ஐக்கிய தேசிய கட்சியே நாட்டினை பிளவுபடுத்தும் கட்சி என்றால் இந்த நேரத்தில் இலங்கையில் இரண்டு நாடு இருந்திருக்க வேண்டும். எம்மைப் பிரிவினைவாதிகளாக சித்திரித்து ராஜபக் ஷவினர் ஆட்சி செய்யப் பார்க்கின்றனர். எனினும், ஐக்கிய தேசிய கட்சியின் மீதான நம்பிக்கையில்தான் தமிழர் தலைமைகள் ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு கேட்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
எமது ஆட்சியை முன்னெடுக்க இடம் தாருங்கள் தீர்வுகளை நாம் பெற்றுத் தருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பு விவகாரம் குறித்தும் நிகழ்கால அரசியல் நகர்வுகள் குறித்தும் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசிய கட்சி இனவாதக் கட்சியல்ல, ஐக்கிய தேசியக் கட்சியே இந்த நாட்டின் மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சியாகும். எனினும், நாம் நாட்டினை துண்டாடுகின்றோமென இனவாதக் கட்சிகளும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் மக்கள் மத்தியில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 2005ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையில் இவர்கள் அனைவரும் கூறும் கதை ஒன்றுதான். ஐக்கிய தேசியக் கட்சி நாட்டினை பிளவுபடுத்துகின்றது என்பதையே இவர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால் இப்போது நாடு பிளவுபட்டிருக்க வேண்டுமே. வடக்கு கிழக்கு துண்டாடப்பட்டிருக்க வேண்டும். தனி நாடு மலர்ந்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அனைவரும் ஒன்றாகத்தான் வாழ்கின்றோம். இதுவரை காலமாக தனிநாடு என்ற கோரிக்கையிலிருந்த தமிழர் தலைமைகள் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக தமது வார்த்தைகளால் தமக்கு ஒருமித்த நாடு வேண்டும், ஒன்றிணைந்த நாட்டுக்குள் எமக்கான உரிமைகளை, சுதந்திரத்தை தாருங்கள் என்று கேட்டனர். ஆகவே, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழர்களுக்கு எம்மீதான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஒருமித்த நாட்டுக்குள் அனைவரும் ஐக்கியமாக வாழ முடியுமென்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. யுத்தத்தை வெற்றிகொண்ட தலைவர்களினால் மக்களை ஒன்றிணைக்க முடியாது போனபோதும் நாம் மக்களை ஒன்றிணைத்துள்ளோம்.
நாம் ஆட்சிக்கு வந்த பின்னரே மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிரான சர்வதேச சமூகத்திடமிருந்த அழுத்தங்களை இல்லாது செய்தோம். எமது தலையீட்டால்தான் சர்வதேச அழுத்தங்களை நீக்கி நாட்டினை கட்டியெழுப்பும் சர்வதேச ஒத்துழைப்பினை உருவாக்கிக்கொண்டோம். இராணுவத்தை தண்டிக்கும் சர்வதேச நோக்கத்தை இல்லாது செய்தோம். எனினும், இவர்கள் இப்போதும் அதே கதைகளை கூறிக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு இனவாதம் மட்டுமே ஆயுதம். இவர்கள் தைரியமான தேசியவாதிகள் என்றால், தூய்மையான அரசியல் கொள்கை உள்ளவர்கள் என்றால் இவர்களுக்கென்ற தேசிய கொள்கையொன்றை உருவாக்கி, சகல மக்களையும் உள்வாங்கிய கொள்கையொன்றை உருவாக்கி எம்முடன் நேரடியாக அரசியல் போட்டிக்கு வரவேண்டும். இவர்கள் 50 நாட்களில் அரசியல் சூழ்ச்சியின் மூலமே ஆட்சியை கைப்பற்றினர். அப்படியிருந்தும் நாம் வாக்கெடுப்பு மூலமாக தீர்வுகாண அழைப்பு விடுத்தும் அவர்கள் அதற்குத் தயாராக இருக்கவில்லை. இவர்களுக்கு மக்கள் ஆதரவும், பாராளுமன்ற பலமும் இல்லை என்பது தெரிந்தும் இவர்கள் தமை வீரர்கள் போன்று காட்டிக்கொள்கின்றனர்.
நாம் தேர்தலுக்குத் தயாராகவே உள்ளோம். அதேபோல் நாம் தேர்தலொன்றை இவர்களுக்கு வழங்கத் தயாராகவே உள்ளோம். அதற்கு முன்னர் செய்ய வேண்டிய சில விடயங்கள் உள்ளன. அவற்றை விரைவாக முடித்துக்கொண்டு தேர்தலை சந்திப்போம். அதில் மக்களால் இவர்களுக்கு தக்க பாடக் கற்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli