ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் வரையில் மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டு, எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர்வரை மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படாமல் இருக்குமாயின், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நான் இராஜினாமா செய்வேன் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் ஒன்பது மாகாணங்களில் எட்டு மாகாணங்களில் பதவிக்காலம் முடிவடைகின்ற அதேவேளை, இன்னமும் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படாமல் தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்தினால் அது தொடர்பின் எம்மால் எதுவும் செய்ய முடியாது. எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 9ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் வரையில் மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டு, எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர்வரை மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படாமல் இருக்குமாயின், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நான் இராஜினாமா செய்வேன். தலைவர் பதவியிருந்து இராஜினாமா செய்யும் அதேவேளை, ஆணைக்குழுவில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பேன்.
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகிய நானும் இந்த நாட்டின் பிரஜையாவேன். மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படாமல் தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வருகின்றமை என்னுடைய மனதையும் வேதனைப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றே தெரிவித்துள்ளனர். சில அரசியல் கட்சிகள் நாம் எம்முடைய தேவைக்கேற்ப தேர்தலை நடத்துவதாக குறிப்பிடுகின்றனர். குறித்த சில கட்சிகளினதோ அல்லது நபர்களினதோ தனிப்பட்ட தேர்தலை நடத்துவதற்கு நான் தயாரில்லை என்பதுடன், அத்தகைய நிலையில் இப்பதவியை நான் வகிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
-Vidivelli