மாவனெல்லை, புத்தளம் சம்பவங்களை வைத்து இனவாத அரசியல் செய்யவேண்டாம்
பாராளுமன்றில் எதிரணியினரை சாடியது ஆளும் தரப்பு
மாவனெல்லை மற்றும் புத்தளம் பகுதிகளில் ஆயுதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை காரணமாக வைத்துக்கொண்டு பெளத்த காவிவாதிகள் சிலரும் அவர்களுடன் இணைந்த அமைப்பினர் சிலரும் மாவனெல்லை பிரதேசத்தில் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரச தரப்பினர் நேற்று சபையில் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எனினும் இந்த நாட்டினை தீவைக்கும் நோக்கத்தில் அரசியல் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது எனவும் அரச தரப்பினர் சபையில் சுட்டிக்காட்டினர்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய விமல் வீரவன்ச எம்.பி., அண்மையில் மாவனெல்லை மற்றும் புத்தளம் பகுதிகளில் ஆயுத மீட்பு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார். அதன்போதே ஆளும் தரப்பினர் இவ்வாறு கருத்து வெளியிட்டனர்.
சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல:
முறையான விசாரணைகளை முன்னெடுத்த காரணத்தினால் தான் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன. விமல் வீரவன்சவின் கேள்வியிலேயே எமது விசாரணைகள் சரியாக இடம்பெற்று வருகின்றன என்பது உறுதியாகியுள்ளது. விசாரணைகள் முறையாக நடைபெறுகின்றன. ஜனாதிபதிக்கு இந்தப் பிரச்சினை குறித்து தெரியப்படுத்துகிறேன் என்றார்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி:
இந்த விவகாரம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை அரசியலாக்க வேண்டாம். இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சு வெகு விரைவில் விசாரணைகளை நடத்தி தெரியப்படுத்த வேண்டும். நாமும் அதனையே கேட்டுக்கொள்கின்றோம். ஆனால் இதனை வைத்து இனவாத அரசியல் செய்ய வேண்டாம். எது நடந்தாலும் இனவாதம் பேசுவதை கைவிடுங்கள் என்றார்.
பிரதி அமைச்சர் நளின் பண்டார:
இந்த சம்பவங்களை வைத்துக்கொண்டு இனவாதம் பேச வேண்டாம். இலங்கையில் சிங்கள வீட்டில் ஆயுதம் கிடைத்தாலும், தமிழர் வீட்டிலோ அல்லது முஸ்லிம் வீடுகளில் ஆயுதம் கிடைத்தாலும் அது குற்றமே. இந்த சம்பவத்தை அடுத்து இவ்வாறான சம்பவங்களுக்கு அடிப்படையாக வைத்து மாவனெல்லை பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிய வருகின்றது. இவற்றை சட்டத்தின் மூலமாக தீர்த்துக்கொள்ள வேண்டும். நாடு குறித்து சிந்திக்க வேண்டும். நாட்டினை தீவைப்பதா அல்லது சட்டத்தின் மூலமாக கையாள்வதா என நாம் சிந்திக்க வேண்டும்.
அரசியல் பின்னணியில் தேரர்கள் சிலரும் வேறு சில அமைபினரும் இணைந்து மாவனெல்லையில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகத் தெரிய வருகின்றது. இந்தப் பாராளுமன்றத்தில் சிலர் வெள்ளை ஆடையில் இருந்தாலும்கூட கள்ளத்தனமாகப் புத்தங்களை அச்சடித்த நபர்களும் உள்ளனர். ஆகவே இவர்களுக்கு இனவாத கொள்கை மட்டும் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
-Vidivelli