மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரம்: தேடப்படும் பிரதான சந்தேகநபர்களின் தந்தைக்கு 72 மணி நேர தடுப்புக் காவல்
கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட விவகாரத்தில் தேடப்படும் பிரதான சந்தேகநபர்களான சகோதரர்களின் தந்தையான இப்ராஹீம் மெளலவி என அறியபப்டும் 50 வயதான ரஷீட் மொஹம்மட் இப்ராஹீம் கேகாலை, தீர்க்கப்படாத குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் இரவு 7.30 மணியளவில் கைது செய்யப்பட்ட அவர் நேற்று மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணா முன்னிலையில் ஆஜர் செய்யப்ப்ட்டார். இதன்போது அவரை 72 மணி நேரம் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரிக்க பொலிஸார் செய்த விண்ணப்பத்தை ஏற்ற நீதிவான் அதற்கு அனுமதியளித்தார்.
இந்நிலையில் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் நேரடிக் கட்டுப்பாட்டில் கேகாலை பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த சிறிவர்தனவின் மேற்பார்வையில், கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமிக்க பிரேமசிரியின் ஆலோசனைக்கமைய, கேகாலை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஓ.பி. அமரபந்துவின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்ட தீர்க்கப்படாத குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேரத்ன மற்றும் மாவனெல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தமித்த திலங்க ஆகியோர் அடங்கிய குழுவினர் தடுப்புக்காவலில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி மாவனெல்லை பொலிஸாரும், கேகாலை மாவட்ட தீர்க்கப்படாத குற்றங்கள் குறித்த விசாரணைப் பிரிவினரும், நீதிமன்றில் பெற்ற விஷேட உத்தரவுக்கமைய தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்தனர். கடந்த 2018 டிசம்பர் 26 ஆம் திகதி புத்தர் சிலையுடைப்பு விவகாரத்தின் போது மக்களால் பிடிக்கப்பட்ட சந்தேக நபருடன் வருகைதந்து தப்பிச்சென்ற பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் வசித்ததாகக் கூறப்பட்ட வீடே இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்ப்ட்டது. 21 ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அச்சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன.
சோதனைக்கு பொலிஸார் செல்லும் போதும் அங்கு வீடு பூட்டிக் கிடந்துள்ளது. பின்னர் குறித்த பிரதான இரு சந்தேக நபர்களான சகோதரர்களின் தந்தையை தொடர்புகொண்டுள்ள பொலிசார் அவரை வீட்டுக்கு அழைத்துள்ளனர். நாவலப்பிட்டியில் இருந்துள்ள அவர் அங்கு வந்ததும் வீட்டை திறந்து சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது அந்த வீட்டிலிருந்த பிரதான சந்தேக நபர் பயன்படுத்தியதாகக் கருதபப்டும் மோட்டார் சைக்கிள், தலைக் கவசம் ஆகியவற்றைக் கைப்பற்றிய பொலிஸார் பின்னர் வீட்டினுள் சோதனை நடாத்தினர். இதன்போது மேல் மாடியிலிருந்து அரிவாள் ஒன்று, இரும்பு சுத்தியல், பிளட் ஸ்குறூப் ட்ரைவர், கறுப்புநிற தலை மறைப்பு, கறுப்புநிற சப்பாத்து மற்றும் காலுறை, எயார் ரைபிள் ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் அடங்கிய மூன்று டின்கள், அவற்றை கொள்வனவு செய்தமை தொடர்பிலான பத்திரங்கள், 390 இறுவெட்டுக்கள், சிவப்பு நிற பொலித்தீனில் சுற்றப்பட்டிருந்த வெடிபொருள் என சந்தேகிக்கபப்டும் ஒருவகை வெள்ளைநிறத் தூள், மடிக் கணினி ஒன்று மற்றும் அதன் மின்னேற்றி, 13 பேரின் பெயர்களடங்கிய பட்டியல் உள்ளிட்ட ஆவணங்கள், இரு தொலைபேசிகள், 8 பென் ட்ரைவ்கள், வேறு ஒருவருக்கு சொந்தமான தேசிய அடையாள அட்டை, பல வங்கிகளின் இலத்திரனியல் பண கொடுக்கல் வாங்கல் அட்டை, 430 ரூபா பணம், மொட்டரோலா எனப்படும் தகவல் பரிமாற்ற உபகரணம் 2, மின் கலங்கள், கணினி ஒன்று, டிஜிட்டல் கமரா ஒன்று, அதற்கு பயன்படுத்தப்படும் மெமரி சிப் 3 உள்ளிட்ட உபகரணங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
இந்நிலையில் பிரதான சந்தேக நபர்களின் தந்தையை பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்ற பொலிஸார், அங்கு வைத்து அவரிடம் விசாரணை செய்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் அவரை குறித்த புத்தர் சிலை உடைப்பு விவகாரங்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்தனர்.
அதன்படியே நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் அவரை ஆஜர் செய்து தடுப்புக் காவலில் அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் அனுமதி பெற்றுக்கொண்டனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவினர் புத்தளத்தில் கைது செய்த நான்கு இளைஞர்களையும் தொடர்ந்து 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். குறித்த நபர்களுடன் வணாத்துவில்லுவில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள், அமிலங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் தொடர்பில் நாளைய தினம் சி.ஐ.டி.யினர் மாவனெல்லை நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
-Vidivelli