ஹஜ் விவகாரங்களை ஹஜ் சட்டம் ஒன்றின் கீழ் முன்னெடுப்பதற்கு அரச ஹஜ் குழுவினால் தயாரிக்கப்பட்டுவந்த ஹஜ் சட்டவரைபு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்டுள்ள ஹஜ் சட்ட வரைபு தற்போது அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் எஸ். மரீனா மொஹம்மடிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பாரென அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் தெரிவித்தார்.
ஹஜ் சட்ட மூலம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் ‘விடிவெள்ளி’க்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், பல்வேறு முஸ்லிம் நாடுகளின் ஹஜ் விவகாரங்கள் தொடர்பான சட்டங்கள் மற்றும் நீதிமன்றம் வழங்கியுள்ள ஹஜ் வழிமுறைகள் (Guide Lines) என்பனவற்றினையும் கருத்திற்கொண்டே ஹஜ் சட்டவரைபு ஹஜ் குழுவினால் தயாரிக்கப்பட்டது. ஹஜ் குழுவில் மூன்று சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சின் செயலாளருடன் அரச ஹஜ் குழு ஹஜ் சட்டமூலம் தொடர்பாக் கலந்துரையாடியது. ஹஜ் குழுவினால் தயாரிக்கப்பட்ட ஹஜ் சட்டவரைபு செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவர் அதற்கென குழுவொன்றினை நியமித்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பார்.
ஹஜ் முகவர்களினது ஆலோசனைகளும் கோரப்பட்டுள்ளன. ஆலோசனைகளை அமைச்சின் செயலாளர் நியமிக்கவுள்ள குழுவிற்கே அனுப்பிவைக்குமாறு நாம் கோரியுள்ளோம். அமைச்சின் செயலாளரே சட்டவரைபில் திருத்தங்கள் தேவைப்பட்டால் அவற்றை உள்ளடக்கி சட்ட வரைபுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைப்பார்.
நாட்டின் ஹஜ் ஏற்பாடுகள் அடுத்த வருடம் முதல் புதிய ஹஜ் சட்டத்தின் கீழேயே முன்னெடுக்கப்படும். இதன்மூலம் ஹஜ் யாத்திரிகர்கள் மற்றும் முகவர்கள் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள்.
ஹஜ் விவகாரங்களுக்கு சட்டமொன்றினை பாராளுமன்றில் அங்கீகரித்துக் கொள்வதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இச்சட்டம் உருவாக்கப்படுவதன் மூலம் ஹஜ் கட்டணம், தோட்டப்பகிர்வு, ஹஜ் முகவர் நியமனம் என்பன உட்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்றார்.
-Vidivelli