இந்தியாவின் இந்துத்வ தேசியவாத அரசாங்கத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக வெளியேறிக்கொண்டிருந்த 61 ரோஹிங்ய முஸ்லிம்கள் இந்தியாவின் திரிபுராவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
பங்களாதேஷிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இரண்டு நாடுகளின் எல்லைகளிலுமிருந்த அதிகாரிகள் இவர்களை என்ன செய்வதென்ற இணக்கத்திற்கு வராததன் காரணமாக கடந்த திங்கட்கிழமை 16 சிறுவர்கள், ஆறு பெண்கள் அடங்கிய இக்குழுவினர் இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பெரும்பான்மையான முஸ்லிம் ரோஹிங்யர்களை சட்டவிரோத வேற்றுக் கிரவாசிகள் என்றே இந்திய அரசாங்கம் கருதுகின்றது. இதுதவிர அவர்கள், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் காணப்படுவதால் நாடுமுழுவதும் அங்காங்கே குடிசைகளிலும், சேரிகளிலும் வாழும் ரோஹிங்யர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மியன்மாருக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியன்மாருக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் கடந்த சில வாரங்களாக 1,300 ரோஹிங்யர்கள் இந்தியாவிலிருந்து பங்களாதேஷுற்கு சென்றுள்ளனர்.
இறுதியாகச் சென்ற குழுவினர் மேற்குத் திரிபுரா மாவட்டத்தின் ராயெர்முரா இந்திய எல்லையில் அமைந்துள்ள கம்பி வேலியைக் கடந்து சென்றனர். எனினும் பங்களாதேஷ் எல்லைக் காவல் படையினர் அவர்களை நாட்டிற்குள் நுழையவிடாது தடுத்துவிட்டனர்.
இக்குழுவினர் நான்கு நாட்களாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடைப்பட்ட சூனியப் பிரதேசத்தில் தங்கியிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திரிபுராவின் தலைநகரான அகார்தலாவில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதோடு அவர்களை 14 நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-Vidivelli