நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாத நடவடிக்கைக்கு முஸ்தீபா?
அரசாங்கத்தின் முன்னெடுப்பு என்ன என விமல் கேள்வி
மாவனெல்லை மற்றும் புத்தளம் சம்பவங்களின் மூலமாக நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாத நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றமை தெரிகின்றது. இதனை தடுப்பதற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்புகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய விமல் வீரவன்ச எம்.பி., அண்மையில் மாவனெல்லை சிலை உடைப்பு சம்பவம் குறித்து அப்பகுதியில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் தேடப்படும் நிலையில் அவர்களின் தந்தையின் வீட்டில் ஆயுதங்கள் மற்றும் ஏனைய சாதனங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் புத்தளம் பகுதியில் ஒரு காணியில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த செயற்பாடுகள் சில சர்வதேச நாடுகளின், சர்வதேச அமைப்புகளின் ஆதரவுடன் இந்த நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாத நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றமை இதன் மூலமாகத் தெரிகின்றது. இது மிகவும் மோசமான செயற்பாடாகும். இந்த சம்பவங்கள் குறித்து அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணை தகவல்களை சபைக்கு அறியத்தர வேண்டும். இந்த நாட்டில் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் அமைதியாக வாழ விரும்புகின்றனர். அவ்வாறிருக்கையில் இவ்வாறான செயற்பாடுகள் அவர்களையே பாதிக்கும் வகையில் அமையும், ஆகவே அரசாங்கம் இதுகுறித்து எமக்கு அறியத்தர வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த சபை முதல்வர் லக் ஷ்மன் கிரியெல்ல:- முறையான விசாரணைகளை முன்னெடுத்த காரணத்தினால் தான் உண்மைகள் வெளிவந்துள்ளன. விமல் வீரவன்சவின் கேள்வியிலேயே எமது விசாரணைகள் சரியாக இடம்பெற்று வருகின்றன என்பது உறுதியாகியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
இதன்போது மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய விமல் வீரவன்ச எம்.பி:- விசாரணைகள் சரியாக முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை எம்மால் கூற முடியாது, எனினும் பொலிஸ் இதுகுறித்து கூறும் காரணிகளை விடவும் மோசமான தன்மைகள் இன்று நிலவுவதாக எமக்கு அறிய முடிகின்றது. ஆகவே, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்ற காரணத்தை கூறி மழுப்பாது இதன் ஆரம்பம் என்ன, யார் உள்ளனர் என்ற காரணிகளை கண்டறியுங்கள். கிழக்கிலுள்ள ஒரு அரசியல்வாதியின் தலையீட்டினால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவருகின்றது. ஆகவே இந்த பிரச்சினை குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
-Vidivelli