மாவனெல்லை, வனாத்துவில்லு சம்பவங்களை முஸ்லிம்கள் ஒருபோது அங்கீகரிக்கவில்லை
பாதுகாப்பு தரப்புக்கு ஒத்துழைக்க முஸ்லிம்கள் தயார் என மேல்மாகாண ஆளுநர் தெரிவிப்பு
மாவனெல்லை மற்றும் வனாத்தவில்லு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை முஸ்லிம் சமூகம் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. இச்சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க முஸ்லிம் சமூகம் தயாராக இருக்கிறது எனத் தெரிவித்த மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி, இவ்வாறான சம்பவங்களின் போது பொலிஸ் திணைக்களம் உத்தியோகபூர்வமாக ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட வேண்டும் எனவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை வேண்டிக் கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து மாவனெல்லை வணாத்தவில்லு மற்றும் கிராகல தூபி சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடினர். சுகயீனம் காரணமாக பாதுகாப்புச் செயலாளர் கலந்துரையாடலில் பங்குகொள்ளவில்லை. பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளரே கலந்துரையாடலில் பங்குகொண்டிருந்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் சார்பில் அதன் தலைவர் என்.எம். அமீனும், ஹில்மி அஹமட்டும் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின்போது ஆளுநர் அசாத்சாலி மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் திணைக்களம் சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடாததால் ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் சம்பவத்தை மிகைப்படுத்தி செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதனால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கும், நல்லுறவுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றன என்றார்.
மாவனெல்லை மற்றும் வணாத்தவில்லு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விளக்கங்கள் கலந்துரையாடலில் பங்கு கொண்ட பொலிஸ்மா அதிபரினால் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட்டன. அச்சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டன.
கிராகல தூபியில் பல்கலைக்கழக மாணவர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய சம்பவமும் கலந்துரையாடப்பட்டது. ஒரு வருட காலத்துக்கு முன்பு இடம்பெற்ற சம்பவம் தற்போதே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அப்பிரதேசம் தொல்பொருள் பிரதேசம் என்பதை அறியாததனாலே மாணவர்கள் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்கள். அப்பகுதியில் தொல்பொருள் பிரதேசமென அறிவிப்புப் பலகை இருந்திருந்தால் இந்தச் சம்பவம் இடம் பெற்றிருக்காது என விளக்கமளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் நாட்டிலுள்ள புதைபொருள் பிரதேசங்களின் விபரங்கள் வழங்கப்பட்டால் அவ்விடயங்களுக்கான அறிவிப்புப் பலகைகளை இலவசமாக வழங்குவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
-Vidivelli