அமெரிக்க – தலிபான் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

0 727

தெற்காசிய நாட்டில் இடம்பெற்றுவரும் 17 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் கத்தார் தலைநகர் தோஹாவில் தலிபான்களுடன் ஆறு நாட்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சமாதானத் தூதுவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை விட இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆக்கபூர்வமானவையாக அமைந்திருந்தன. மிக முக்கியமான பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினைக் கண்டுள்ளோம் என ஆப்கானிஸ்தான் நல்லிணக்கத்திற்கான அமெரிக்க விசேட பிரதிநிதி ஸல்மி காலிஸாட் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகளின் வெளியேற்றம் மற்றும் ஏனைய முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என தலிபான் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தையின்போது இஸ்லாமிய அமீரகத்தின் கொள்கை மிகத் தெளிவாக இருந்தது. ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகளின் வெளியேற்றம் என்கிற விடயம் ஏற்றுக்கொள்ளப்படாத வரை ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருக்கும் என தலிபான் பேச்சாளர் ஸபீஹுல்லாஹ் முஜாஹிட் தெரிவித்தார்.

யுத்த நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஊடகங்கள் வெளியிட்ட கருத்தினை தலிபான் மறுத்துள்ளது.

யுத்த நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், காபூல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் சில ஊடகங்களினால் வெளியிடப்பட்ட தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என முஜாஹிட் மேலும் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.