சிரியாவுடனான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக பிரதித் தூதுவர் ஒருவரை ஜோர்தான் நியமித்துள்ளது.
ஆலோசகர் தரத்திலுள்ள பெயர் வெளியிடப்படாத இராஜதந்திரியொருவர் டமஸ்கஸிலுள்ள ஜோர்தான் தூதரகத்தில் தனது கடமைகளை விரைவில் ஆரம்பிப்பாரென வெளிநாட்டமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு சிரியப் புரட்சி ஆரம்பித்ததிலிருந்து ஜோர்தான் கொண்டிருந்த கொள்கைக்கு அமைவாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு ஆரம்பித்த சிரிய யுத்தத்தினைத் தொடர்ந்து சிரியாவுடனான உறவுகளை துண்டித்திருந்த அரபு நாடுகள் தற்போது உறவுகளைப் புதுப்பிக்க ஆரம்பித்துள்ள நிலையில் பஷார் அல்-அசாத் அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்த முனைப்புக் காட்டுகின்றன.
கடந்த மாதம், ஏழாண்டுகளின் பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் டமஸ்கஸில் தனது தூதரகத்தை மீளத் திறந்தது. அதேவேளை, 2011 ஆம் ஆண்டு அரபு லீக்கிலிருந்து நீக்கப்பட்ட சிரியாவை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பஹ்ரைனும் சிரியத் தலைநகரில் தனது தூதரகத்தை மீளத் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றது.
சிரியாவுக்கு முதன் முதலாக விஜயம் செய்த அரபுத் தலைவர் சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் ஆவார். அவர் கடந்த டிசம்பர் மாதம் டமஸ்கஸுக்கு விஜயம் செய்திருந்தார்.
அசாத்தின் படையினருக்கு எதிராகப் போரிட்ட சில கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவளித்த ஜோர்தான், கடந்த 2011 இல் தனது தூதுவரைத் திருப்பி அழைத்திருந்த போதும், முற்றுமுழுதாக இராஜதந்திரத் தொடர்புகளைத் துண்டித்திருக்கவில்லை.
கடந்த சில மாதங்களாக முன்னேற்றகரமாக சமிக்ஞைகள் தென்பட்டு வருகின்றன. கடந்த ஒக்டோபர் மாதம் மூன்று வருடங்களாக மூடப்பட்டிருந்த சிரியாவுடனான எல்லைக் கடவையினை ஜோர்தான் மீளத் திறந்தது. இந்த வழியாக மில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான வர்த்தக நடவடிக்கைகள் வருடாந்தம் நடைபெற்று வந்தன.
கடந்த நவம்பர் மாதம் ஜோர்தான் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழுவொன்று டமஸ்கஸுக்கு விஜயம் செய்து அசாத்தை சந்தித்தது. இதன்போது உறவுகளை மேம்படுத்துவற்கான வழிவகைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
-Vidivelli