தாஜுதீன், லசந்த கொலை விவகாரம்: ஜனாதிபதியும் கோத்தாவும் இணைந்தே வழக்குகளை தடுக்கும் நடவடிக்கையில்
சபையில் ஆசு மாரசிங்க குற்றச்சாட்டு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவும் இணைந்தே இன்று வழக்குகளை தடுக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். யாருடைய வழக்கு எப்போது எடுக்க வேண்டும், யாரை காப்பாற்ற வேண்டும் என்ற அனைத்துமே அவர்கள் கையில் தான் உள்ளன. இவர்கள் இருவரும் நீதிமன்ற செயற்பாடுகளில் நேரடியாகத் தலையிடுகின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க சபையில் குற்றம் சுமத்தினார்.
தாஜுதீன், லசந்த கொலைகளை மறைக்க கோத்தாபய ராஜபக் ஷ மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து உண்மைகளை மூடி மறைக்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோத்தாவை உடனடியாகக் கைது செய்து குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை கடன் இணக்கம் தொடர்பிலான திருத்த சட்ட விவாதத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் இன்று சட்ட சுயாதீனம் இல்லாது போய்விட்டது. நீதி மன்றம் மீதும், சட்டத்துறை மீதும் அரச மாளிகையே நேரடியாக தலையிட்டு தீர்மானம் எடுக்கின்றது. இந்த வழக்குகளை எப்போது விசாரணைக்கு எடுக்கவேண்டும், யாரை காப்பாற்ற வேண்டும் என்ற காரணிகள் அனைத்துமே இன்று அரச மாளிகை தீர்மானிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. குறிப்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக் ஷவின் தலையீடுகளே முழுமையாக உள்ளதாக எம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக ஷவுமே இந்த தீர்மானங்களை எடுக்கின்றனர். இவர்களுக்கு சட்டத்தை கையில் எடுக்க எந்த அதிகாரமும் இல்லை. நீதி சுயாதீனத்தை கைப்பற்றி தமது தேவைக்கேற்ப இயக்க முடியாது. அரசாங்கம் என்ற வகையில் எமக்கே அதற்கான பொறுப்பு உள்ளது. சுயாதீனமாக சட்டம் செயற்பட வேண்டும். அதனை சகலரும் ஏற்றுகொள்ள வேண்டும்.
தாஜுதீன் கொலை, லசந்த கொலை வழக்குகள் எந்த நிலைமையில் உள்ளது என்பது எமக்கு நன்றாகவே தெரியும். லசந்தவின் மகளுடன் நான் பேசிக்கொள்கின்றேன் என லசந்த கொலை தொடர்பில் கோத்தாபய ராஜபக் ஷ கூறியுள்ளார். இது அவரை அச்சுறுத்தும் செயற்பாடு. ஆகவே முதலில் கோத்தாபய ராஜபக் ஷவை கைதுசெய்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட வேண்டும். இவர்கள் இன்று அரச மாளிகையில் அமர்ந்துகொண்டு குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி இன்று உலகம் சுற்றும் நபராக மாறிவிட்டார். அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பறந்துவிடுகின்றார். அவருக்கு இன்னும் நான்கோ ஐந்தோ மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்குள் தான் பார்க்க வேண்டிய நாடுகளை பார்த்துவிட வேண்டும் என நினைக்கின்றார் போல். அதேபோல் சர்வதேச ஒத்துழைப்புகளை பெற்றுக்கொண்டு தனது இருப்பினை தக்க வைக்க முயற்சித்தும் வருகின்றார் என்றே நினைக்கின்றேன். இவர்கள் அரச மாளிகைகளில் இருந்துகொண்டு செய்யும் நாசகார வேலைகளை நிறுத்த வேண்டும். சட்ட சுயாதீனத்தை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli