நாட்டில் 321 அரபுக் கல்லூரிகள் முஸ்லிம் சமயப்பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் 15 அரபுக் கல்லூரிகள் பதிவுகளுக்காகக் காத்திருக்கின்றன.
அரபுக் கல்லூரிகள் மூன்று பிரிவுகளின் கீழ் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆரம்ப பிரிவு கல்லூரிகள், அரபுக் கல்லூரிகள் மற்றும் சிரேஷ்ட அரபுக் கல்லூரிகள் என்ற பிரிவுகளின் கீழேயே பதிவுகள் அமைந்துள்ளன.
1981 ஆம் ஆண்டுவரை அரபுக்கல்லூரிகளின் பதிவுகளை கல்வியமைச்சே மேற்கொண்டு வந்தது. 1982 ஆம் ஆண்டிலிருந்தே இப்பதிவுகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக ஓர் அரபுக்கல்லூரியை பதிவு செய்துகொள்ள வேண்டுமென்றால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். திணைக்களம் பதிவினை மேற்கொண்டு அதற்கான சான்றிதழை வழங்கும். இதுவே இதுவரைகாலம் இருந்துவரும் நடைமுறையாகும்.
இந்நிலையில் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் அரபுக் கல்லூரிகள் கட்டாயமாக வக்பு சபையில் பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளார். அவரது தீர்மானம் உலமாக்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டே எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அரபுக்கல்லூரிகள் புதிதாக ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் சில முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. திணைக்களத்தில் பதிவு செய்து கொண்டு பதிவிலக்கத்தைப் பயன்படுத்தி நிதி சேகரிக்கப்படுவதாகவும், வெளிநாட்டு உதவிகள் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் சமூகத்தில் விமர்சிக்கப்படுகிறது.
அவ்வாறான அரபுக் கல்லூரிகளை யார் நிருவகிக்கிறார்கள் என்பன தொடர்பில் மற்றும் அவற்றின் நிதி பரிமாற்றங்கள், செலவுகள் தொடர்பில் எந்த ஆவணமும் இல்லை. அவை சட்டரீதியாக கண்காணிக்கப்படுவதில்லை. இவ்வாறான அனைத்து நிறுவனங்களும் நிறுவனப்படுத்தப்பட வேண்டும். அவை ஒரு சட்ட ஒழுங்குமுறைக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாஸீன் தெரிவித்துள்ளார்.
அரபுக்கல்லூரிகள் மாத்திரமல்ல ஹிப்ளு மத்ரஸாக்கள், குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் வக்பு சபையின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். எனவும் அவர் கூறியுள்ளார். இவை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் அவற்றைக் கண்காணிப்பதற்கு சட்டரீதியான அமைப்பொன்று இல்லை. எனவே சட்டரீதியான அமைப்பான வக்பு சபையில் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது கட்டாயமாகும்.
நாட்டின் இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம்சமூகம் வெளிப்படைத் தன்மையைப் பேணவேண்டும். எங்களுக்குள் ரகசியம் தேவையில்லை, எமக்கு சட்டரீதியான பாதுகாப்பு உண்டு என்றும் வக்பு சபைத் தலைவர் வெளிப்படையாகவே கருத்து வெளியிட்டுள்ளார்.
வக்புசபையில் அரபுக்கல்லூரிகள் பதிவு செய்யப்படுவதன் மூலம் அவற்றின் வக்பு சொத்துக்களைப் பாதுகாக்க முடியும். அங்கு புரையோடிப் போயுள்ள ஊழல்களுக்கு சாவுமணி அடிக்க முடியும்.
அரபுக் கல்லூரிகள், சிறிய மதரஸாக்கள், பள்ளிவாசல்கள் அனைத்தும் சமூகத்தின் சொத்து. அவற்றின் வக்பு சொத்துக்கள் அல்லாஹ்வின் சொத்து அவற்றை நிருவகிப்பவர்கள் தங்களது கடமைகளை ஒரு புனிதப் பணியாகக் கருதவேண்டும்.
அரபுக் கல்லூரிகளை நிறுவனப்படுத்தும் தீர்மானங்களுக்கு சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேணடும். அதனை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கக் கூடாது. அமைச்சர் ஹலீமின் முயற்சியினால் வக்பு சட்டத்தில் காலத்திற்கேற்ற சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்திருத்தங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
-Vidivelli