சூடானில் மீண்டும் அரபு வசந்தம் ஒன்றை ஏற்படுத்த சிலர் முயற்சி

சூடான் ஜனாதிபதி குற்றச்சாட்டு

0 662

தனது நாட்டில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 2011 ஆம் அண்டு இடம்பெற்றதைப் போன்ற அரபு வசந்தமொன்றை ஏற்படுத்த முனைவதாகவும் இனம்தெரியாத வெளிக்குழுக்கள் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கு முனைவதாகவும் சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்ரோவிற்கு விஜயம் செய்து எகிப்திய ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் எல்-சிசியைச் சந்தித்த பஷீர் ‘சூடானில் காணப்படும் அமைதியின்மை சூடானில் மற்றுமொரு அரபு வசந்தத்தை தோற்றுவிக்கும் முயற்சியாகும்’ எனத் தெரிவித்தார்.

கடந்த மாதம் பாணின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்ததையடுத்து பஷீர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். 30 வருடமாக நாட்டின் தலைவராக இருந்துவரும் பஷீர் பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரலாற்றுரீதியான இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான உறவினை தொடர்ந்தும் பேணுவதற்கு தான் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளதாக சிசி தெரிவித்தார். அங்கு கருத்துத் தெரிவித்த பஷீர், தனக்கு எதிரான போராட்டங்கள் வெளிப்பார்வைக்குத் தெரிவது போன்று மோசமானதாக இல்லை எனத் தெரிவித்த அவர், தனது ஆட்சியினை குறைத்து மதிப்பிடுவதற்கு சில வெளிக்குழுக்கள் முனைவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையினை எகிப்து 2011 இல் எதிர்கொண்ட அனுபவத்துடன் ஒப்பிட்டுப்பேசினார்.

பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு என்பவற்றை சீர்குலைப்பதற்கு பல எதிர்மறையான அமைப்புக்கள் கங்கணம் கட்டிச் செயற்படுவதாகவும் சந்திப்பின் பின்னர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அங்கு பிரச்சினை காணப்படுகின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அங்கு பிரச்சினை இல்லை எனக் கூறவில்லை. ஆனால், ஊடகங்களால் ஊதிப் பெருப்பித்துக் காண்பிக்கப்படுவது போன்று பெரும் பிரச்சினைகள் இல்லை. அங்கு சிலர் சூடானுக்கான அரபு வசந்தம் ஒன்றை ஏற்படுத்த முனைகின்றனர் என அவர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.