இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகளில் நேற்றுவரை 3400 பேர் தங்கள் பயணத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் உறுதிசெய்துள்ளனர்.
இவ்வருடம் ஹஜ் கடமைக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளுக்கு அது குறித்த கடிதங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15–20 ஆம் திகதிக்கிடையில் அனுப்பிவைக்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.ஆர்.எம்.மலீக் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஹஜ் கடமைக்காக தெரிவு செய்யப்பட்டவர் களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் எதிர்வரும் மார்ச் 6—17 ஆம் திகதிகளில் மாவட்ட ரீதியில் நடத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த விழிப்புணர்வு கருத்தரங்குகளில் சவூதி அரேபியாவின் சட்டதிட்டங்கள் பற்றியும் தெளிவுகள் வழங்கப்படவுள்ளன.
இவ்வருடம் ஹஜ் ஏற்பாடுகளுக்காக 92 ஹஜ் முகவர்கள் நியமனம் பெற்றுள்ளார்கள். 3500 ஹஜ் கோட்டா இவர்களுக்கிடையில் பகிரப்பட்டுள்ளன. ஹஜ் முகவர்களின் ஹஜ் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் இருவாரங்களில் பத்திரிகைகள் வாயிலாக விளம்பரப்படுத்தப்படவுள்ளன.
ஹஜ் கடமையை மேற்கொள்ளவுள்ளவர்கள் தாம் விரும்பும் முகவரைத் தெரிவு செய்து அவரூடாக பயணத்தை முன்னெடுக்க முடியும் என்றார்.
-Vidivelli