பெண்களுடைய வேலைத்தளங்கள் மற்றும் அவர்கள் வெளிச்செல்லும் இடங்களில் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதில் முதன்மையானதுதான் ஆண்களுடைய ஆதிக்கம் ஆகும். பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டி தற்காப்புக் கலையை பயிலவேண்டும் என்ற நோக்கத்தில் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த கதீஜா ஸபாரி என்ற சகோதரி ஒரு தற்காப்புக்கலைப் பள்ளியை தனது கணவருடன் இணைந்து நடாத்தி வருகிறார்.
தற்காப்புக் கலையை பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு கற்றுக்கொடுத்து தற்காப்புக்கலை பயிற்றுவிப்பாளர்களை உருவாக்குவதே இவருடைய நோக்கமாகும். 36 வயதுடைய இவர் 4 பிள்ளைகளின் தாய் ஆவார். இவர் ஹிஜாப் அணிகிறார்.
முஸ்லிம் பெண்கள் தற்காப்புக் கலையில் மிளிர வேண்டும் என்ற எண்ணத்தை விட பெண்கள் பொது இடங்களில் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு யுக்தியை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதே இவரது நோக்கமாகும். ஹிஜாப் அணிந்த பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை முறையாக எதிர்கொள்ளவும் இஸ்லாத்துக்கு எதிரான வன்முறை மற்றும் வெறுப்புப் பேச்சுக்களை தகர்த்தெறியவும் தற்காப்புக்கலை அவசியம் என சபாரி வாதிடுகிறார்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் நான்கு முக்கிய விளையாட்டுக்கள் ஹதீஸ்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. நீச்சல், வில்வித்தை, குதிரை ஏற்றம் மற்றும் தற்காப்புக்கலை என்பனவே அவையாகும்.
இவர் ஆரம்ப காலங்களில் தற்காப்புக் கலைப்பயிற்சியை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றாகவே கற்றுக்கொடுத்தார். இவர் 2009 ற்கு முற்பட்ட காலப்பகுதியில் சமயத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. இஸ்லாம் பற்றியும் சமயங்கள் பற்றியும் எதிர்மறையான கருத்துக்களே தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளரான ஸபாரிக்கு காணப்பட்டது. லண்டனில் ஒரு மாணவியாக இருந்த போது மேற்கத்தேய கலாசாரங்களையே பின்பற்றினார்.
இஸ்லாத்துக்குள் நுழைவதற்கு முன்னர் லண்டனில் பல்வேறு தரப்பினரைச் சந்தித்து உலகின் சமயங்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். சமயங்கள் பற்றிய ஆய்வின் போதும் கூட இஸ்லாம் பற்றிய நல்ல கருத்துக்கள் ஸபாரிக்கு கிடைக்கவில்லை. ஊடகங்களில் இருந்து எதிர்மறையான கருத்துக்களே கிடைத்தன. சமயம் மனிதனின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்றும் போருக்கு வழிவகுக்கின்றது என்ற கருத்துடன் இவர் இருந்ததோடு ஹிஜாபின் மூலம் இஸ்லாம் பெண்களை கட்டுப்படுத்துகிறது என்றும் எண்ணியிருந்தார்.
பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே அவருக்கு இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளும் பாக்கியத்தை அல்லாஹ் அருளினான். பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவிகளுள் பலர் முஸ்லிம்களாக இருந்தனர். ஒரு நாள் ஸபாரியுடைய முஸ்லிம் தோழி ஒருவர் குர்ஆன் பிரதியொன்றை அவருக்கு பரிசாக வழங்கினார்.
குர்ஆனை வாசிக்கத் தொடங்கிய பின்னர் ஸபாரியின் மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக கடவுள் நம்பிக்கை பிறந்தது. இஸ்லாத்துக்கு எதிராக தான் கேள்விப்பட்ட அத்தனை விடயங்களையும் குர்ஆன் பொய்யாக்கியது. போர், ஜிஹாத் என பல விடயங்களில் அவருக்கு தெளிவு கிடைத்தது. காலப்போக்கில் இஸ்லாத்தின் மீது அதீத விருப்பம் ஸபாரிக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்துக்குள் நுழைந்தார்.
இஸ்லாத்துக்குள் நுழைந்த பின்னர், தான் கற்றுக்கொண்ட குத்துச்சண்டை, தற்காப்புக் கலை என்பவற்றை முஸ்லிம் பெண்களுக்குக் கற்றுக்கொடுத்து தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டு அதனைச் செயற்படுத்தியும் வருகிறார்.
ஸபாரி ஒரு நாளைக்கு 3 மணித்தியாலங்களுக்கு மேல் குத்துச்சண்டைப் பயிற்சியினை மேற்கொள்வார். குத்துச்சண்டையில் கறுப்புப் பட்டியினையும் இவர் வென்றுள்ளார். தற்போது முஸ்லிம் பெண்களுக்கு மாத்திரமின்றி முஸ்லிமல்லாத பெண்களுக்கும் இவர் பயிற்றுவிக்கிறார்.
தேசிய அங்கீகாரம் பெற்ற குத்துச்சண்டை வீரர்களுள் ஒருவரான கரீம் என்பவரை இவர் விவாகம் செய்துள்ளார். சகோதரி ஸபாரி இஸ்லாத்தை ஏற்க முன்னர் பயிற்றுவித்த ஆண்களை தற்போது ஸபாரியுடைய கணவர்தான் பயிற்றுவிக்கிறார். தற்போது இருவரும் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் பயிற்சிகளை வழங்குகின்றனர். மேலும் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் உடற்பயிற்சிக் கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
எல்லா சந்தர்ப்பங்களிலும் ஆண்களையும் பெண்களையும் வேறு வேறாகக் கையாள்வது கடினமான காரியம். ஆனாலும் இஸ்லாம் அதனையே வலியுறுத்துகிறது. குத்துச்சண்டை என்பது ஒரு விளையாட்டு. இதன்போது ஒருவருக்கொருவர் கட்டித்தழுவ வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஆண், பெண் கலப்பு காணப்படுவது நிச்சயம் பித்னாவுக்கு வழிவகுக்கும். எனவே இரு சாராரையும் வெவ்வேறாக்குவதே சாலச்சிறந்தது.
கரீம் மற்றும் ஸபாரியுடைய இந்தத் திட்டங்களுக்கு பெரும்பான்மை சமூகத்தில் இருந்து எதிர்ப்புகளே கிளம்பின. சமூகத்தில் இருந்து ஒருவரை ஒருவர் பிரித்து நோக்குவதை இஸ்லாம் விரும்புகிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இதற்கெல்லாம் ஸபாரி பதில் கூறினார். இஸ்லாம் யாரையும் பிரித்து நோக்கவில்லை. அதற்கு மாற்றமாக முஸ்லிம் பெண்களை முஸ்லிமல்லாத பெண்களுடன் இணைக்கும் நற்பணியையே செய்து வருகிறது.
சமூகத்தில் முஸ்லிம்கள் அழகிய முறையில் நிம்மதியாக வாழ வேண்டும். இனவாதமற்ற, பித்னா அற்ற நிம்மதியான முறையில் இந்த பயிற்சி நெறிகளை வழங்கி பயிற்சியாளர்களை உருவாக்குவதென்பது இம்முறையில் நூறு சதவீதம் சாத்தியப்படுகிறது.
ஸபாரியுடைய பெண்களுக்கான தற்காப்புக் கலைப்பள்ளியில் அனைவருக்கும் சமமான இடம் உண்டு. அங்கே பிரிவினைகள் இல்லை. பயிற்சிப் பட்டறைக்குள் சென்றவுடன் முஸ்லிம் பெண்கள் ஹிஜாபை அகற்றி விடுவார்கள். இதன்போது முஸ்லிம் பெண்களுக்கும் முஸ்லிமல்லாத பெண்களுக்கும் எந்தவித வேறுபாடும் தென்படாது. பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டிகளின்போது நடுவர்கள், காவலர்கள் என சகலரும் பெண்களில் இருந்தே நியமிக்கப்படுவர். பெண்கள் பயிற்சி பெறும் இடத்தையோ அல்லது பெண்களுக்கான போட்டி நடைபெறும் இடங்களையோ ஆண்களால் பார்க்கவே முடியாது.
மேற்கத்தேய நாடுகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வெளியில் செல்லும் போது கேலிக்குள்ளாகின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் வன்முறைகளைக் கூட எதிர்கொள்கின்றார்கள். இந்நேரத்தில் தற்காப்புக் கலை என்பது நிச்சயமாக உதவியாக இருக்கும் என்பதே ஸபாரியினுடைய கருத்து.
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு அல்லது இஸ்லாத்துக்கு எதிரான வன்முறைகள் நிகழும்போது பெண்கள் யாரும் வெளியில் போகவேண்டாம் என்கிற பீதி வெளிப்படுத்தப்படுகிறது. பெண்கள் வெளிச்செல்ல அச்சம் கொள்கிறார்கள். ஆனால் ஸபாரி இந்த பயத்தை வெல்லவேண்டும் என்ற கருத்துடன் இருக்கிறார்.
சகோதரி ஸபாரி இனவாதத் தாக்குதல்களை சந்தித்ததில்லை. இருந்த போதிலும் ஒரு முறை பாதையில் ஹிஜாபுடன் செல்லும் போது ‘உன்னுடைய நாட்டுக்கு திரும்பிப் போ’ என்ற தொனியில் கெட்ட வார்த்தைகள் கலந்து ஒருவர் திட்டினார். ஆனால் அதற்கு அவர் பதிலடி கொடுத்தார்.
“உன்னுடைய நாடு என்றால் எந்த நாடு? நான் பிரித்தானியப் பெண். பகிங்ஹம்ஷைர் குடும்பத்தைச் சேர்ந்தவள். எனது தாயின் இறுதிப் பெயர் ஸ்மித்” எனக் கூறி தனது அடையாளத்தை வெளிப்படுத்தியதோடு தன்னைத் தவறாகப்பேசியவருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஸபாரியை புதிதாக பார்க்கின்றவர்கள் அவரின் சொந்த நாடு எது என வினவுவார்கள். இங்கிலாந்து என பதில் சொன்ன பிறகும் கூட பாகிஸ்தான் அல்லது ஏனைய அரபு நாடுகளின் பூர்வீகத்தைக் கொண்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் வினவுவார்கள்.
கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்லும்போது ஆங்கிலம் தெரியாத பெண்ணுடன் கதைப்பதைப் போல உரிமையாளர்கள் கதைப்பதுமுண்டு. இவ்வாறான நிலைமைகள் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மேற்குலக பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் புலப்படுத்துகிறது.
இது போன்ற சீண்டல்களை அன்றாடம் சகோதரி ஸபாரி எதிர் கொள்கின்றபோதும் ஹிஜாபையோ இஸ்லாத்தையோ அவர் கைவிடவில்லை. அவர் குத்துச்சண்டையை பயிற்றுவிக்கச் செல்கின்ற போது பலர் அவரை பாடசாலை ஆசிரியர் என்றுதான் நினைப்பார்கள். ஸபாரியின் பிரதேசத்தைப் பொறுத்த வரையில் அவருடைய பள்ளிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இத்தனை கேலி, கிண்டல்களுக்கு மத்தியிலும் நாடு முழுவதும் குத்துச்சண்டை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துகிறார். அவர் என்ன செய்தாரோ அதனை ஏனைய பெண்கள் செய்வதற்கும் வழி சமைக்கிறார்.
தற்போது மொத்தம் 9 குத்துச்சண்டைப் பயிற்றுவிப்பாளர்களை முழுமையாக உருவாக்கியுள்ளார். இதில் கிறிஸ்டியா கைப்ரியானோ என்ற மாற்றுமத பெண்ணும் அடங்குவார். இவர் லண்டனில் தெற்குப் பகுதியில் சுயமாக தற்காப்புக் கலைப்பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார். “ஒரு பெண் தற்காப்புக்கலை பயிற்றுவிப்பாளரான என்னைப்பார்த்த பலரும் அதிர்ச்சியடைகிறார்கள். மேலும் ஒரு முஸ்லிம் பெண்ணிடமிருந்து தற்காப்புக்கலை பயின்றதைக் கேள்விப்பட்டு மேலும் வியப்படைகிறார்கள்” என 33 வயதுடைய கைப்ரியானோ தெரிவித்தார்.
சகோதரி ஸபாரியின் முயற்சியினாலும் அவருடைய கணவரின் ஒத்துழைப்பினாலும் அவரைப்போன்ற 9 பயிற்றுவிப்பாளர்கள் உருவாகியுள்ளனர். மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் (எம்.எம். ஏ) எனும் நிறுவனத்தின் கீழ் பலர் தமது பயிற்சிகளைத் தொடர்கின்றனர். விளையாட்டு மற்றும் தற்காப்புக்கலையில் பெண்களைச் சிறந்த முறையில் பயிற்றுவித்து பெரிய தற்காப்புக்கலைப் பள்ளியொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பதே ஸபாரியுடைய கனவாகும்.
-Vidivelli