நாங்கள் இனவாதிகள் அல்லர். இனவாதத்தை தூண்டுவோர் யாரும் எம் மத்தியில் இல்லை. எமது நாட்டை துண்டாட முடியாது என்று நாட்டின் பிரிவினைக்கு எதிராகக் குரல் கொடுப்பதால் எம்மை இனவாதிகள் என்கின்றனர். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. நாட்டின் மீது நாம் அன்பு செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
பத்தரமுல்ல, படபொத்த ஸ்ரீ சுதர்சனாராம விகாரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
நாடு துண்டாடப்படுவதை எதிர்ப்பதற்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. பிரிவினைக்கெதிராக நாம் குரல் கொடுக்கும்போது இனவாதத்தைத் தூண்டுவதற்காகவே நாம் இவ்வாறான எதிர்ப்புகளை வெளியிடுவதாக எம்மீது குற்றம் சுமத்துகின்றனர்
இனவாதத்தை தூண்டும் வகையிலான மோசமானவர்கள் இன்று எம்மத்தியில் இல்லை. இன்று புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிலர் இது ஒரு சட்டமூலம் என்கிறார்கள். சிலர் இது ஓர் பிரேரணை மாத்திரமே என்கிறார்கள். அரசியல அமைப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் பெரும்பாலானவை நிபுணத்துவம் பெற்றவர்களால் சமர்ப்பிக்கப்பட்டவையல்ல. சுமந்திரனின் தலைமையில் எழுதப்பட்டவை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாங்கள் இனவாதிகள் அல்ல. நாட்டுப்பற்றுள்ளவர்கள். இது எமது நாடு என்ற உணர்வே எம்மிடம் உள்ளது. எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளது. புதிய அரசியலமைப்புக்கு முன்பு மக்களின் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்த வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் கூறியுள்ளார்கள்.
நாங்கள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததனாலேயே இன்று நல்லிணக்கத்தை முன்னெடுக்க முடியுமாக உள்ளது. நாங்கள் 30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வந்திருக்காது விட்டால் நல்லிணக்கம் என்ற பேச்சுக்கே இன்று இடம் இருந்திருக்காது. புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முதன்மையும் நாட்டின் ஒருமைப்பாடும் இல்லாமற் போகப்போகிறது. எனவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றார்.
-Vidivelli