மாகாணசபை தேர்தலை நடத்தும் வரையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதோடு அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் எதிர்ப்பு போராட்டங்களையும் பேரணிகளையும் முன்னெடுப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். ஜே.ஆர் எவ்வாறு தேர்தல்களை நடத்தாது காலத்தை கடத்தி தனது ஆட்சியை தக்கவைக்க நினைத்தாரோ அதேபோன்று ரணில் விக்கிரமசிங்கவும் செயற்பட்டு மக்கள் உறிமையை பறித்து வருக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாகாணசபை தேர்தல்களை கோரி எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
மாகாணசபை தேர்தலை பிற்போட நாம் அனுமதிக்க மாட்டோம். எந்த வகையிலேனும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து தேர்தலை நடத்த வைப்போம். மாகாணசபை தேர்தல் மூலமாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்த பின்னர் பிரதான கட்சிகளின் அரசியல் போட்டியை பார்த்துக்கொள்ள முடியும். அரசியல் நோக்கங்களுக்கான மக்களின் மீதான அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடாது. இன்று சில மாகாணசபைகள் கலைக்கப்பட்டு ஒரு வருடத்தையும் கடந்துள்ளது. அந்த மாகாணசபைகளின் கல்வி, சுகாதார, மக்களின் பொது பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த எவரும் இல்லாத நிலைமை உருவாகியுள்ளது. இதனை அரசாங்கம் ஏன் விளங்கிக்கொள்ள மறுக்கின்றது. இவர்கள் மாகாணசபை தேர்தலை நடத்தாது மக்களின் பிரச்சினைகளுக்கு மாற்று வழிமுறையாக எதனையும் கையாளவில்லை. தேர்தலை நடத்தாது தமது ஆட்சியை தக்கவைக்க ஐக்கிய தேசிய கட்சி என்ன முயற்சி எடுத்தாளும் அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்.
அன்று ஜே.ஆர் ஆட்சியில் தேர்தலை நடத்தாது ஜனநாயக உரிமையை அழித்ததை போலவே இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அதே தவறினை செய்கின்றார். ஜே.ஆர் வழியை பின்பற்றி சர்வாதிகார போக்கில் ஆட்சியை தக்கவைக்க முயற்சித்து வருகின்றார். அன்று செய்த தவறே 20 ஆண்டுகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கம் பலமடைய காரணமாக அமைந்தது. மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் மீது கொண்ட வெறுப்பு 20 ஆண்டுகளுக்கு நீண்டது. இப்போதும் ஐக்கிய தேசிய கட்சியே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்துகின்றது. ஆனால் இவை அரசியல் பழிவாங்கலாக இருக்கக் கூடாது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அனைவரும் இந்த நாட்டில் வாழும் அனைத்து இன, மொழி மக்களையும் பாதுகாக்க வேண்டும். அதனை ஐக்கிய தேசிய கட்சி விளங்கிக்கொள்ள வேண்டும்.
இவர்களுக்கு புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கி சர்வதேச வாக்குறுதிகளை காப்பாற்றுவதும், அதிகாரங்களை பரவலாக்கி தமிழ் தலைமைகளை திருப்திப்படுத்துவதும் மட்டுமே நோக்கமாக உள்ளது. ஆனால் வடக்கு கிழக்கு மக்கள் இன்று மாகாணசபை இல்லாது பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பிரதேசங்களின் அபிவிருத்திகள் கைவிடப்பட்டுள்ளது. இது இவர்களுக்கு தெரியவில்லை. இந்த அரசங்கம் உடனடியாக மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும், அதற்காக மக்களை இணைத்து போராட்டங்களையும், பேரணிகளையும் நடத்தவும் நாம் தீர்மானம் எடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli