கிழக்கு காஸாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 24 வயதான மஹ்மூட் அல்-நபாஹின் என்பவரே சம்பவத்தில் கொல்லப்பட்டவர். இதில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதோடு, அவர்களுள் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாகக் காணப்படுகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கி ரவையொன்று இஸ்ரேலிய படைவீரர் ஒருவரின் தலைக்கவசத்தைத் தாக்கியதால் அவர் காயமடைந்ததை அடுத்து சற்று நேரத்தில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திலிருந்தே துப்பாக்கி ரவை வந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
காஸா பள்ளத்தாக்கினை நிருவகித்து வருகின்ற ஹமாஸ் அமைப்பிற்கு சொந்தமான கண்காணிப்புச் சாவடியினை இலக்கு வைத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்திருந்தது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடக்குப் பிரதேசத்திலிருந்து வந்த துப்பாக்கித் தாக்குதலுக்குப் பதிலடியாகவே அது இடம்பெறுவதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
எகிப்தின் மத்தியஸ்தத்துடன் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான யுத்தநிறுத்தம் அண்மைய வாரங்களில் ஒப்பீட்டு ரீதியில் பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தியிருந்தது.
காஸாவில் மாறுவேடமிட்டு வந்து இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதையடுத்து இஸ்ரேல் மீது பலஸ்தீனப் பிரிவொன்றினால் எரிகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் வான்வழியாக இரண்டு நாட்கள் மேற்கொண்ட தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்த உடன்படிக்கை வடிவமைக்கப்பட்டது.
இரு தினங்களிலும் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக குறைந்தது 14 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு, இரண்டு இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
-Vidivelli