வன்முறையில் ஈடுபட்டதாகவும் எதிர்ப்புணர்வைத் தூண்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் பாகிஸ்தான் நீதிமன்றமொன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
பஷ்துன் மனித உரிமை செயற்பாட்டாளரான அலாம்ஸெப் மெஹ்சூட் கடந்த திங்கட்கிழமை மாலை பாகிஸ்தானின் பெரிய நகரான கராச்சியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது தொடர்பான காணொலி பஷ்துன் தஹாப்புஸ் இயக்கத்தினால் பதிவு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
சனநெரிசல்மிக்க வீதியொன்றில் பொலிஸாரினால் இடைமறிக்கப்படும் மெஹ்சூடின் வாகனத்திலிருந்து வலுக்கட்டாயமாக அவர் கீழே இறக்கப்பட்டு கைது செய்யப்படுவதை காணொலி காண்பித்தது. ஒற்றைநிற ஆடை அணிந்திருந்த அடையாளம் தெரியாத நபரொருவர் மெஹ்சூடை நோக்கி துப்பாக்கியை காட்டுவதும் அதில் பதிவாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவரை நான்கு நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதென பஷ்துன் தஹாப்புஸ் இயக்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மொஹ்சின் டவார் தெரிவித்தார்.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் மற்றும் அதன் தோழமை அமைப்புக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய போரின்போது பாகிஸ்தான் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து பஷ்துன் தஹாப்புஸ் இயக்கம் டசின்கணக்கான பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது.
-Vidivelli