால நிலையே இன்றும் மறு உருவில் உருவெடுத்துள்ளதென்றே கூறவேண்டியுள்ளது. அதே பஞ்சமாபாதகச் செயல்கள்தான், ஆனால் அவற்றின் பாணியில்தான் வித்தியாசம்.
கொலை – அன்று வாள் வெட்டு, இன்று துப்பாக்கி வேட்டு.
கொள்ளை– – அன்று வழிப்பறி, இன்று நவீன பாணியிலான கொள்ளை, மோசடி.
சூதாட்டம், இன்று நவீன முறைகளில் நடந்தேறுகின்றன.
அன்று குல, கோத்திரச் சண்டை, இன்று இன, மத மோதல்கள்.
இவ்வாறு பஞ்சமாபாதகங்களில் அன்றைய மடைமை யுகத்துடன் இன்றைய நவீன உலகும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இது உலகுக்கு ஆரோக்கியமான தொன்றல்ல. நாசத்தையும் அழிவையுமே அளித்துக் கொண்டிருக்கிறது.
வளர்ந்து வரும் சிறார்களுக்கு சிறு வயதிலிருந்தே ஆத்மீக அறிவூட்டப்பட வேண்டும். உரிய முறையில் இவர்கள் பயிற்றுவிக்கப்படுவார்களானால், பஞ்சமாபாதகச் செயல்கள் இடம்பெறுவதைக் கணிசமானளவு குறைத்துக்கொள்ள முடியும்.
துரதிஷ்டம் என்னவென்றால் பெரும்பாலான சமயப்பாடசாலைகளில், குறிப்பாக பௌத்த சமய பாடசாலைகளில் இதர மதங்கள் குறித்து வெறுப்புணர்வூட்டும் பாட போதனைகள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது. இத்தகைய நிலை இன, மத மோதல்களுக்கே வழிவகுத்து விடுகிறது. இந்நிலை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
பாடசாலை கல்வித்திட்டத்தில் ஒழுக்கவியல் கட்டாய பாடமாகப் புகுத்தப்படுவதும் நல்லதொரு சமூகமொன்றை உருவாக்க வழிவகுக்கலாம். இது ஆரம்ப வகுப்பு முதல் உயர்தரம் வரையிலும் போதனையாகவும் செயல் முறைப்பயிற்சியினூடாகவும் புகட்டப்படும்போது, பரீட்சையில் சித்தி பெறுவதற்காக மாணவர்கள் ஒழுக்கத்தின்பால் தூண்டப்படுவது உறுதி.
இவ்வாறு மாற்றியமைக்கத் தவறும் பட்சத்தில் மனித அழிவு, நாசம் தொடரவே செய்யும். நாடு பாதாளத்தில் தள்ளப்படுவதும் தவிர்க்க முடியாததொன்றாகவே அமையும்.
-Vidivelli